காதலிக்கறது இனிப்பானதா இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனா காதலிக்கறவனுக்காக லவ் லெட்டர் எழுதி தரது 'பால் கோவா'குள்ள பச்சை மிளகாயை வெச்சு சாப்பிடற மாதிரி.. மேலோட்டமா பாக்கும் போது நாக்குல எச்சி ஊறும்.. கடிச்சு திண்ணும்போது கண்ல கண்ணீர் ஊறும்.
எதுக்கு இப்ப இந்த பாழாப்போன ஃபிலாசபி..? சொல்றேன்.ப்ளஸ் டூ பரிட்சைக்கு ஸ்டடி ஹாலிடேஸ்ல நிறைய படிச்சு படிச்சு, ஒண்ணும் மனப்பாடம் ஆகாததால கடுப்பாகி, அந்த வெறுப்புல நான் கவிஞன் ஆயிட்டேன்.. ஆக்கிட்டாங்க.. நியாயமா பாத்தா '3 இடியட்ஸ்' கதைய நான் தான் எழுதியிருக்கணும்.. யாரோ எழுதி யாரோ எடுத்து பேர் வாங்கிட்டாங்க.. விடுங்க.
ஒருத்தன் கவிஞன் ஆக என்ன பண்ணனும்? மொதல் வேலையா கண்ணதாசன், வைரமுத்து, வாலி இவங்க எழுதின சினிமா பாட்டையெல்லாம் மனப்பாடம் பண்ணனும். எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டு வரியை நாம நிறுத்தி நிதானமா ரசிச்சு சொல்லத் தெரியணும். சொல்ல கத்துகிட்டேன். அதுதான் தப்பா போச்சு.. வந்தது வம்பு.
வினோத் கைல அக்கவுண்ட்ஸ் நோட்புக்கோட வந்தான். நான் அலட்சியம் கலந்த நக்கலோட ஒரு அரை சிரிப்பு சிரிச்சேன்.. (கவிஞன்னா அப்படி தான் சிரிக்கணும்..!) "எதுக்கு இந்த படிப்பு..? வரவு இல்லேன்னா செலவு.. நம்பரை வலது பக்கம் போடணும்.. இல்லேன்னா இடது பக்கம் போடணும்.. இதுல என்ன கிரியேட்டிவிட்டி இருக்கு..?"
வினோத் நோட்புக்கை திறந்து அதுலேந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். அதுல அழகான கையெழுத்துல அபத்தமா நாலு வரி எழுதியிருந்தது.
"என்னடா இது..?"
"பாத்தா தெரியல.. கவிதை.."
"யார் எழுதினது?"
வினோத் விட்டத்தை பார்த்தபடி மோனாலிசா மாதிரி சிரிச்சுகிட்டே சொன்னான் "சுப்ரியா"
அடப்பாவி.. லவ்வா..? ஈர்குச்சி மாதிரி இருக்க இவனுக்கு லாலிபாப் மாதிரி இருக்க அவ மேல அப்படி என்ன ஈர்ப்பு.. (இந்த லைனை நோட் பண்ணி வெச்சுக்கணும்.. பிற்பாடு எதாவது கவிதை எழுதும்போது அடிச்சிவுட்றலாம்..)
மறுபடியும் ஒருமுறை அந்த கவிதைய படிச்சு பாத்தேன்..
"வானவில்"
சூரிய 'சூடு'
பட்ட இடத்தில்
மழை 'நீர்' தொட்டதால்
அங்கே
கலர் கலராய்
கொப்புளங்கள்!
- சுப்ரியா
கொப்புளமா.. ? அடத்தூ..! அய்யோ.. இனிமே வானவில்லை பாக்கும்போதெல்லாம் இது ஞாபகம் வந்து தொலைக்குமே..!
ரொம்ப ஓவரா ரியாக்ட் பண்றேனோ..? நல்லாத்தான் இருக்கோ.. நமக்கு எழுத வரலைன்னு பொறாமைனால பொங்கறேனோ..?
"வினோத்.. என்ன மச்சான் இது..?"
வினோத் என் தோள் மேல கைய போட்டு "மச்சான்.. இந்த கவிதை எனக்கு புரியல.. ஆனா இது சுப்ரியா என் பிறந்த நாளுக்காக ஸ்பெஷலா எழுதின கவிதை.. "
மறுபடியும் பேப்பரை பாத்தேன்.. கவிதைக்கு கீழ '(செல்ல வினோத்.. இந்த கவிதை உனக்கு என் பிறந்த நாள் பரிசு)' ஸ்ஸ்ஸப்ப்பா.. தாங்கலைடா சாமி..!
"சரி.. இப்ப எதுக்கு இதை எங்கிட்ட கொண்டு வந்த..?"
"என் 'பர்த் டே'க்கு அவ கவிதை குடுத்துட்டா.. பதிலுக்கு நானும் அவளுக்கு கவிதை குடுக்கணும்.."
"குடு"
"எனக்கு தான் கவிதை எழுத தெரியாதே.. நீ ஒரு கவிஞன்.. அதனால.."
பால்கோவாவுக்குள்ள பச்சை மிளகாய பதுக்கி வெச்சு, அதை என்னை பாக்க வெச்சுட்டான்.. படுபாவிப்பய..
ஆனா, ஆசை யாரை விட்டது ? நம்மை நம்பி வந்தவனை.. அதுவும் கவிஞன்னு நம்பி வந்தவனை கைவிட்டா, தமிழ்த் தாய் என்னை செருப்பால அடிக்க மாட்டாளா..? ஸோ.. கவிதை எழுதிடலாம்னு டிசைட் பண்ணிட்டேன்..
"வினோத்.. எந்த மாதிரி கவிதை வேணும்.. அவளுக்கு நன்றி சொல்ற மாதிரியா..?" ஹோட்டல்ல சர்வர் "என்ன சார் வேணும்"னு கேக்கற மாதிரி கேட்டேன்.
"ம்ஹூம்.. அவளை வர்ணிச்சு எழுதணும்.. அப்ப தான் கவிதைய நான் எழுதினதா நம்புவா.."
சுப்ரியாவை வர்ணிச்சு எப்படி எழுத முடியும்..? அதுவும் அவ காதலனை பக்கத்துல வெச்சுகிட்டு..?
"என்ன மச்சி யோசிக்கற..? கவிதை எழுத வராதா..?"
எனக்கு தோல்கல்.. சாரி.. தோள்கள் தினவெடுத்தன.. நாக்கு நமநமத்தது. மூச்சை நல்லா உள்ளே இழுத்து விட்டுகிட்டு, "திக்கெட்டும் பாடப்பட வேண்டிய என் கவிதையை உன் பாக்கெட்டு மட்டும் சுமப்பதா..? என் செய்வேன்.. காதலை சாக்கிட்டு கேட்கப்படும் உதவிக்கு நான் மறுத்தால் என் நா கெட்டுப் போகாதோ..?"
வினோத் அப்டியே ஆடிப்போயிட்டான்.. "அய்யய்யோ.. இதுவே கவிதை மாதிரி இருக்கே.. சூப்பர் மச்சான்.. நல்ல 'மூட்'ல இருக்க.. டக்குனு அவளை நல்லா வர்ணிச்சு ஒரு கவிதை எழுதி குடுத்துடு.."
கோடீஸ்வரன் வீட்ல கார் டிரைவரா இருக்கறவன் குடுத்து வெச்சவன்.. வேளா வேளைக்கு சோறு.. ஓட்றதுக்கு பி.எம்.டபிள்யூ காரு.. அப்பப்ப மத்த டிரைவருங்க கூட அக்கப்போரு.. மொதலாளி கூட ஊட்டி, கொடைக்கானல்னு சம்மர்ல டூரு.. ஜாலியான வாழ்க்கை.. ஒரு வேளை மொதலாளி திவால் ஆயிட்டார்னா கூட, அடுத்த வேலைய பாத்துகிட்டு போயிடலாம்.
அடுத்தவனுக்கு லவ் லெட்டர் எழுதித் தரதும் அந்த கார் டிரைவர் வேலை மாதிரி தான். நல்லா ரசிச்சு, லயிச்சு, வார்த்தைகளை வளைச்சு வளைச்சு எழுதி குடுக்கலாம்.. நல்லா இருந்துச்சுன்னா பாராட்டு.. சொதுப்பிடுச்சுன்னா நஷ்டம் நமக்கில்லை. என்ன சொல்றீங்க பாஸ்..?
கவிதை எழுதித் தரேன்னு ஒத்துகிட்டேனே தவிர, எழுத ஆரம்பிக்கும்போது தான் எனக்கு ஆரம்பிச்சுது சனி. சுத்தமா ஒண்ணுமே தோணலை.
அந்த கவிதைய முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.. அப்பறம் ஒரு மாதிரி கொஞ்சம் ரைமிங்கா எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச வார்த்தைங்களை எல்லாம் போட்டு.... அதை கிட்டத்தட்ட கவிதை மாதிரி ஆக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு..
அதை எழுதி முடிச்சதும் தான் தெரிஞ்சுது எனக்கு சுத்தமா கவிதை எழுதவே வராதுன்னு.. வேணும்னா அடுத்தவன் கவிதைய படிக்கலாம், அவ்ளோதான். ச்சே... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..!
ஆனா, இதை வினோத் கிட்ட சொல்ல முடியுமா..? தப்பும் தவறுமா கவிதைன்ற பேர்ல குடுத்த பேத்தலை வினோத் அப்படியே இன்னொரு பேப்பர்ல எழுதி, கீழ "என்றும் உன்... வினோத்"னு போட்டுகிட்டான்.
என்னவாகப் போகுதோன்னு எனக்கு வயத்தை கலக்க ஆரம்பிச்சிடுச்சு.. இவன் காதல் சக்சஸ் ஆகாட்டியும் பரவால்ல, நாம மக்குன்னு ஊருக்கு தெரிஞ்சிடக் கூடாதேன்னு கவலையா இருந்தது.
வினோத் ஒரு பத்து பதினஞ்சு தடவை அதை படிச்சு பாத்தான். அப்பறம் 'தளபதி' படத்துல மம்முட்டி அவர் பொண்டாட்டிகிட்ட ரஜினிய அறிமுகப்படுத்தும் போது காமிப்பாரில்ல ஒரு எக்ஸ்பிரஷன்.. அதே மாதிரி பெருமையா மூஞ்சை வெச்சுகிட்டு, என் தோள் மேல கைய போட்டு என் கண்ணை உத்து பாத்தான்.
"இந்த கவிதை எனக்கு புரியலை.. ஆனா ஒண்ணு மச்சான்.. இது அவளுக்கு பிடிச்சிருந்தா, உனக்கு கண்டிப்பா ட்ரீட் வெக்கறேன்.. அது மட்டும் இல்லை.. எங்களுக்கு பொறக்கற குழந்தைக்கு உன் பேரை வெக்கறேன்.."ன்னு சொல்லிட்டு என் கன்னத்தில் ஒரு இச்சும் லவ் லெட்டருக்கு ஒரு இச்சும் கொடுத்துவிட்டு போய்த் தொலைஞ்சுது அந்த அச்சுபிச்சு.
அதுக்கப்பறம் நான் ப்ளஸ் டூ ஃபெயில் ஆகி.. பரிட்சை எழுதி ஃபெயில் ஆகி.. மறுபடியும் எழுதி.. சரி விடுங்க.. உங்களுக்கு தெரியாததா.. ப்ளஸ் டூ முடிக்கவே ரெண்டு மூணு வருஷம் ஆயிடுச்சு பாஸ். அதுக்கப்பறம் டிகிரி முடிச்சு, வேலைக்கு போய்..
நடுவுல வினோத் தொடர்பு எல்லைக்கு வெளியே போயிட்டான்.. நானும் அவனை மறந்துட்டேன்..
ஒரு நாள் ஆபிஸ் வேலையா பெங்களூரு போயிருந்தேன்.. போன வேலை முடியலை.. கடுப்பா எம்.ஜி ரோடு பக்கத்துல இருக்க 'கமர்ஷியல் ஸ்ட்ரீட்'ல நடந்து வந்திட்டிருக்கும்போது, வானத்துல தூரத்துல லைட்டா வானவில் தெரிஞ்சுது. அதை பாத்ததும் அப்டியே மனசு லேசாயிடுச்சு..
'கொப்புள கவிதை' ஞாபகம் வந்துடுச்சு.. அந்த பொண்ணு பேரு என்ன.. ஏதோ பாக்கு மாதிரி வருமே.. அஜந்தாவா? ச்சே.. ஆங்.. சுப்ரியா..!
வினோத் லவ் மேட்டர் என்னவாகியிருக்கும்..? அவளையே கல்யாணம் பண்ணிட்டிருப்பானோ.. பொறக்கற குழந்தைக்கு என் பேரை வெக்கறேன்னு உணர்ச்சிவசப்பட்டு சொன்னானேன்னு யோசிச்சுகிட்டே நடக்கும்போது, எதிர்ல வந்த பொம்பள மேல மோதிட்டேன்..
"ஐயோ.. சாரி மேடம்.. தெரியாம..."
"இட்ஸ் ஓகே " என்னை நிமிர்ந்து பாத்து.. " நீங்களா..? எப்ப வந்தீங்க பெங்களூருக்கு.. ?"
ஆ.. இது சுப்ரியா.. என்ன இப்படி குண்டாயிட்டா.. லாலிபாப் மாதிரி இருந்தவ குண்டு பீப்பா மாதிரி ஆயிட்டாளே..!
"நீங்க சுப்ரியா தானே..?"
சிரித்தாள். "ஆமா.. என்னை அடையாளம் தெரியலையா..?"
"தெரிஞ்சுது.. இருந்தாலும்.."ன்னு வார்த்தைகளை முழுங்கினேன்.
"இது என்னோட சன்.." பையன் ஆம்பளை பார்பி பொம்மை மாதிரி அழகா இருந்தான்.
"ஹாய்.. உன் பேர் என்ன..?" கேட்டு முடிக்கல.. அதுக்குள்ள என் செல்போன் சிணுங்க, எடுத்து பேசினதுல.. சாரி.. கேட்டதுல.. எங்க ஆபிஸ் மேனேஜன்.. உடனடியா ஒரு கிளையன்ட் ஆபிஸுக்கு போய், அங்க நாங்க கொடுத்திருந்த சாஃப்ட்வேர் புரோகிராமில் இருக்க தப்பை எல்லாம் சரி செய்ய சொல்லி உத்தரவு... ஓகே சார்.. (போய்த் தொலையறேன்...) தப்பு பண்றதெல்லாம் நீங்க.. திட்டு வாங்கவும், தப்பை சரி செய்யவும் நாங்களா.. என்ன பொழப்போ..
சுப்ரியா சிரித்தபடி, "ரொம்ப பிஸியா இருக்கீங்க போலருக்கு.. உங்க செல்போன் நம்பர் சொல்லுங்க.. கட் கால் குடுக்கறேன்.. என் நம்பரை ஸ்டோர் பண்ணிக்கங்க.."
நர்சரி பசங்க ரைம்ஸ் சொல்ற மாதிரி, தன்னிச்சையா என் செல் நம்பரை சொன்னேன்.
செல்போன் சிணுங்க, கட் செய்துவிட்டு "தாங்க்ஸ்.. அப்பறம் பேசறேன்.." ஆபிஸ் அவசரம் தொற்றிக் கொண்டது.
அந்த பக்கமா வந்த ஆட்டோவுல ஏறும்போது தான் வினோத் பத்தி கேக்கலையேன்னு ஞாபகம் வந்தது. பையனுக்கு என்ன பேர்னு கேட்டுக்கலியே.. ஒருவேளை என் பேரா இருந்தா, நிச்சயம் வினோத் தான் புருஷன்.
ஆட்டோ நகர ஆரம்பித்தது.. வெளியே எட்டிப் பாத்து கத்தினேன் "பையா.. உன் பேர் என்ன..? "
"வினோத்"
பையன் எனக்கு டாட்டா காட்டிகிட்டிருந்தான். சுப்ரியா சிரிச்சுகிட்டே நடக்க ஆரம்பிச்சா.. ஆட்டோ ஓட ஆரம்பிச்சது, வானவில்லை நோக்கி.
http://new.vikatan.com