Tuesday, September 20, 2011

கூட்டணியில் சேர தே.மு.தி.க., தீவிர முயற்சி: தனித்து போட்டியிட நிர்வாகிகள் தயக்கம்


தமிழக உள்ளாட்சித் தேர்தலில், .தி.மு.., கூட்டணியிலிருந்து, தே.மு.தி.., கழட்டி விடப்படும் நிலை உருவாகியுள்ளதால், தே.மு.தி.., தொண்டர்களும், நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனித்தோ, காங்கிரசுடன்சேர்ந்தோ போட்டியிடுவதை விட, .தி.மு..,வுடன் சமரசமாக போகவே, தே.மு.தி.., முக்கிய நிர்வாகிகள் விரும்புகின்றனர்.


நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 29 இடங்களை கைப்பற்றி, தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக அமைந்தது.சட்டசபைத் தேர்தலில் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலில், கிளை நிர்வாகிகள் வரை போட்டியிட வாய்ப்பு அளித்து, அவர்களை திருப்தி படுத்தும் நிலைபாட்டை, தே.மு.தி.க., தலைமை எடுத்திருந்தது.இதனாலேயே உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை, பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும், எவ்வித எதிர்ப்பு குரலும் இல்லாமல், அமைதி காத்து வந்தது.தமிழகத்தில் உள்ள, 10 மேயர் பதவிகளில், இரண்டு முதல் நான்கு வரையும், அனைத்து பதவிகளிலும், 30 சதவீதம் வரை சீட்களை கேட்டுப்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், தே.மு.தி.க.,வினர் இருந்தனர். இதன் மூலம், கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு, தோல்வியடைந்த நிர்வாகிகளை திருப்திபடுத்தவும் திட்டமிட்டிருந்தது.


ஆனால், அதற்கு பயனில்லாமல், தன்னிச்சையாக, அ.தி.மு.க., சார்பில், மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.அதன் பின் நடத்திய பேச்சுவார்த்தையிலும், மிக சொற்பமான இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள தே.மு.தி.க., நிர்வாகிகள், தனித்து போட்டியிடுவது அல்லது மற்ற கட்சிகளை சேர்த்து மூன்றாவது அணியில் போட்டியிடுவதா என்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறது.


ஆனால், தனித்து போட்டியிடுவதற்கு, தே.மு.தி.க., நிர்வாகிகள் தயக்கம் காட்டுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சட்டசபைத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கட்சி ரீதியாக மக்களை கவரும் வகையில், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், தனித்து போட்டியிட்ட போது இருந்த செல்வாக்கிலும், தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது.தி.மு.க., - காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடும் போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தால், 90 சதவீதத்துக்கும் மேலான இடங்களை கைப்பற்றிவிடலாம் என, தே.மு.தி.க.,வினர் எண்ணுகின்றனர்.இத்தனை நாட்கள், "அமைதி காத்து' வந்ததை எடுத்துக்கூறி, அ.தி.மு.க., கூட்டணியில் கூடுதல் சீட்களை பெற, தே.மு.தி.க., நிர்வாகிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.


மாவட்ட செயலர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் : விஜயகாந்த்திடீர் உத்தரவு: ""அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அதை சந்திப்பதற்கு மாவட்டச் செயலர்கள் தயாராக இருக்க வேண்டும்,'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.


அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தே.மு.தி.க., மாவட்டச் செயலர்களின் கூட்டம், சென்னை கோயம்பேடில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், பொறுப்பாளர்கள் என, 80க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த ரகசிய கூட்டம் குறித்து பத்திரிகைகள், மீடியாக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகள், கார்களில் வர வேண்டாம்; ஆட்டோக்களில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் கட்சி அலுவலக வாசலில், கார் உள்ளிட்ட வாகனங்களை யாரும் நிறுத்த வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. வெளியாட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க, கறுப்பு நிற ஆடை அணிந்த தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: கட்சி அலுவலகத்தில் நடக்கும் ரகசிய கூட்டங்களின் விவரம் கூட, பத்திரிகைகளுக்கு தெரிந்து விடுகிறது. இதற்கு கட்சி நிர்வாகிகள் தான் காரணமாக இருக்கின்றனர். நீங்கள்(கட்சி நிர்வாகிகள்) அளிக்கும் தகவலை வைத்து தான், அவர்கள் செய்திகளை வெளியிடுகின்றனர். இது நமக்குத் தேவையா என்பதை சிந்திக்க வேண்டும். இதே போன்று தொடர்ந்து நடந்தால், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டியிருக்கும்.கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, அதற்கேற்ற வகையிலான மன நிலையை மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.


வரும் 25ம் தேதி, கோவையில் நடக்கவுள்ள கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டத்தை வெற்றி பெற வைக்க, அனைவரும் உழைக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும் இப்போதில் இருந்தே கவனிக்க வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.