Tuesday, January 11, 2011

ayyappan kovil

சபரிமலையில் ரூ.500 கோடியில் புதிய திட்டங்கள்: ரோப் கார் பணி பிப்ரவரியில் துவக்கம்
ஜனவரி 11,2011
 
அ-
+
மதுரை : சபரிமலை பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த, திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில், 500 கோடி ரூபாயில், "மாஸ்டர் பிளான் திட்டப் பணிகள் பிப்ரவரியில் துவங்கும் என, தேவசம் போர்டு உறுப்பினர் சிசிலி தெரிவித்தார்.மதுரையில் ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிர சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சீசன் காலத்தில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் வருகின்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த, "சபரிமலை மாஸ்டர் பிளான் நிதி மூலம் 500 கோடி ரூபாயில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. பம்பை, நிலக்கல், எரிமேலி மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பம்பை, சன்னிதானத்தில் பக்தர்களுக்கு அன்னதான திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், சுப்பிரமணிய பாதையை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்த 11 கோடி ரூபாயில், அய்யப்பன் பாதை அமைக்கும் பணிகளும் நடைபெறும். அப்பல்லோ, அமிர்தா மருத்துவமனைகள் சேவை அடிப்படையில் சிகிச்சைகள் அளித்து வருகின்றன. நீலிமலை, அப்பாச்சிமேட்டில் மருத்துவ சிகிச்சைகளுக்காக கட்டடம் கட்டப்படும். பம்பை - சன்னிதானத்திற்கு ஒன்பது கோடி ரூபாயில் ரோப் கார் அமைக்கும் பணிகளும் நடக்கும். இதில், அடுத்த ஆண்டு முதல் சரக்குகள் மட்டும் கொண்டு செல்லப்படும். இப்பணிகள் அனைத்தும் பிப்ரவரியில் துவங்கும்; ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிர சங்கத்திற்கு, ஏற்கனவே 2005ம் ஆண்டில் அமைந்த போர்டு சார்பில் கட்டடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய போர்டு, ஐந்து மாதங்களுக்கு முன் பதவி ஏற்றது. சங்கத்திற்கு மூன்று மாடியில் கட்டடம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறும். இவ்வாறு சிசிலி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment