Friday, September 30, 2011

உள்ளாட்சியில் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்: விஜயகாந்த்
பெரம்பலூர்: விஜயகாந்த் தனியாக வந்து பேசுவதாக நினைக்காதீர்கள். தெய்வம் எப்போதும் நேரில் வராது. மக்கள் ரூபத்தில் தான் வரும். கடந்த சேலம் மாநாட்டில் கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்டுத்தான் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி அமைத்தேன். இப்போதும் தெய்வத்தோடும், மக்களோடும் தான் கூட்டணி அமைத்துள்ளேன். இன்னைக்கு நான் வருத்தப்படல


. இன்னைக்கு தே.மு.தி.க.,வை நம்பி மா.கம்யூ., இ.கம்யூ., நம்பி வந்தாங்க அவுங்கல கூட்டணியில சேர்த்துக்கிட்டோம். ஏனென்றால் நம்பினார் கெடுவதில்லை. என்னால் முடிந்ததை நான் போராடுவேன். இதில் என் கட்சி தொண்டருக்கும் பங்குண்டு. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிறது. மக்களிடம் வீட்டுவரி சொத்துவரி போன்ற பல்வேறு வரிகள் வசூல் செய்கின்றனர். ஆனால் இன்னும் ரோடு பிரச்சனை குடிநீர் பிரச்சனை, பஸ் பிரச்சனைகள் எல்லாம் உள்ள

து. அதைப்பற்றி உள்ளாட்சி கவுன்சிலர்கள் யாரும் கவலைப்படவில்லை. நல்ல முட்டையா என்று தண்ணீரில் போட்டு பார்க்கிறீங்க கத்தரிக்காய், வெண்டைக்காய், மீன் போன்றவற்றை நல்லதா என பார்த்து பார்த்து வாங்குறீங்க உள்ளாட்சி பதவி 5 ஆண்டுக்கு உள்ளது எனவே உங்களை பாதுகாக்குற ஒரு ஆட்சியை

தேர்ந்தெடுங்க. என்னோட கவுன்சிலர லஞ்சம் வாங்க விடமாட்டேன். நான் மீண்டும் வருவேன். வந்து மக்களுக்கு நல்ல செய்றாங்களான்னு பார்ப்பேன். பெரம்பலூர் மாவட்டத்துல பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. உள்ளாட்சி நிதியை வீணடிக்கிறாங்க. மக்களை ஏமாத்துறாங்க. இதுபோல 60 வருசமா மக்களை ஏமாத்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். நான் காசுக்கு அடிமையாக மாட்டேன். என்னை காசு கொடுத்து யாரும் விலைக்கு வாங்க முடியாது.

எனக்கு ஓட்டுபோட்டு ஜெயிக்கவைத்தீர்கள். நான் எப்போதும் நன்றி மறக்கமாட்டேன். நான் தனியாக வருவேன் நேற்று தே.மு.தி.க.,வுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.,க்கள். நாளை நீங்கள்தான் முடிவு செய்யனும். மக்களுக்காக விஜயகாந்த் வாழ்தான் என சரித்திரம் எழுதனும். எழுத வைப்பேன். தமிழகத்தில் 67 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் இளைஞர்களுக்காக கல்லூரி துவங்குகிறேன் என பல கல்லூரிகள் துவங்க அனுமதிதாராங்க. ஆனால் காசு வாங்கி கொண்டுதான் கல்லூரியில் சீட் கொடுக்கின்றனர். சாதி கட்சிகள் இரண்டும் இன்று திராவிட கட்சிகளோடு இணைந்து காசு சம்பாதித்துவிட்டு இன்று திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் தேவையில்லை என்று கூறுகின்றனர். டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கூறும் ஒரு சாதி கட்சி தலைவர் அவரது கட்சியில் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை. என்னோட மக்கள தூண்டுவிட்டு சண்டைப்போட விடாதீங்க. சாதியை பற்றி பேசாதீர்கள். நான் கட்சி ஆரம்பிச்சப்ப 71வது கட்சி சொன்னார்கள் இப்போது 7வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் 1வது கட்சியாகிவிட்டது. உள்ளாட்சியில் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பாருங்கள். எங்களை வெற்றி பெற வைத்தால் தவறுகள் நடக்காது. எத்தனை காலம் தான் நீங்கள் ஏமாந்து கொண்டிருப்பது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் வராது. எனவே தே.மு.தி.க., கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பீர். இவ்வாறு அவர் பேசினார்.


Wednesday, September 28, 2011

"தனியாக பேச இது நேரமல்ல': அழகிரியை "டபாய்த்த' தேர்தல் அலுவலர்


மதுரை : ""சுவரில் வரைந்துள்ள ஜெ., மற்றும் விஜயகாந்த் படங்களை நீங்கள் அழிக்கவில்லையென்றால், நாங்கள் அழிப்போம்,'' என, தேர்தல் அலுவலரை மத்திய அமைச்சர் அழகிரி எச்சரித்தார்.


மதுரையில், மாநகராட்சி மேயர் வேட்பு மனு தாக்கலுக்கு, வேட்பாளருடன் அழகிரி வந்தார். தேர்தல் அலுவலர் நடராஜனின் அறையில் நுழைந்ததும், அங்கிருந்த நிருபர்களை வெளியில் இருக்குமாறு அழகிரி கூறினார்.


தேர்தல் அலுவலர், ""நிருபர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம்; அவர்கள் இருக்கட்டும்,'' என்றார்.


""உங்களிடம் தனியாக பேச வேண்டும்,'' என, அழகிரி கூறியதற்கு, ""தனியாக பேச இது நேரமல்ல, பின்னர் கட்டாயம் பேசலாம்,'' என்றார் நடராஜன்.


""தேர்தல் விதிமீறல் குறித்து நாங்கள் கூறிய புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?'' என, அழகிரி கேட்டார்.


""படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறேன்,'' என, நடராஜன் பதிலளித்தார்.


""சிம்மக்கல், சேதுபதி ஸ்கூல், ஜங்ஷன் பகுதியில் ஜெ., மற்றும் விஜயகாந்த் படங்களை வரைந்துள்ளனர். அதை அழித்து விடுங்கள்; இல்லையென்றால் நாங்கள் அழிப்போம்,'' என, எச்சரித்து விட்டு வெளியேறினார்.


நிருபர்களிடம் அவர் கூறுகையில்,""அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. சுவரில் வரைந்துள்ள படங்களை அழிக்கவில்லையென்றால், நாங்களும் வரைவோம்,'' என்றார்.


"தினமலர்' எங்கே : தேர்தல் அலுவலர் முன்னிலையில், நிருபர்களை பார்த்த அழகிரி, ""எல்லோரும் பார்த்துக்கோங்க, நாங்க ஐந்து பேர் தான் வேட்புமனுதாக்கல் செய்ய வந்துருக்கோம். நேற்று அ.தி.மு.க., மனுத்தாக்கலில் எத்தனை பேர் பங்கேற்றார்கள் என பார்த்தீர்களா? "தினமலர்' எங்கே? "தினமலர்' சார்பில் யாரும் வந்துருக்கீங்களா? முறைப்படி ஐந்து பேர் தான் வந்துருக்கோம்ணு கட்டாயம் செய்தி போடுங்க,'' என்றார். வெளியில் வந்ததும் கேள்வி கேட்டு பின்தொடர்ந்த பிற நிருபர்களிடம், ""அ.தி.மு.க., விதிமீறலை எழுதமாட்றீங்க; நாங்க என்ன செய்தாலும் உடனே எழுதுறீங்க,'' எனக்கூறி கிளம்பினார்.

Tuesday, September 20, 2011

கூட்டணியில் சேர தே.மு.தி.க., தீவிர முயற்சி: தனித்து போட்டியிட நிர்வாகிகள் தயக்கம்


தமிழக உள்ளாட்சித் தேர்தலில், .தி.மு.., கூட்டணியிலிருந்து, தே.மு.தி.., கழட்டி விடப்படும் நிலை உருவாகியுள்ளதால், தே.மு.தி.., தொண்டர்களும், நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனித்தோ, காங்கிரசுடன்சேர்ந்தோ போட்டியிடுவதை விட, .தி.மு..,வுடன் சமரசமாக போகவே, தே.மு.தி.., முக்கிய நிர்வாகிகள் விரும்புகின்றனர்.


நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 29 இடங்களை கைப்பற்றி, தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக அமைந்தது.சட்டசபைத் தேர்தலில் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலில், கிளை நிர்வாகிகள் வரை போட்டியிட வாய்ப்பு அளித்து, அவர்களை திருப்தி படுத்தும் நிலைபாட்டை, தே.மு.தி.க., தலைமை எடுத்திருந்தது.இதனாலேயே உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை, பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும், எவ்வித எதிர்ப்பு குரலும் இல்லாமல், அமைதி காத்து வந்தது.தமிழகத்தில் உள்ள, 10 மேயர் பதவிகளில், இரண்டு முதல் நான்கு வரையும், அனைத்து பதவிகளிலும், 30 சதவீதம் வரை சீட்களை கேட்டுப்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், தே.மு.தி.க.,வினர் இருந்தனர். இதன் மூலம், கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு, தோல்வியடைந்த நிர்வாகிகளை திருப்திபடுத்தவும் திட்டமிட்டிருந்தது.


ஆனால், அதற்கு பயனில்லாமல், தன்னிச்சையாக, அ.தி.மு.க., சார்பில், மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.அதன் பின் நடத்திய பேச்சுவார்த்தையிலும், மிக சொற்பமான இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள தே.மு.தி.க., நிர்வாகிகள், தனித்து போட்டியிடுவது அல்லது மற்ற கட்சிகளை சேர்த்து மூன்றாவது அணியில் போட்டியிடுவதா என்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறது.


ஆனால், தனித்து போட்டியிடுவதற்கு, தே.மு.தி.க., நிர்வாகிகள் தயக்கம் காட்டுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சட்டசபைத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கட்சி ரீதியாக மக்களை கவரும் வகையில், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், தனித்து போட்டியிட்ட போது இருந்த செல்வாக்கிலும், தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது.தி.மு.க., - காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடும் போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தால், 90 சதவீதத்துக்கும் மேலான இடங்களை கைப்பற்றிவிடலாம் என, தே.மு.தி.க.,வினர் எண்ணுகின்றனர்.இத்தனை நாட்கள், "அமைதி காத்து' வந்ததை எடுத்துக்கூறி, அ.தி.மு.க., கூட்டணியில் கூடுதல் சீட்களை பெற, தே.மு.தி.க., நிர்வாகிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.


மாவட்ட செயலர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் : விஜயகாந்த்திடீர் உத்தரவு: ""அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அதை சந்திப்பதற்கு மாவட்டச் செயலர்கள் தயாராக இருக்க வேண்டும்,'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.


அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தே.மு.தி.க., மாவட்டச் செயலர்களின் கூட்டம், சென்னை கோயம்பேடில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், பொறுப்பாளர்கள் என, 80க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த ரகசிய கூட்டம் குறித்து பத்திரிகைகள், மீடியாக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகள், கார்களில் வர வேண்டாம்; ஆட்டோக்களில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் கட்சி அலுவலக வாசலில், கார் உள்ளிட்ட வாகனங்களை யாரும் நிறுத்த வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. வெளியாட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க, கறுப்பு நிற ஆடை அணிந்த தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: கட்சி அலுவலகத்தில் நடக்கும் ரகசிய கூட்டங்களின் விவரம் கூட, பத்திரிகைகளுக்கு தெரிந்து விடுகிறது. இதற்கு கட்சி நிர்வாகிகள் தான் காரணமாக இருக்கின்றனர். நீங்கள்(கட்சி நிர்வாகிகள்) அளிக்கும் தகவலை வைத்து தான், அவர்கள் செய்திகளை வெளியிடுகின்றனர். இது நமக்குத் தேவையா என்பதை சிந்திக்க வேண்டும். இதே போன்று தொடர்ந்து நடந்தால், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டியிருக்கும்.கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, அதற்கேற்ற வகையிலான மன நிலையை மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.


வரும் 25ம் தேதி, கோவையில் நடக்கவுள்ள கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டத்தை வெற்றி பெற வைக்க, அனைவரும் உழைக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும் இப்போதில் இருந்தே கவனிக்க வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Tuesday, September 13, 2011

ப.சிதம்பரம் ஒரு பொய்யர்: போட்டு தாக்குகிறார் ஹசாரே


புதுடில்லி: ஊழலுக்கு எதிராக போராட முன்வரும் காங்கிரஸ், பா.ஜ. அல்லாத எந்த ஒரு கட்சி அல்லது இயக்கத்திற்கும் ஆதரவு கொடுக்கத் தயார் என்றும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு பொய்யர் என்றும் காந்தியவாதி அன்னா ஹசாரே கூறினார். ஊழலுக்கு எதிராக 12 நாட்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற பின் முதன்முறையாக தனியார் டி.வி.‌சானல்ஒன்றிற்கு காந்தியவாதி அன்னா ஹசாரே அளித்த பேட்டி,

நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற ஒரே வழி ஊழலுக்கு எதிராக வலுவான ஜன்லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது தான். ஜன்‌லோக்பால் சட்டத்திற்கு எதிராக இருக்கும் எம்.பி.க்கள் யாராக இருந்தாலும் அவர்களின் வீட்டிற்கு முன்பு பஜனை பாடி போராட்டம் நடத்த எனது ஆதரவாளர்களுக்கு ஏற்க‌னவே நான் உத்தரவிட்டுள்ளேன். அது மட்டுமின்றி அந்த ஜன்லோக்பால் சட்டத்தை எதிர்க்கும் எம்.பி.க்கள் போட்டியிடும் தொகுதி முழுவதும் சென்று அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என வாக்காளர்களை வலியுறத்த சொல்லியுள்ளேன்.

பிரதமராக உள்ள மன்மோகன்சிங்கிற்கு அமைச்சர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. எனினும் அவ‌ரது பேச்சை எந்த அமைச்சர்களும் கேட்பதில்லை. மாறாக ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களை பிரதமராக நினைத்து கொண்டு தனி ஆவர்த்தனம் செய்கின்றனர். பிரதமர் தற்போது அமைச்சர்களின் ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படுகிறார். மத்திய அமைச்சர் சிதம்பரம் ஒரு பொய்யர். ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை சாகும்வரை சிறையில் வைக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிராக போராட முன்வரும் காங்கிரஸ், பா.ஜ. அல்லாத எந்த கட்சிக்கும், இயக்கத்திற்கும் ஆதரவு தருவேன். ஆனால் அந்த இயக்கத்திற்கு நான் தலைவராக வர விரும்பமாட்டேன். ஏழைகள் நலனில் மிகவும் அக்கறை கொண்ட பிரதமர்களில் முன்னாள் பிரதமர் இந்திரா தான் சிறந்தவர். எங்களது போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லலை. இதை காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்துவருகின்றனர். வரப்போகும் எந்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். ஊழலை நாட்டை விட்டு விரட்டுவது தான் என நோக்கமே தவிர வேறு ஒன்றுமி்ல்லை.பாராளுமன்றத்தின் நிலைக்குழுவில் பரிசீலனையில் உள்ள ஜன்லோக்பால் மசோதா நிறைவேறும் வரை ஓயமாட்டேன். மீண்டும் எனது போராட்டத்தை துவக்குவேன். இவ்வாறு ஹசாரே கூறினார்.

ரோஜப்பூ ‌கொடுத்து பிரசாரம்: ஊழலுக்கு துணைபோக வேண்டாம் என கூறி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு சென்ற அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், வெள்ளை குல்லாய் அணிந்து , தங்களை அன்னா ஹசாரேயின் ஆதரவாளர் கூறி அறிமுகப்படுத்தி கொண்டு அங்கு பணியாற்றிவரும் அரசு அதிகாரிகளிடம் ஊழலுக்கு துணை போக வேண்டாம், ஊழலை ஒழிக்க ஒத்துழைப்பு கொடுங்கள் என வலியுறுத்தி அவர்கள் கையில் ஒரு ரோஜாப்பூவை கொடுத்து ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.