Tuesday, April 12, 2011

அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை


சென்னை: ""வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்தால், அந்த தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும். தேர்தல் நடந்த பின் கூட, அந்தந்த தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும்,'' என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் எச்சரித்துள்ளார். இதையடுத்து, சில தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் பிரசாரம், மாலை 5 மணியுடன் முடிந்து விட்டது. இதன்பின், "டிவி'க்களில் கூட பிரசாரம் செய்யக் கூடாது. செய்தி தவிர, பிரசாரமாக ஒளிபரப்பினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக் கூடிய வகையில் வழக்கு பதிவு செய்யப்படும். எஸ்.எம்.எஸ்., மூலமும் பிரசாரம் செய்யக் கூடாது.
தேர்தலில் சில தொகுதிகளில் பணப் பட்டுவாடா செய்வது குறித்து கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையும் மீறி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், அந்த தொகுதிகளின் தேர்தல் தள்ளி வைக்கப்படும். பணப் பட்டுவாடா மற்றும் அதிகளவில் முறைகேடுகள் நடந்தது பற்றி, ஓட்டுப் பதிவுக்கு பிறகு கூட தகவல் கிடைத்தால், அந்த தொகுதியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படும்.


சில தொகுதிகளில், பணம் கொடுப்பதாக அதிகளவில் புகாரும், சில தொகுதிகளில் குறைந்தளவு புகாரும் வந்துள்ளன. இதுவரை, மொத்தம் 33 கோடியே 11 லட்சம் ரொக்கமும், 12 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில், கணக்கு காட்டியதன் அடிப்படையில், 5.18 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஸ்டாலின் அவதூறாக பேசியதாக வந்த புகாரின் பேரில், இன்று (நேற்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, ஜெயலலிதா மற்றும் விஜயகாந்துக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதை பரிசீலித்து, தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும்.


தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக, இதுவரை, 61 ஆயிரத்து 20 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில், சுவர்களை சேதப்படுத்தியதாக, 55 ஆயிரத்து 254 வழக்குகளும், வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக, 2,850 வழக்குகளும், வழிபாட்டுத்தலங்களை தவறாக பயன்படுத்தியதாக, 24 வழக்குகளும், சட்டவிரோத கூட்டங்கள் நடத்தியதாக, 154 வழக்குகளும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, 975 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.பணப் பட்டுவாடாவில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் பணம் கொடுப்பதாக புகார்கள் வருகின்றன. ஆனால், பறக்கும் படையினர் அங்கு செல்வதற்குள், அவர்கள் பணத்தை கொடுத்து முடித்து ஓடி விடுகின்றனர்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.


கொளத்தூரில் தடை?எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு பிரசாரத்தின் சுருதியைக் குறைத்த தேர்தல் கமிஷன், பண வினியோகத்தை தடுக்க வங்கிக் கணக்குகளை கண்காணித்தல், வாகனச் சோதனை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கோடிக்கணக்கில் பணம், பொருள், நகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுவதும் பண வினியோகம் தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் கமிஷன், வி.ஐ.பி., தொகுதிகளான திருவாரூர், ஸ்ரீரங்கம், ரிஷிவந்தியம், கொளத்தூர் மற்றும் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.மதுரையில் அழகிரி அதிகார எல்லையில் வரும் தொகுதிகள் மீது, கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தொகுதிகளில் பண வினியோகம் நடந்தால், உடனே தேர்தலை ரத்து செய்யவும் தேர்தல் கமிஷன் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.