கூடலூர் : சபரிமலை அருகே பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த ஜீப் 60 அடி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 106 பேர் பலியானார்கள் 90 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி பெருவிழா நடந்தது. ஜோதியை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். புல்மேடு, உப்புப்பாறை பகுதியில் இருந்தும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்தனர். நேற்று இரவு ஜோதியை பார்த்துவிட்டு பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
புல்மேடு உப்புப்பாறை பகுதியில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பிய ஜீப் ஒன்றில், பக்தர்கள் அதிக அளவு ஏறினர். ஜீப் "செல்ப்' எடுக்காததால், பலர் இறங்கி ஜீப்பை தள்ளினர். திடீரென ஜீப் கிளம்பியது, கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்தது. பின் 60 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 106 பேர் பலியானார்கள். இதுவரை 46 பேரது உடல் அடையாளம் தெரிந்தது. 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து அங்கு திடீர் நெரிசல் ஏற்பட்டதால், நெரிசலில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மகரவிளக்கு பூஜை முடிந்து பொங்கல் பண்டிக்கைக்காக புல்மேடு வழியாக பக்தர்கள் தமிழகம் நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தோர் வண்டிப்பெரியார், கோட்டயம் மற்றும் தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் மீட்புப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சம்பவம் குறித்த தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி உதவி எண்: 04869- 222049 (குமுளி போலீஸ் ஸ்டேஷன்).
மத்திய அரசு உதவி : சபரி மலை விபத்தை தேசிய பேரிடர் நிகழ்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளும். இதற்காக விபத்து நடத்த இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பியுள்ள மத்திய அரசு, சம்பவம் குறித்து கேரள மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. கேரள அரசிற்கு தமிழக மற்றும் கர்நாடக அரசுகளும் உதவுவதாக அறிவித்துள்ளன.
மீட்பு பணிகள் தாமதம் : சம்பவ இடம் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருப்பதாலும், இருட்டாக இருப்பதாலும் மீட்பு பணிகள் தாமதமடைவதாக மீ்ட்பு குழுவினர் தெரிவித்தானர்.