Wednesday, April 20, 2011

மதுரையின் "பதட்டம்' தணித்த 30 வயது இளைஞர்


தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும், போலீஸ் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும், "டென்ஷன்' ஏறியது. "மதுரையில் டூட்டி போட்டு விடுவார்களோ...?' என, அச்சம் நிலவியது.


இப்படி பலரும் விலகியிருக்க விரும்ப, மதுரையில் சுமுகமாக தேர்தல் நடத்தி முடிக்க, எஸ்.பி.,யாக தேர்தல் கமிஷன் தேர்வு செய்தது 30 வயதே ஆன "ஆஸ்ரா கர்க்' இளைஞரைத்தான்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆஸ்ரா கர்க், பி.இ., எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்தவர். படித்து முடித்த கையோடு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று, 24 வயதில் ஐ.பி.எஸ்., அதிகாரியானார். வேலூரில் பயிற்சி எஸ்.பி., திருவாரூரில் கூடுதல் எஸ்.பி.,யாக பதவி வகித்து, தனது 28வது வயதில் திருநெல்வேலி எஸ்.பி.,யாக 2008ல் நியமிக்கப்பட்டார்.அங்கு பணியில் இருந்தபோது, கூலிப்படை கும்பல், மாமூல் வசூலிக்கும் ரவுடிகள், தாதாக்களின் பட்டியலை தயாரித்து ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துக்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்தார். போதை மருந்து கடத்தல் கும்பல், ரவுடிகள், "குண்டர்' தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மதுரை ஆறாவது சிறப்புக்காவல் படையின் கமாண்டராக கடந்தாண்டு ஆஸ்ரா கர்க் இடமாற்றம் செய்யப்பட்டார். பின், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, மதுரை எஸ்.பி.,யாக கடந்த மார்ச் 22ல் பொறுப்பேற்றார்.கமிஷனராக பொறுப்பேற்றதுடன், தனது மொபைல் எண்ணை வெளியிட்டு, "புகார் தொடர்பாக யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்னிடம் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்' என, அறிவித்தார். இதன் விளைவு தினமும் 150 போன் அழைப்புகள். அத்தனைக்கும் பதிலளித்து, புகார் மீது தேவையான நடவடிக்கை எடுத்ததோடு, சட்டம் ஒழுங்கிலும் கவனம் செலுத்தினார். வாகன சோதனையில் கணக்கில் வராத மூன்று கோடி ரூபாயை அரசு கஜானாவில் சேர்த்தார். பணியில் நேர்மையாக இருந்தவர்களை பாராட்டியும், மெத்தனமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தார். தேர்தல் தொடர்பான வன்முறை, விதிமீறல் என 106 வழக்குகளை பதிவு செய்தார்.


தேர்தல் பணி குறித்து அவர் கூறும்போது, ""தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்டவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததற்கு நான் மட்டுமே காரணமல்ல. போலீசார் உட்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் மட்டுமே இது சாத்தியமானது,'' என்றார் அடக்கமாக.ஆஸ்ரா கர்கிற்கு சபாஷ்!


"பல்டி' அதிகாரிகளுக்கு பறிபோன பதவிகள் : சட்டசபை தேர்தலில், தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத அளவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மதுரைதான். மேலூர் தொகுதியில் தி.மு.க.,வினர் தாக்கியதாக (உதவி தேர்தல் அதிகாரியான) தாசில்தார் காளிமுத்து தேர்தல் கமிஷனில் புகார் கூறினார். ஓரிரு நாளில் தாசில்தார் காளிமுத்து, தி.மு.க.,வினர் தன்னை தாக்கவில்லை என, "பல்டி' அடித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார்.சில நாள் இடைவெளியில், காளிமுத்து தனது புகாரில் இருந்து, "ஜகா' வாங்கியதால், அவரது இடத்தில், சமூகநலத்திட்ட தாசில்தார் கங்காதரன் நியமிக்கப்பட்டார். இதனால் காளிமுத்துவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியுமான ஆர்.டி.ஓ., சுகுமாறன், தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யும்படி, தன்னை கலெக்டர் சகாயம் நிர்ப்பந்திப்பதாகக் கூறிவிட்டு, உடனடியாக மருத்துவமனையில் "அட்மிட்' ஆனார்.


இதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷனும் நடவடிக்கை மேற்கொண்டது. கலெக்டர் சகாயம் நேர்மையானவர் என கூறி, அவரை குற்றம்சாட்டிய ஆர்.டி.ஓ., சுகுமாறனை, கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக இடமாற்றம் செய்து, பின் சஸ்பெண்டும் செய்தது. அதன் பின் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் வீடு திரும்பினார். இப்போது பதவியில்லாமல் உள்ளார். தமிழக வாக்காளர்களை விட, "சும்மா' இருக்கும் இந்த அதிகாரிகள், தேர்தல் முடிவுகளை அதிகம் எதிர்நோக்கி உள்ளனர். அரசியல்வாதிகளைப் போல, இவர்களின் எதிர்காலத்தையும் தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர்