தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் மேற்கொள்ளும் கான்ட்ராக்டர்களிடம் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கமிஷன் வாங்கக் கூடாது. கமிஷன் வாங்குவது தெரிந்தால், அவர்களை கட்சியை விட்டு நீக்கி விடுவேன் என விஜயகாந்த் எச்சரித்துள்ளதால், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சமீபத்தில் தனது ரிஷிவந்தியம் தொகுதிக்கு சென்ற விஜயகாந்த், தனது எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இந்தாண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஆலோசனை நடத்தினார். எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை முடிவு செய்தார். இது குறித்த விவரங்களை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து சென்னை திரும்பினார். இதே போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு கட்சியின் 28 எம்.எல்.ஏ.,க்களுக்கு, விஜயகாந்த் உத்தரவு பிறப்பித்தார். விஜயகாந்தின் உத்தரவையடுத்து தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏ.,க்கள், அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விவரங்களை சேகரித்தனர். இந்நிலையில், சில கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிகளில் ஒவ்வொரு பணிகளையும் மேற்கொள்ள 20 சதவீத கமிஷன் கேட்பதாக தகவல் வெளியானது. இது குறித்து அறிந்த விஜயகாந்த் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் தனித்தனியாக சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். தொகுதி மேம்பாட்டு நிதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது குறித்த விவரங்களை எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும் தொகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த விவரங்களை எழுதிக் கொடுத்தனர். அப்போது விஜயகாந்த், மழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், தரைப்பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள் ஆகிய பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிக முக்கியத்துவம், முக்கியத்துவம் என, இரண்டு வகையாகப் பிரித்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு எம்.எல்.ஏ.,க்களிடம் விஜயகாந்த் ஆலோசனை வழங்கியுள்ளார். இதில் அதிக முக்கியத்துவம் பெற்ற பணிகளை இந்தாண்டு நிதியிலும், முக்கியத்துவம் என கருதப்படும் பணிகளை அடுத்தாண்டு நிதியிலும் மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார். மேலும் எம்.எல்.ஏ.,க்களிடம் விஜயகாந்த், "தொகுதி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் யாரும் கமிஷன் பெறக்கூடாது. கமிஷன் பெற்றதாக தகவல் கிடைத்தால், அவர்களை கட்சியை விட்டே தூக்கிவிடுவேன். எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது தான். அதனால், அந்த பதவி இருந்தாலும், போனாலும் எனக்கு கவலையில்லை. கட்சியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மக்கள் நமக்கு கொடுத்த பணியை திருப்திகரமாக செய்து முடிக்கவேண்டும்' என, எச்சரித்து அனுப்பியுள்ளார். விஜயகாந்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் பீதியில் உறைந்துள்ளனர்.