Thursday, January 27, 2011

கட்சி தொண்டர்களிடம் கூட்டணி எதிர்பார்ப்பு: முடிவு தெரியாததால் தாமதமாகிறது பிரசாரம்

தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, தேர்தல் களம் சூடாகியுள்ளது. பிரதான கட்சிகளான தி.மு.க.,-அ.தி.மு.க.,வின் தலைமையில் இரு அணிகள் தயாராகி வருகின்றன. இந்த அணிகளில் இடம் பெறும் கட்சிகளின் விபரம் முழுமையடையாததால், தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கூட்டணி இறுதி செய்யப்படாததால், பிரச்சார திட்டங்களிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.





தற்போதைய தமிழக அரசின் பதவிக்காலம் மே 13ம்தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேதிக்குள்ளாக, சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, தமிழகத்தில் புதிய அரசு அமைய வேண்டும். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், தேர்தல் பணிக்கான முஸ்தீபுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கியுள்ளது.தமிழக சட்டசபைக்கு 2006ம் ஆண்டு அமைந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் தலைமையில் இரு அணிகள் அமைந்தன; தே.மு.தி.க., தனித்து களமிறங்கியது. தற்போது நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க.,-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க.,-ம.தி.மு.க.,- கம்யூனிஸ்டுகள் அடங்கிய ஒரு அணியும் தற்போதைய நிலையில் உறுதியாகியுள்ளது.







தமிழகத்தில் 10.5 சதவீத ஓட்டுவங்கியை வைத்திருக்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க., அணியிலும், சராசரியாக ஆறு சதவீத ஓட்டுவங்கியை வைத்துள்ள பா.ம.க., தி.மு.க., அணியிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய லோக்சபா தேர்தலில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியை தழுவி, நான்கரை சதவீத ஓட்டுக்களை மட்டும் பா.ம.க., பெற்றது குறிப்பிடத்தக்கது.ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, கூட்டணி குறித்த அறிவிப்பை இரு கட்சிகளும் வெளியிடாததால், தொண்டர்களிடம் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. தே.மு.தி.க.,-பா.ம.க., ஆகிய கட்சிகள் சீட்டு பேரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுதான், இழுபறிக்கு காரணமாக உள்ளது.

தி.மு.க., கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ் - பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்தால் கூட்டணி இறுதியாகிவிடும். முதல்கட்டமாக 29ம்தேதி டில்லி செல்லும் முதல்வர் சோனியாவைச் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, காங்கிரசுக்கான தொகுதிகள் எத்தனை என்பது முடிவாகிவிடும்.அதற்கு அடுத்தபடியாய், பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிப்பங்கீட்டை முடிக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 3ம்தேதி நடக்கவுள்ள தி.மு.க., பொதுக்குழு முடிவுக்குப்பின், கூட்டணி குறித்த இறுதி வடிவம் அறிவிப்பாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க., கூட்டணியில் சீட் பற்றாக்குறை இருப்பதால், ஒன்றிரண்டு தொகுதிகளை எதிர்பார்க்கும் குட்டிக கட்சிகள் இந்தப் பக்கம் வருவதற்கு யோசிக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும், அந்த அணியில் இடம்பெறுவதற்கு குட்டிக் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. அ.தி.மு.க., தலைமையும், அவர்களை அங்கீகரிக்க முன்வந்துள்ளது. இதன் காரமாக கூட்டணியை இறுதி செய்வதில், தாமதமும் ஏற்பட்டுள்ளது.தி.மு.க., கூட்டணி இறுதி செய்யப்பட்டபின், தங்களது கூட்டணியை முடிவு செய்யலாம் என அ.தி.முக., காத்திருக்கிறது. வழக்கமாக தேர்தல் கூட்டணி, பிரச்சாரத்தில் முந்திக் கொள்ளும் அ.தி.மு.க., பொதுச் செயலர் இந்த முறை பின்தங்குவதற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. கூட்டணி முடிவுகள் தாமதமாவதால், பிரச்சார திட்டங்களும் தாமதமாகி வருகிறது.