Saturday, April 9, 2011

தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது சவால்: முறைகேடுகளை தடுக்க குரேஷி தீவிரம்

புதுடில்லி: தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக அரசியல் கட்சிகள் செய்யும் முறைகேடுகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இத் தேர்தலை நடத்துவது எங்களுக்கு சவாலாகும் என்று அவர் தெரிவித்தார். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகள் இந்த முறை அதிகரித்துள்ளது. இதனால், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை பெறும் முயற்சி கணிசமாக தடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் கடுமையாக பரிசோதிக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எடுத்து செல்லப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடிகளால் வெறுத்துப் போன கட்சித் தலைவர்கள், தேர்தல் கமிஷனை விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதாக முதல்வர் கருணாநிதியும், தேர்தல் கமிஷன் அத்துமீறி செயல்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசும் குறை கூறிவருகின்றனர்.


இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: தேர்தல் கமிஷனின் புதிய நடைமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கி விட்டோம். அந்த கூட்டத்தில் கூறப்பட்டவைகளைத் தான் தற்போது நடைமுறை படுத்தி வருகிறோம். புதிதாக நாங்கள் ஏதும் செய்து விடவில்லை. தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடக்க வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு. மக்கள் எதிர்பார்ப்பது போல இந்த தேர்தல் வெளிப்படையானதாக, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகிறோம். குறிப்பாக தேர்தல் செலவீனம் குறித்து அதிக விழிப்போடு இருக்கிறோம். அதிகம் செலவழிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல, கணக்கில் வராத பணம் அதிகம் புழங்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில இடங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாதது. தமிழகத்தில் மட்டுமல்ல, தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது.


அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என நாங்கள் கண்டிப்புடன் இருப்பதால், ஆளும் கட்சியினருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் செயல்படுகிறோம்; வரம்பு மீறவில்லை. ஆனால், எங்களது இந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் பாராட்டுகின்றனர். எங்களது அதிரடி நடவடிக்கையால் 53 கோடி ரூபாய், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 42 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாங்கள், அரசியலமைப்பு சட்டப்படி எங்கள் அதிகார வரைமுறைக்குட்பட்டு தான் செயல்படுகிறோம். கட்டுப்பாடற்ற தேர்தல் தில்லுமுல்லுகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது. உண்மையாகவும், அக்கறையாகவும் எங்கள் கடமையை செய்வது தவறா? தமிழகத்தில் தேர்தலை நடத்துவது எங்களுக்கு சவாலாக உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் கூறிய விதிமுறைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தான் செயல்படுத்தி வருகிறோம். எனவே, நாங்கள் தொல்லை கொடுப்பதாக அரசியல் தலைவர்கள் சொல்வதை ஏற்க முடியாது.


எங்களது நடவடிக்கைகளை பாராட்டி பொதுமக்கள் எங்களுக்கு தினமும் மொபைல் போனில் ஏராளமான எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி ஊக்குவித்து வருகின்றனர். தமிழகத்தில் ஊடகங்கள் விஷயத்திலும் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். தமிழக தேர்தலில் பண ஆதிக்கம் செலுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சவாலாகத் தான் உள்ளது. எனினும், அம்மாநில அரசு எங்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். ஊழலை ஒழிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த அன்னா ஹசாரே போன்றவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி அரசை வற்புறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. ஆனால், குற்றப் பின்னணி உள்ளவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் சீர்திருத்த நடைமுறைகள் கொண்டுவர வலியுறுத்துகிறோம். அவை அமலானால், கிரிமினல்கள் மற்றும் ஊழல் புரிந்தவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அத்துடன், தேர்தலுக்கு அரசு பணம் செலவழிக்கும் நடைமுறையும் வந்தால், இம்மாதிரி நபர்கள் அதிகாரப் பதவிகளுக்கே வரமுடியாது. இவ்வாறு குரேஷி கூறினார்.