Friday, April 15, 2011

காங்கிரசை கலங்கடித்த இலங்கை தமிழர் பிரச்னை: மிரண்ட வேட்பாளர்கள்


இந்தியாவின் சக மாநில மக்களை போல், பார்க்கபட்டவர்கள் தான் இலங்கை தமிழர்கள். அந்த அளவிற்கு நம் தேசத்திற்கும், அவர்களுக்குமான நட்பு கொண்டாடப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் என்றால் தமிழகம் கொந்தளித்தது. இலங்கை போராட்டக் குழுக்களுக்கு தமிழக கட்சிகள் போட்டி போட்டு ஆதரவு கொடுத்தன.


இலங்கை தமிழர் விவகாரத்தில் நமக்குள்ள கடமையை உணர்ந்து செயல்பட்டவர் மறைந்த பிரதமர் இந்திரா. போராளிக் குழுக்களுக்கு, "ரா' அமைப்பு மூலம் பயிற்சி கொடுத்து, போராட்டத்திற்கு நேரடி ஆதரவு தந்தார். இலங்கை தமிழர் போராட்டத்திற்கு எம்.ஜி.ஆரும் மிகப்பெரிய உதவியை வழங்கினார். "டெசோ' மாநாடு போன்றவற்றை நடத்தி கருணாநிதியும் தன் பங்கிற்கு ஆதரவு கொடுத்தார். இப்படி, கட்சி பேதம் இல்லாமல் இலங்கை தமிழர்களுக்காகவும், அங்குள்ள போராட்டக் குழுக்களுக்காகவும் உதவிய காலத்திற்கு முற்றுப்புள்ளி ஏற்படுத்திய சம்பவம் ராஜிவ் கொலை. இலங்கை விவகாரத்தை அலசும் அத்தனை ஆய்வாளர்களும், ராஜிவ் கொலைக்கு முன் - பின் என்று இரு பிரிவாகவே அதை பார்க்கின்றனர்.


ராஜிவ் கொலை சம்பவத்திற்கு பிறகு, இலங்கை தமிழர்கள் குறித்த பிரச்னையில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும், தமிழகத்தில் தங்களது கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, எண்ணிய பல கட்சிகள் கை விரிக்க துவங்கி விட்டன. இலங்கை தமிழர்களுக்காக தனது அழுத்தமான குரலை வைகோ தொடர்ந்து பதிவு செய்த போதிலும், ம.தி.மு.க., கட்சிக்கு தேர்தலில் செல்வாக்கு உயரவில்லை. இவையெல்லாம் இலங்கை தமிழர்கள் பிரச்னையில் தமிழர்களின் அக்கறை குறைந்ததை காட்டியதாகவே அரசியல் கட்சியினர் எண்ணினர். இதனால், முக்கிய கட்சிகள் பல இந்த விஷயத்தில் சற்று இடைவெளி விட்டே நின்று கொண்டன. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக இலங்கை தமிழர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளானதும், இறுதி கட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்டதும், தமிழக மக்களின் மனதை உலுக்க செய்தது. அத்துடன் கடந்த சில மாதங்களாக, தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதும், பிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. இரண்டு சம்பவங்களையும் ஒன்றாக பார்க்கும் மனபக்குவத்திற்கு வந்த தமிழக மக்களுக்கு யார் மீது கோபமோ... இல்லையோ... ஆனால், இந்த இரண்டு விஷயத்திலும் அமைதி காத்து வந்த காங்கிரஸ் கட்சியின் மீது தீராத வெறுப்பாக அது மாறியது.


இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பெரும் தடையாக இலங்கை பிரச்னையே எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டது. மத்திய உளவுத் துறையினரும் இதை உறுதி செய்து மேலிடத்திற்கு தெரியப்படுத்தினர். விலைவாசி பிரச்னை, ஸ்பெக்ட்ரம் முறைகேடு, குடும்ப அரசியல் என, முக்கிய பிரச்னைகளில், தி.மு.க., மாட்டி தவித்ததால், இலங்கை தமிழர்கள் பிரச்னை, அவர்களுக்கு, ஆறு, ஏழாவது இடத்துக்கு போய்விட்டது. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இலங்கை பிரச்னையே தோல்விக்கு அழைத்து செல்லும் பிரதானமான பிரச்னையாக வெடித்தது. இந்த விஷயத்தில் சற்று அனுசரித்து சென்றால் மட்டுமே, தேர்தலில் தமிழக மக்களின் மனதை நெருங்க முடியும் என, நினைத்த மேலிட காங்கிரஸ் சற்று இறங்கி வந்தது. அதனால் தானோ என்னவோ, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தொடர்பாக சென்னையில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு குறித்து பேசி சென்றார். குறிப்பாக அவர்கள் சம உரிமை பெறவும், மறுவாழ்விற்காகவும், புனரமைப்பு பணிக்காகவும் மத்திய அரசு பல்வேறு உதவிகளையும், தேவையான நிதி உதவியையும் செய்து வருவதாக குறிப்பிட்டார்.


"இதெல்லாம் பொய் வேஷம்; களத்தில் காங்கிரசை காணாமல் அடிக்க வேண்டும்' என, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட, 63 தொகுதிகளிலும், "நாம் தமிழர் இயக்கம்' உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கின. ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது இவர்கள் கொடுத்த நெருக்கடியால், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இளங்கோவன் தோல்வி, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் சிதம்பரத்தின் வெற்றி அமைந்தது போன்ற திருப்பங்கள் நிகழ்ந்தன. இந்த தேர்தலில், ஏற்கனவே கோஷ்டி பூசலாலும், உள்ளடி வேலையாலும் கலங்கி நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இலங்கை பிரச்னையும் சேர்ந்து கொள்ள உச்சக்கட்ட தோல்வி பயத்தில் உறைந்தனர். பல பிடிவாதங்களுக்கு பின், தி.மு.க., கூட்டணியில், 63 தொகுதிகளை பெற்ற போதிலும், வெற்றி வாய்ப்பை பாதிக்கும் இலங்கை தமிழர் விவகாரத்தில், ஆரம்பத்திலேயே, சில சரியான அணுகுமுறைகளை பின்பற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தவறிவிட்டனர். இலங்கை தமிழர் பிரச்னை தமிழகத்தில் மறுபடியும் ஓட்டு வங்கியை உருவாக்கியுள்ளதா என்பதற்கான விடை, காங்கிரசின் வெற்றி, தோல்விகள் மூலம் தெரியவரும். அதன் மூலமாக, மற்ற கட்சிகளுக்கு இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்பதில் தெளிவு ஏற்படும்.