காவலுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார், யார்? விஜய் அதிரடி பேட்டி
இதுவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது; ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். காவலன் படம் எதிர்பார்த்தபடியே வெற்றிக்கனியை சுவைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அடுத்த படமான வேலாயுதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:
காவலன் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாகி விட்டது. இதற்கு முன்பும் சில படங்களில் பிரச்னைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். பணம் பெரிய பிரச்சினையே அல்ல. காவலன் படத்தில் சில மோசமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்சினைகளுக்கு காரணம் யார், அது எங்கிருந்து வருகிறது, யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது. பிரச்சினைக்கு காரணம் தெரியவில்லை. இன்றுவரை அது புரியவில்லை. சில பல பிரச்னைகள் காரணமாக, காவலன் படத்தை ஜனவரி 14ம்தேதி கொண்டுவர முடியவில்லை. என்றாலும், அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி காவலன் படத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கஷ்டமான சூழ்நிலையில், என் கூட இருந்து உதவி செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.
இவ்வாறு விஜய் கூறினார். ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசியது குறித்தும், அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையி்ல், ஜெயலலிதா அம்மாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். அது எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு முன்பு ராகுல்காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது. அரசியலில் நுழைவதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒரு நடிகராக நான் மக்களுக்கு அறிமுகமானேன். இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. காவலன் பிரச்னைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட நான் விரும்பவில்லை, என்றார்.