Monday, December 12, 2011

பெரியாறு அணை: தமிழக உரிமையை பறிக்க முடியாது

உத்தமபாளையம்: பெரியாறு அணை மிகவும் உறுதியாக உள்ளது. அணையில் 999 ஆண்டிற்கான தமிழகத்தின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது, என, பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் தெரிவித்தார்.

பெரியாறு பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளான மாநில நீர் வள ஆதார அமைப்பின் முதன்மை தலைமை பொறியாளர் ராஜகோபால், மதுரை நீர் வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் சம்பத்குமார், மதுரை பெரியாறு வைகை வடிநில கண்காணிப்பு பொறியாளர் மோகன சுந்தரம் ஆகியோர் நேற்று பெரியாறு அணையை பார்வையிட வந்தனர். போராட்டங்களால் அங்கு செல்லமுடியவில்லை.பின்னர், உத்தமபாளையத்தில் முதன்மை தலைமை பொறியாளர் ராஜகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு குறித்து சுப்ரீம் கோர்ட், நிபுணர் குழு ஆணைப்படி அணையில் தொழில் நுட்ப பணிகள் நடப்பதை ஆய்வு செய்ய வந்துள்ளோம். பெரியாறு அணை மிகவும் பலமாக, உறுதியுடன் உள்ளது. நிலநடுக்கம், அணை உடையும் அபாயம் என கேரள அரசு பொய் பிரசாரம் செய்கிறது. நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்கவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதனால், அணையில் தமிழகத்திற்கான உரிமையை துளி அளவும் குறைக்க முடியாது.


அணையில் தமிழகத்திற்கான 999 ஆண்டு அனுபவ உரிமையை யாராலும் தடுக்க முடியாது. 999 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தமிழகம் தண்ணீர் பெறும். புதிய அணை கட்டுவது சாத்தியமில்லாதது. தங்கள் மக்களை திருப்தி படுத்தவே, கேரள அரசு இது போன்ற தீர்மானங்களையும், பொய் பிரசாரத்தையும் செய்து வருகிறது. அணையில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு, பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அணையில் தமிழகத்திற்கான பாதுகாப்பு, தற்போது செய்ய வேண்டிய தொழில் நுட்ப பணிகள், நிபுணர் குழுவின் ஆணை உள்ளிட்டவைகள் குறித்து அமைச்சர் பன்னீர் செல்வத்தை உத்தமபாளைத்தில் சந்தித்து எடுத்துக் கூறியுள்ளோம். மாவட்ட அளவில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, அவர்களை தைரியப்படுத்தி, போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி கூறியுள்ளோம். அணையில் பராமரிப்பு பணியில் இருக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு இடுக்கி கலெக்டரிடம் பேசி போதிய பாதுகாப்பு கொடுத்து உள்ளோம், என்றார்.