Friday, June 22, 2012

போதையில் ரோட்டில் விழுந்த பாகன்: எழும் வரை காவலாக இருந்த யானை

அடூர்: கேரளா, கடம்பநாடு அருகே, இளம்பல்லூர் கோவிலுக்குச் சொந்தமான கணேசன் என்ற யானையை, பாகன் மைதீன், 35, என்பவர் பராமரித்து வந்தார். அவர் நேற்று முன்தினம், யானையை கடம்பநாடு பகுதிக்கு கொண்டு சென்றார். அப்போது, பாகன் மைதீன், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தார். யானையுடன் அவர் கணேசவிலாசம் பகுதி அருகே சென்றபோது, போதை அதிகமாகி, நடுரோட்டில் மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த யானை அதிர்ச்சி அடைந்து, தன் தும்பிக்கையால் பாகனை எழுப்ப முயற்சித்தது. பல முறை முயன்றும், அவர் எழாமல் போகவே, யானை அவருக்கு காவலாக இரண்டரை மணி நேரம் நடுரோட்டிலேயே நின்றது. யானை நடுரோட்டில் நிற்பதையும், பாகன் ரோட்டில் விழுந்து கிடப்பதையும் அவ்வழியே வாகனங்களில் வந்தவர்கள் பார்த்தனர். சிலர், யானை அருகே சென்றனர். அப்போது, பாகன் சற்று அசையவே, அவர் இறக்கவில்லை என்பதும், போதையில் விழுந்து கிடப்பதையும் அவர்கள் ஊகித்தனர். இதையடுத்து, வாளியில் தண்ணீர் எடுத்து வந்து, அவர் மீது ஊற்றினர். சிறிது நேரத்திற்கு பிறகு பாகன் மெதுவாக எழுந்தார். அருகே உள்ள மரத்தில் யானையை கட்டிப் போட்டார். மது அருந்தி, சாலையில் விழுந்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாகன் மைதீன் மீது, போலீசார் வழக்குபதிவு செய்தனர்.


நன்றி  


தினமலர்