Sunday, January 23, 2011

அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க.,வை சேர்க்க பேச்சுவார்த்தை: தா.பாண்டியன்

திருநெல்வேலி:""அ.தி.மு.க., கூட்டணிக்குள் விஜயகாந்த் கட்சியை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என, இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் தா.பாண்டியன் பேசினார்.அக்கட்சியின் தமிழ்மாநில நிர்வாக குழு கூட்டம், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்தது.




இதில் பங்கேற்ற மாநில செயலர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டோரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய, மாநில அரசுகளுக்கும், விலைவாசி உயர்வுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு பல்வேறு இலவசங்களை வழங்குவதற்காக நபார்டு, உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. அந்த தொகை எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என, அரசு வெள்ளைஅறிக்கை வெளியிடவேண்டும்.அ.தி.மு.க., கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன. விலைவாசி உயர்வை கண்டித்து பிப்., 3 முதல் 9 வரை கூட்டணி கட்சிகளை இணைத்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம். அதில் பங்கேற்கவும், அ.தி.மு.க., கூட்டணியில் இணையவும் தே.மு.தி.க.,விற்கும் அழைப்பு விடுக்க உள்ளோம்.அவருடன், அ.தி.மு.க., சார்பில் பேசப்பட்டு வருகிறது.

கூட்டணி என்பதற்காக பா.ஜ., உள்ளிட்ட வேறு கட்சிகளுடன் இணைந்து அவர் போட்டியிடுவதாக இருந்தால், அதை நாங்கள் தடுக்க இயலாது. கூட்டணியில் இந்திய கம்யூ., கட்சிக்கு எத்தனை சீட்பெறுவது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை விரைவில் முடிவு செய்வோம். தேர்தலில் அ.தி.மு.க., தனிமெஜாரிட்டியுடன் வெற்றிபெறும்.தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து எங்களுக்கு நம்பிக்கையில்லை. தற்போது, அதுவும் ஒரு வகையில் தேர்தல் பிரசாரமாகி விட்டது. யாராவது அமைப்புகளுக்கு பணம் கொடுத்து தாங்கள் தான் வெற்றிபெறுவோம், என கூற வைக்கிறார்கள். அதை நம்பத்தேவையில்லை, என்றார்.கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.