Thursday, September 13, 2012

சூறாவளி "ரோபோ'


நம்ம ஊரில் அவ்வப்போது புயல் தாக்குவதைப் போல், அமெரிக்காவையும் கரீபியன் நாடுகளையும் சூறாவளி தாக்குவது அமாவாசை, பவுர்ணமி வந்து போவதைப் போல. சூறாவளி என்றால் சாதாரண காற்று மட்டும் அல்ல, கார், வீடுகளை எல்லாம் அடித்து துவைத்து, தூக்கி எறிந்து, ஊரையே புரட்டிப் போட்டுவிடும்.

இந்த தலைவலியைப் போக்க, சூறாவளியை முன் கூட்டியே அறியும் புதிய "ரோபோ'வை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சோதனை செய்துள்ளனர். இந்த "ரோபோ', கடல் மட்டத்தில் மிதந்து ஆய்வுகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் கடலில் ஏற்படும் மாற்றங்கள், காலநிலை மாறுபாடுகள், சூறாவளி, புயல் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

இயற்கையான ஆபத்துகள் தாக்காத வண்ணம் "ரோபோ' வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது 85-120 மைல் வேகத்தில் வீசும் சூறாவளி காற்றைக் கூட, இது தாங்க வல்லது. இதன் மூலம் புயல் மையம் கொண்டுள்ள இடம், தாக்கத்தின் அளவு, செல்லும் திசை ஆகியவற்றை துல்லியமாக அறியலாம். நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதற்கு முன் இருந்த கடல் "ரோபோ'க்களை விட இது சிறப்பாக இயங்குகிறது. இந்த "ரோபோ'வை சோதனை செய்தது போலவே, ஆளில்லாத சிறிய படகு ஒன்றையும் சோதனை செய்தனர். இந்த படகு 5 அடி 5 அங்குலம் நீளமுடையது. கடல் வளங்கள், மீன்கள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றை துல்லியமாக பதிவு செய்யும். படகில் "சென்சார்'கள் இருப்பதால், தெளிவான படங்களை எடுக்கவும் பயன்படுகின்றன. கடலை ஆய்வு செய்ய எண்ணற்ற தொழில்நுட்பங்கள் இருந்தாலும், புதிய சாதனங்கள் முற்றிலும் புதிதானவை. சூரிய ஒளியிலிருந்து, சக்தியை பெற்றுக் கொள்ளும் "சென்சார்'கள் இதில் உள்ளன. ரோந்துப் பணியில் ஈடுபடும் கடற்படை வீரர்களுக்கும் இது பெரிதும் உதவுகிறது. இதை யாரும் எளிதில் அழித்துவிட முடியாது. வருங்காலத்தில் இந்த "ரோபோ', கடற்படைக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நன்றி 


தினமலர்