பொங்கல் பண்டிகையை ஒட்டி, பஸ், ரயில், விமான கட்டணங்கள், பல மடங்கு உயர்ந்துள்ளதால், சொந்த ஊருக்கு, வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
ரயில் டிக்கெட் கொடுமை: ரயில்வேயின் அதிகாரப்பூர்வ ஏஜன்டுகளுக்கு டிக்கெட் வழங்க, ரயில் நிலையங்களில் தனி கவுன்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள், பொதுமக்கள் வரிசையில் நின்று, மொத்தமாக டிக்கெட் எடுப்பதாக புகார் கூறப்படுகிறது. டிக்கெட் கவுன்டர்களில் உள்ள ரயில்வே ஊழியர்கள் பலர், டிராவல் ஏஜன்டு நிறுவனங்களை நடத்தி கொண்டு, அவர்களே, "தத்கல்' உள்ளிட்ட டிக்கெட்டுகளை, "புக்கிங்' செய்வதாக கூறப்படுகிறது. டிக்கெட் புக்கிங் கவுன்டர்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்றினால் மட்டுமே, இப்பிரச்னை தீரும் என்கின்றனர்.
"புக்கிங்' குறைவாக உள்ள மையங்களில், இந்த அதிகார பூர்வமற்ற ஏஜன்டுகள், ரயில்வே ஊழியர்களின் ஒத்துழைப்புடன் டிக்கெட்டுகளை போலி பெயர்களில் பதிவு செய்கின்றனர். இதில், அதிகாரப்பூர்வ ஏஜன்டுகளே ஓரங்கட்டப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆர்.பி.எப்., போலீசார் தங்கள் பங்கிற்கு, "தத்கல்' டிக்கெட்டுகளை பதிவு செய்கின்றனர். ஏஜன்டுகளிடம் ஆர்.பி.எப்., போலீசார் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை அனுமதிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், மக்களுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
விமான கட்டணம்: விடுமுறை காலங்களில் விமானக் கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தி விற்கப்படுகின்றன. சென்னையில் இருந்து, மும்பை, டில்லி ஆகிய ஊர்களுக்கு, 5,000 முதல் 7,000 ரூபாய் வரை இருந்த விமான டிக்கெட், தற்போது, 30 சதவீதம் கூடுதலாக விற்கப்படுகிறது.