கோவை: காதல் கணவனையும், மூன்று வயது குழந்தையையும் பிரிந்து தலைமறைவானார் மனைவி; மீட்டுத்தருமாறு குழந்தையுடன் வந்து, கலெக்டரிடம் மனு கொடுத்தார், கணவன். அன்னூர் அருகே, ஓரைச்சல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாசலம். இவரது மனைவி மகேஸ்வரி. வெவ்வெறு ஜாதியை சேர்ந்த இருவரும், 2007ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு, மூன்று வயதில் யுவன் சாதிக் என்ற மகன் இருக்கிறான். மகேஸ்வரி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். கடந்த நவ., 5ம் தேதி கல்லூரிக்கு படிக்க சென்ற மகேஸ்வரி, வீடு திரும்பவில்லை; தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவருக்கு பெற்றோர் வேறு திருமணம் நடத்த முயற்சி செய்து வருவதாக மருதாசலம் கூறுகிறார். "கடந்த ஒரு மாதமாக தாயைப் பிரிந்த நிலையில், குழந்தை எந்நேரமும் அழுது கொண்டே இருக்கிறான். குழந்தையை காப்பாற்ற, வேலைக்கு செல்லக் கூட முடியாத நிலையில் உள்ளேன். மனைவியை மீட்டுத் தர வேண்டும்' என, மருதாசலம் குழந்தையுடன் வந்து, நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
மக்கள் குறைதீர்ப்பு முகாமில் அவர் அளித்த மனு: நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். மனைவி உயர் ஜாதியை சார்ந்தவர். இதனால், எங்கள் திருமணத்தை மனைவியின் பெற்றோர் விரும்பவில்லை. அவரை, "நிலத்துக்கு கையெழுத்து போட வேண்டும்' எனக் கூறி, அழைத்து சென்றுவிட்டனர். அவர் படிக்கும் கல்லூரிக்கு சென்றபோது, கல்லூரி நிர்வாகமும் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. மனைவியை மீட்டுத் தருமாறு, நவ.,14ல் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீசார் கூறியும், அவர் வரவில்லை. அவரது பெற்றோர் என்னை மிரட்டுகின்றனர். என் மனைவிக்கு வேறு திருமணம் செய்து வைக்க, திட்டமிட்டுள்ளனர். எனக்கும், குழந்தைக்கும் தற்கொலையைத் தவிர வேறு வழி இல்லை. குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியை மீட்டுத் தர வேண்டும்' எனக் கூறியுள்ளார்.