Friday, January 28, 2011

மனித குலத்தை மதிக்கும் நாடு இந்தியா : அதிபர் ஒபாமா குடியரசு வாழ்த்து



வாஷிங்டன் : இந்திய குடியரசு தினத்துக்கு, அமெரிக்கா அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தினத்தையொட்டி, பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது. எம்.பி.,க்களான ஜோ க்ரோலே, எட்வர்ட் ராய்சி ஆகியோர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தனர். அமெரிக்க சமுதாயத்துக்கு இங்கு வாழும் இந்தியர்கள் பலர் சேவையாற்றி வருவதாக இவர்கள் குறிப்பிட்டனர்.







ஒபாமா விடுத்த வாழ்த்து செய்தியில், "இந்திய குடியரசு தினத்தை உலகத்தோடு சேர்ந்து நாமும் கொண்டாடுகிறோம். அமெரிக்காவை போல இந்தியாவும் மிகப்பெரிய ஜனநாயக நாடு. பல்வேறு இன மொழியை கொண்ட மக்கள் ஒன்றாக வாழும் நாடு. இதன் மூலம் மனித குலத்தை மதிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது' என்றார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் குறிப்பிடுகையில், "21ம் நூற்றாண்டில் இந்திய - அமெரிக்க உறவு தவிர்க்க முடியாததாகி விட்டது' என்றார். வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் மீரா சங்கர் தேசிய கொடி ஏற்றினார். ஜனாதிபதி பிரதிபாவின் உரை இந்த விழாவில் வாசிக்கப்பட்டது. நியூயார்க், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ, ஹூஸ்டன் ஆகிய நகரங்களில் உள்ள தூதரக அலுவலகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.