சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இன்று காலை முதல் விறு, விறு ஓட்டுப்பதிவு நடந்து வருவதற்கு என்ன காரணம் என ஆங்காங்கே அரசியல் கட்சியினர் காரணம் தெரியாமல் திகைக்து போயினர். 8 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு முதல் தமிழகம் முழுவதும் நகரம், கிராமம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து சாவடிகளிலும் மக்கள் சாரை, சாரையாக நீண்ட கியூ வரிசையில் காத்து நின்றனர்.
திருச்சியில் வரிசையில் காத்து நின்ற வாக்காளர்கள் என் எவ்வளவு நேரம் வரிசையில் நிற்பது சீக்கிரமாக ஓட்டு போட விடுங்கப்பா என அலுத்துபோய் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனையடுத்து இந்த சாவடியில் கூடுதல் அலுவலகர்களை நியமித்து ஓட்டுப்பதிவு விரைவாக நடத்தப்பட்டது.
மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்திலேயே கூடுதலாக தர்மபுரியில் 63 சதம் ஓட்டுக்கள் பதிவாகின. கரூர். கோவை, மதுரை, சேலம் , திருச்சி என அனைத்து சாவடிகளிலும் 50 சதத்தை தாண்டி பதிவு போய்க்கொண்டிருந்தது. சென்னையிலும் 55 சதம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது.
வெயில் காரணமாக காலையில் மக்கள் வந்தார்களா, அல்லது ஆளும் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க ஆர்வத்துடன் வந்தனரா, அல்லது பணம்பட்டுவாடா காரணமா என ஆங்காங்கே அலசப்பட்டு வந்தது. குறிப்பாக அரசியல் தலைவர்கள் அனைவரும் எங்களுக்கே வெற்றி என எல்லோரும் சொந்தம் கொண்டாடினாலும், உண்மையான வெற்றி தேர்தல் கமிஷனுக்குத்தான் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
தேர்தல் கமிஷனின் ஓட்டுப்போட வாங்க, ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்க என்றும் அழைப்பு விடுத்ததற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளனர் என்றே கருதலாம். இப்போதைக்கு வெற்றி தேர்தல் கமிஷனுக்கே ! அரசியல் ரீதியாக வெற்றி பெற்றது யார் என்பதற்கு இன்னும் 30 நாள் ( வரும் மே 13 ம்தேதி வரை ) காத்திருப்போம்.