Wednesday, June 1, 2011

இது அழகா? அழிக்கப்படும் சுவரோவியங்கள்


உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது, கோவை மாநகர சாலையோர சுவர்களில் தமிழர் பாரம்பரியம், வாழ்க்கை முறை, கலாசாரத்தை புதிய தலை முறையினருக்கும் புரிய வைக்கும் வகையில், அழகுமிகு ஓவியங்கள் வரையப்பட்டன. ரசிக் கும்படியான ஓவியங்களை அதி. மு.க.,வினர் அழித்து, அரசியல் விளம்பரங்களால் அலங்கோலமாக்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில், கோவை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. செம்மொழி மாநாட்டுக்காக உற்சாகமாக கோவை தயாராகிக் கொண்டிருந்தது. சாலை மேம்பாடு, பாலங்கள் விரிவாக்கம், நடைபாதை, புதிய விளக்குகள், பூங்காக்கள் என கோவை நகரிலும், நகரைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் 400 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடந்தன. பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள், ஒரே ஆண்டில் சில மாதங்களில் வேக, வேகமாக நடந்தன. செம்மொழி மாநாடு, எந்த காரணத்துக்காக நடத்தப்பட்டிருந்தாலும் அதனால் கோவை நகரம் பயன் அடைந்ததை யாராலும் மறுக்க முடியாது. அந்த மாநாட்டுக்காக, தனியார் தொழில் அமைப்புக்குச் சொந்தமான இடத்திலும் தனியாரிடத்திலும் நடந்த மேம்பாட்டுப் பணிகள் சர்ச்சைக்குரியவை. ஆனால், நகரை அழகுபடுத்த அப்போதைய தி.மு.க., அரசு எடுத்த முயற்சிகள் பலராலும் வரவேற்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகத்தான் கோவை நகரிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சுவர்களிலும், தனியார் சுவர்களிலும் சங்க இலக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. தற்காலத் தலைமுறைக்கு நமது மண்ணின் மகிமையையும், கலைகளின் மேன்மையையும் விளக்கிய அந்த ஓவியங்களில் அரசியல் சார்புடைய எந்தக் குறிப்புகளும் இடம் பெறவில்லை. உதாரணமாக, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களைப் பற்றிய ஓவியங்கள் பல இடங்களில் வரையப்பட்டு, தமிழ் நிலங்களைப் பற்றிய தகவல்களை தற்போதுள்ள இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறின.


அவை அழகாக இருந்தன என்பதை விட, அந்தச் சுவர்களை அசிங்கப்படாமல் பாதுகாக்கவும் உதவின. அது மட்டுமின்றி, நகரம் முழுவதும் கட்டுப்பாடின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்டன. ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., ஆட்சியின் தடயங்களை அழிப்பதற்கான முயற்சியாக, செம்மொழி மாநாட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் அ.தி.மு.க.,வினரால் அழிக்கப்படுகின்றன. வடகோவை மேம்பாலத்தில் இருந்த ஓவியங்கள் அழிக்கப்பட்டு, அங்கு முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்துவதாக அரசியல் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதேபோல, நகரின் பல பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் சுவர்களில் அ.தி.மு.க.,வினரின் வாழ்த்து விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன. அத்துடன், கட்டுப்பாடற்ற வகையில், "பிளக்ஸ் பேனர்'களும் விதிகளை மீறியும், அனுமதியின்றியும் வைக்கப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்தவுடன், வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், புதிய ஆட்சிக்கு வாழ்த்துச் சொல்வதற்காகவும் வைக்கப்பட்ட இந்த பிளக்ஸ் பேனர்களில் பெரும்பாலானவை அகற்றப்படவே இல்லை. அதையும் விட, அமைச்சர் வேலுமணியை வரவேற்று வைக்கப்பட்ட "பிளக்ஸ் பேனர்'களின் எண்ணிக்கையும், அதன் பிரமாண்டமும் ஜெ.,பிறந்த நாள் விழாவுக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களையும் மிஞ்சுவதாக இருந்தன.


மிகவும் குறுகலான ஆத்துப்பாலம்-உக்கடம் ரோட்டிலும் கூட, ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அகற்றுவதற்கு காவல்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் முன் வராத நிலையில், இவற்றால் ஏராளமான சிரமங்கள் ஏற்படுகின்றன. இப்போதே இப்படி என்றால், இனி வரும் நாட்களில் இந்த விதிமீறல் எந்த அளவுக்குப் போகுமோ என்ற பயம், கோவை மக்களிடம் இப்போதே எழுந்து விட்டது. அரசியல் சுயலாபத்துக்காக செம்மொழி மாநாட்டை நடத்தியதாகக் குற்றம்சாட்டும் அ.தி.மு.க.,வினர், அதனால், நகருக்குக் கிடைத்த நன்மைகளை நினைவு கூர்ந்து, அதையும்விட தங்களது ஆட்சிக்காலத் தில் கோவை நகருக்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும், நகரை அழகுபடுத்தவும் முயற்சிகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து, நகரை அலங்கோலமாக்குவது சரியல்ல என்பது மக்களின் கருத்து. கலையும் கனவுகள் : தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தையும், சமச்சீர் கல்வியையும் புறக்கணித்த அ.தி.மு.க., அரசு, கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு, இன்னும் பணிகளே துவங்காத செம்மொழிப் பூங்கா, காந்திபுரம் பல அடுக்கு மேம்பாலங்களை அமைப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஒரு வேளை பாலம் கட்டப்பட வாய்ப் பிருந்தாலும், சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா என்பது கலைந்து போன கனவுதான்.