Friday, December 16, 2011

சோனியா வீடு முன் போராட்டம்: ஹசாரே எச்சரிக்கை

புதுடில்லி: "லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றவில்லை என்றால், அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.சோனியா, ராகுல் உள்ளிட்ட எம்.பி.,க்களின் வீடுகளின் முன், போராட்டம் நடத்துவோம்'என, காந்தியவாதி அன்னா ஹசாரே கூறினார்.

"லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், அவரது குழுவினரும் வலியுறுத்தி வருகின்றனர். இல்லையெனில், வரும் 27ம் தேதி முதல், டில்லி அல்லது மும்பையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாகவும் ஹசாரே அறிவித்துள்ளார். இதற்கிடையே, லோக்பால் விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக, அனைத்துக் கட்சி கூட்டம், டில்லியில் நேற்று முன் தினம் நடந்தது. இதில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், லோக்பால் மசோதா, நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.நீட்டிக்க வேண்டும்


ஹசாரே உயர் மட்டக் குழுவின் கூட்டம், இரண்டாவது நாளாக நேற்றும் டில்லியில் நடந்தது. அப்போது, ஹசாரே கூறியதாவது: லோக்பால் மசோதா தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம், தோல்வி அடைந்தது குறித்து பிரச்னை இல்லை. பார்லிமென்டில் அனைத்து எம்.பி.,க்களும் உள்ளனர். அங்கு, மசோதா தாக்கல் செய்யப்படும் போது, அனைத்து எம்.பி.,க்களும், அதை ஆதரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நடப்பு கூட்டத் தொடரிலேயே, மசோதா நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில், லோக்பால் மசோதா குறித்து விவாதிப்பதற்கு, தற்போதைய கூட்டத் தொடரில் போதிய நேரம் இல்லை. எனவே, குளிர்கால கூட்டத் தொடரின் நாட்களை நீட்டிக்க வேண்டும்.


சிறை நிரப்பும் போராட்டம்: நடப்பு கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்றப் படாவிட்டால், முதல் கட்டமாக, வரும் 27ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து சிறை நிரப்பும் போராட்டம் மேற்கொள்ளப்படும். சோனியா, ராகுல் உள்ளிட்ட எம்.பி.,க்களின் வீடுகளின் முன்னும், போராட்டம் நடத்தப்படும்.


மும்பையா, டில்லியா? வானிலை மாற்றம் காரணமாகவே, 27ம் தேதி நடக்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை, டில்லியிலிருந்து மும்பைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். சாதகமான வானிலை நிலவினால், டில்லியிலேயே போராட்டத்தை மேற்கொள்வோம். இவ்வாறு, அன்னா ஹசாரே கூறினார்.


அரசு தரப்பும் உறுதி: பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது: நேற்று (நேற்று முன்தினம்) நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், 35 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இவை அனைத்தையும் தொகுத்து, ஒருமித்த கருத்து ஏற்படுத்த வேண்டும். இதனால், அரசின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. அரசின் கருத்தும், இதில் சேர்க்கப்பட வேண்டும். நடப்பு கூட்டத் தொடரிலேயே, லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு, அரசு கடும் முயற்சிகளை மேற்கொள்ளும். குளிர்காலக் கூட்டத் தொடர், இன்னும் ஒரு வாரம் மட்டுமே நடக்க இருப்பதால், இந்த காலக் கெடுவுக்குள் மசோதாவை நிறைவேற்ற முடியாது என கூற முடியாது. வரும் 20ம் தேதி லோக் சபாவிலும், 21ம் தேதி ராஜ்ய சபாவிலும், லோக்பால் குறித்து விவாதம் நடக்கலாம். கூடிய விரைவில், மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற, அரசு தரப்பில் முழு முயற்சி மேற்கெள்ளப்படும். இவ்வாறு பவன் குமார் பன்சால் கூறினார்.


கொறடா உத்தரவு: லோக்பால் மசோதா, அடுத்த வாரம் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், "வரும் 19ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை, அனைத்து எம்.பி.,க்களும், கட்டாயம் பார்லிமென்ட்டிற்கு வருகை தர வேண்டும்' என, தன் எம்.பி.,க்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.