சென்னை : ""ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம், நாட்டிற்கே கடன் கொடுக்கும் அளவிற்கு, உலகளவில் கருணாநிதி குடும்பத்தினர் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மக்களுக்கு சலுகை அளிப்பதற்காகவே, "முதலில் வருபவருக்கு, முதலில் வழங்குவது' என்ற அடிப்படையை ராஜா பின்பற்றியதாக கருணாநிதி கூறியிருக்கிறார். "ஸ்வான் டெலிகாம், யுனிடெக், லூப் டெலிகாம், அலையன்ஸ் இன்ப்ரா' போன்ற தகுதியில்லாத நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ராஜாவின் தயவால் பெற்றன.உரிமங்களை பெற்ற நிறுவனங்கள், தங்களுடைய பங்குகளை சில நாட்களுக்குள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வேறு நிறுவனங்களுக்கு விற்று விட்டன. இத்தகைய, "லெட்டர் பேட்' நிறுவனங்கள், அடைந்த லாபம் தான் மக்களுக்கு கிடைத்த சலுகையா? ராஜாவால் பயனடைந்த பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை துவங்கவில்லை. இதில், மக்களுக்கு என்ன சலுகை கிடைத்தது என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.அரசு கருவூலத்திற்கு வர வேண்டிய வருவாயை, கருணாநிதி குடும்ப கருவூலத்திற்கு திருப்பிவிட்டு இருக்கிறார் ராஜா. ராஜாவின் தவறான கொள்கையால் பயனடைந்தவர்கள் பொதுமக்கள் அல்ல; கருணாநிதியின் குடும்ப மக்கள்தான்.
அரசு, வணிக நோக்கோடு லாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டால், அதன் மூலம் அரசுக்கு வரும் பணம், பொதுமக்களுக்காக, சமூக நன்மைக்காக பயன்படும். கருணாநிதி சொல்வதுபோல் ஒரு அரசு செயல்பட்டால், ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் பயனடையும். கருணாநிதி அறிக்கையில், "ஏலம் விடத் தேவையில்லை' என, "டிராய்' கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால், "டிராய்' 2003ம் ஆண்டு பரிந்துரையில், கூடுதலாக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய அரசு விரும்பினால், அதை ஏல முறையில் வழங்கலாம் என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதை ஏன் ராஜா பின்பற்றவில்லை? மொத்தத்தில், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம், இந்தியாவிற்கே கடன் கொடுக்கும் அளவிற்கு, கருணாநிதி குடும்பத்தினர் உலகளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.