Sunday, April 10, 2011

எப்படி ஓட்டளிப்பது? உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள்!




ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் தேர்தல். தேர்தலின் முக்கிய நடவடிக்கை ஓட்டளிப்பது. ஒவ்வொரு குடிமகனும், தவறாமல் இதில் பங்கேற்றால் உண்மையான ஜனநாயகம் தழைக்கும். ஓட்டளிப்பது நமது கடமை. எப்படி ஓட்டளிப்பது என்ற உங்கள் சந்தேகங்களை தீர்க்க இதோ...காலையில் செல்லுங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப் பதிவு நடைபெறும். ஆனாலும் உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாகவே ஓட்டுச் சாவடிக்குச் செல்வது நல்லது. இதனால் கடைசி நேர காத்திருப்பை தவிர்க்கலாம்.வரிசையாக நிற்கவும்ஓட்டுச் சாவடியில் ஆண், பெண், மாற்றுத் திறனாளிகள், முதியோர் என தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்குரிய வரிசையை தேர்வு செய்து அதில் நிற்க வேண்டும்.
ஓட்டுச் சாவடிக்குள்1. ஒவ்வொரு வாக்காளராக ஓட்டு சாவடிக்குள் அனுமதிப்பர். 2. உள்ளே நுழைந்தவுடன், முதல் ஓட்டுப் பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில், உங்கள் பெயர் உள்ளதா, அப்பெயருக்குஉரியவர் நீங்களா என பரிசோதிப்பார். 3. வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டு சிலிப்பை அவரிடம் காண்பிக்க வேண்டும். அதன் பின், உங்கள் பெயரையும், வரிசை எண்ணையும் அவர் சொல்வார். இதன் மூலம் அந்த அறையில் உள்ள தேர்தல் முகவர்கள், உங்களை அறிந்து கொள்வர். 4. அடுத்து நீங்கள் 2வது அலுவலரிடம் செல்ல வேண்டும். அங்கு அவர் உங்கள் ஆட்காட்டி விரலில் அழிக்க முடியாத மையை தடவுவார். அதன்பின், வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண்ணை பதிவு செய்வார். 5. அதன்பின், அப்பதிவேட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் அல்லது இடதுகை பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். அவர் கையெழுத்து இடப்பட்ட அடையாள சீட்டை உங்களுக்குத் தருவார். 6. அடுத்து 3வது அலுவலரிடம் நீங்கள் செல்ல வேண்டும். அவர் 2வது அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் சீட்டை பெற்றுக் கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத்தின் பொத்தானை இயக்குவார். இப்போது நீங்கள் ஓட்டளிப்பதற்கான அனுமதியை பெற்றுவிட்டீர்கள் என்று பொருள்.ஒருகணம் சிந்தியுங்கள்7. அடுத்து ஓட்டுப் பதிவு இயந்திரம் உள்ள இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். ஒரு கணம், ஒரேஒரு கணம் ஆழ்ந்து சிந்தியுங்கள். இந்நாட்டை வழிநடத்திச் செல்லும் தகுதியுள்ள சரியான நபரை மனதிற்குள் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக உங்கள் மனசாட்சிப்படி, நீங்கள் நேர்மையாக நடக்க வேண்டும். அதன்படி உங்கள் மனதிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு நேராக இருக்கும் நீலநிறப் பொத்தானை அழுத்துங்கள். "பீப்' ஒலி கேட்கும். அதேநேரம் உங்கள் வேட்பாளரின் சின்னத்திற்கு நேராக சிவப்பு ஒளி ஒளிரும். ஒருமுறை பொத்தானை அழுத்தினால் போதும். இப்போது உங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது நிச்சயம். இத்துடன் ஓட்டுச்சாவடிக்குள் உங்கள் பணி முடிந்து விட்டது. அங்கே நிற்க கூடாது.நீங்கள் யாருக்கு ஓட்டளித்தீர்கள் என்பது, உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

பூத் சிலிப்போட்டோவுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைவருக்கும் ஓட்டு இருக்கும். மார்ச் 16ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்குக் கூட வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு தேர்தல் கமிஷன் அடையாள அட்டையை அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் தேர்தல் கமிஷனே, அடையாள சீட்டுகளை (பூத் சிலிப்) வீடுதோறும் வினியோகித்து வருகிறது. அடையாள சீட்டு உங்களைத் தேடி வந்தால் ஓட்டு உள்ளது என்று அர்த்தம். இல்லையெனில் ஓட்டுச் சாவடிக்குப் போய் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஓட்டளிக்க விரும்பாதோர்..நீங்கள் எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் அதிருப்தியை பதிவு செய்யவும் சட்டம் அனுமதிக்கிறது. நீங்கள் ஓட்டளிக்க விரும்பாவிட்டால், உடனே அதை ஓட்டுச் சாவடி தலைமை அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். அவர் உங்களிடம் இருந்து ஓட்டுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு, இவர் ஓட்டளிக்க விரும்பவில்லை என தனியே ஒரு பதிவேட்டில் குறித்துக் கொள்வார். அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். இப்போது நீங்கள் "49 ஓ' போட்டுவீட்டீர்கள் என பொருள்.வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் கவலை வேண்டாம். தேர்தல் கமிஷன் வழங்கும் ஓட்டு சிலிப் உங்களிடம் இருந்தால் போதும். தாராளமாக ஓட்டளிக்கலாம். அதுவும் இல்லையெனில் நீங்கள் ஓட்டளிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. தேர்தல் கமிஷனின் ஓட்டு சிலிப்பும் இல்லை என்றால், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றைக் காட்டி ஓட்டளிக்கலாம். ரேஷன் கார்டை ஏற்க மாட்டார்கள்.
ஓட்டுச்சாவடியில் சந்தேகம் எழுப்பினால்வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. ஆனால் அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள் இல்லை என்று ஓட்டுச் சாவடியில் உள்ள யாராவது சந்தேகம் எழுப்பினால் என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், இப்படி சில ஆவணங்கள் மூலம் உங்கள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போலியானவர் என நிரூபிக்கப்பட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் பெயரில் ஒருவர் வாக்களித்து இருந்தால் என்ன செய்வது? முதல் ஓட்டுப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என பரிசோதிப்பார். உங்கள் பெயரில் வேறு யாரேனும் ஓட்டுப் போட்டு இருந்தால் அதை உடனே ஓட்டுச் சாவடி தலைமை அலுவலரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய ஓட்டுச் சீட்டு (டென்டர்ட் பேலட் பேப்பர்) அளிக்கப்படும். அதைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் கையெழுத்திட வேண்டும். நீங்கள் ஓட்டளித்ததும், அதை ஓர் உறையில் இட்டு தனியே வைத்துக் கொள்வர். இங்கு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது...
நீங்கள் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டளிக்க முடியாது என்பதுதான். புகார் தெரிவிக்க..மிரட்டுபவர்கள், பணம் கொடுக்க முற்படுவோர், பிரச்னை குறித்து யாரிடம் முறையிடுவது? போலீசாரிடம் கூறலாம். தொகுதி அளவில், ஓட்டுப்பதிவு அலுவலர், துணைத் தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், மாநில தலைமை தேர்தல் அலுவலர்(044-2567 0390), தேர்தல் பார்வையாளர்களை அணுகலாம்.