Sunday, April 17, 2011

வெல்லட்டும் புனித யுத்தம்: உரத்த சிந்தனை, எம்.ஆர். இராமலிங்கம்


காந்தியவாதி அன்னா ஹசாரே, இந்திய நாட்டையே கலக்கி விட்டார். அவரது உண்ணாவிரதப் போராட்டம், சமுதாயத்தில் பல்வேறு தரப்பினரை சிந்திக்க வைத்திருக்கிறது. இவர் வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை அரசியல்வாதிகள் உயிரோட்டமாக கொண்டு வருவரா என்பது இனி தெரியும். அதற்கான சட்டவரைவு மசோதாவை, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு முடிவு செய்யும்.


மொரார்ஜி தேசாய் அரசில் இருந்த, சட்ட அமைச்சர் சாந்தி பூஷண் மற்றும் அவர் மகனும், சிறந்த சட்ட அறிஞருமான பிரசாந்தி பூஷண் ஆகிய இருவரும், இதற்கு உருத் தரலாம். பிரசாந்தி பூஷண் சுபாவமே, நியாயத்திற்கு புறம்பான சட்ட நெறிமுறைகளை, பணத்திற்கு ஆசைப்பட்டு செய்யாதவர். சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள, "ஆம்புட்ஸ்மென்' பாணியில் இந்த லோக்பால் மசோதா உருவாகும்போது, அது சமுதாயத்தில் புரையோடிப் போய் இருக்கும் லஞ்சத்தை அடியோடு தீர்க்குமா என்ற கேள்வி எழுகிறது. சுதந்திர இந்தியாவில் பெரும் வளர்ச்சி பெற்ற பெரிய கம்பெனிகள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் இழுத்தடிக்கும், தாமதித்த நீதி நடைமுறைகள் எல்லாமே, லஞ்சம் வளரக் காரணமாக, ஏதாவது ஒரு விதத்தில் அமைந்திருக்கின்றன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, அரசை இயக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், கிரிமினல் தொடர்பு இல்லாத நடைமுறையில் தேர்வு செய்யப்படும் வழி காண, இன்னமும் தேர்தல் கமிஷன் காத்திருக்கிறது. இதில் சீர்திருத்தம் கொண்டுவரச் சட்டம் இயற்றாத போது, இந்த மசோதா மட்டும், ஒரே நாளில் நாட்டை மாற்றிவிடுமா என்ன?


சுதந்திரப் போராட்ட காலத்தில், காந்தி மேற்கொண்ட சத்யாகிரக நடைமுறை, ஏழை முதல், பணக்காரர்களை ஒரே கருத்தில் கொண்டு வந்து இயக்க வைத்த நடைமுறை. அன்று எல்லாருக்கும் பொது எதிரி, "பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி!' சுதந்திரம் பெற்ற பின், எல்லாரும் இந்நாட்டு மன்னர்; அதில் கடமை பொறுப்புகள், காற்றில் பறந்தன. நேரு பிரதமராக இருந்த போது, அவர் தவறைச் சுட்டிக்காட்ட அல்லது இடித்துரைக்க, சர்தார் படேல் இருந்தார். அவர் மறைவுக்குப் பின், கோவிந்த வல்லப பந்த், மகாவீர் தியாகி போன்றோர் இருந்தனர். ஆசார்ய கிருபளானி போன்ற அப்பழுக்கற்ற தலைவர்கள் கருத்தை, நேரு கேட்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. அவசர நிலைக்காலத்தில், ஜனநாயகமே தடம்புரண்ட போது, சர்வாதிகார உணர்வு மேலோங்கிய போது, பொதுமக்கள் கருத்துக்கு உருவம் தந்தவர், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அவர் கூறியது முழுமைப்புரட்சி. அந்த முழுமைப் புரட்சியை ஆதரித்த லாலு பிரசாத் எப்படி, மற்றொரு அரசியல்வாதியான நிதிஷ் குமார் எப்படி? ஒப்பிட்டுப் பாருங்கள்.


நம் தமிழகத்தில், மாபெரும் தலைவரான காமராஜர், 1975, அக் 2ம் தேதி அன்று காலமானார். அவர், அவசர நிலைக்கு எதிரி. அவரது செயலராக இருந்த, எஸ்.வெங்கட்ராமனிடம், அன்று காலையில் அவர் முதலில் கேட்ட கேள்வி, "ஜெ.பி.யை சிறையில் இருந்து இந்திரா விடுவித்தாரா?' என்பது தான். அவரிடமிருந்து, "இல்லை' என்று பதில் வந்ததும், அவர் மனம் அதிக வேதனைப்பட்டு நொந்தது. காரணம், காங்கிரசை நல்ல இயக்கமாக வளர்த்த அவருக்கு, இந்திராவின் செயலில் ஒப்புதல் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியில், துதிபாடும் கூட்டத்தின் கை மேலோங்கி விட்டது. அண்ணாதுரை, "திராவிட நாடு' கேட்ட தலைவர்; வித்தியாசமானவர். தலைவர் என்று ஏற்றுக் கொண்ட ஈ.வெ.ரா., இளம் பெண்ணை, இரண்டாவது மனைவியாக மணம் செய்ததை ஆதரிக்காமல், வேறுபாதை கண்டவர். பின்பு அரசியலில் வெற்றி பெற்றபின், குறிப்பாக ராஜ்யசபா எம்.பி.,யான பின், "இந்தியா என்பது பெரிய தேசம். அதில் மக்களை ஈர்க்கும் தலைவர்கள் உள்ளனர்' என்று உணர்ந்து செயல்பட்டவர். அவரது ராஜ்யசபா பேச்சுக்களில் சில அவற்றுக்கு சாட்சி. அதனால், அவர் ஓரளவு மனச்சாட்சிப்படி நடந்ததால், ஊழலில் திளைக்கவில்லை; ஆதரிக்கவும் இல்லை. இதை வேறு விதமாகச் சொன்னால், ஆளுவோருக்கும் சரி, பெரிய நிர்வாகத்திலும், பொதுப் பணி ஆற்றும் இயக்கங்களுக்கும், இந்த மாதிரி முற்றிலும் நேர்மையான, விஷயம் தெரிந்த, உலக நடப்புகளுடன் வழிநடத்த, ஒரு சக்தி தேவை. அது தனி மனிதராக அல்லது இயக்கமாக அமையலாம். அதை ஆங்கிலத்தில், "கிரிட்டிக்கல் இன்சைடர்' என்பர்.


காந்தி, தன் சுயசரிதையில் அதை, "அந்தராத்மா' என்பார். தமிழில் அதை, "உள்மனதின் நல்ல ஒலி' என்று கூட கூறலாம். வள்ளுவர் அதை, "பூதங்கள் ஐந்தும் அனைத்தே நகும்' என்று துறவு அதிகாரத்தில் கூறுவார். இன்றைய நிலையில், அந்த பழைய விளக்கங்கள் அப்படியே பொருந்தாது. ஜனநாயகம், உலக அளவில் இணைந்த பொருளாதாரம், இணையதள செய்தித் தொடர்பு என்று பரந்து, உலகமே சுருங்கிய பின், அதற்கேற்ற நடைமுறை தேவை. இந்திய மண்ணின் சுபாவமே, பொறுத்திருந்து பொங்கி எழுவது என்பதுதான். அதே சமயம், எல்லாரும் பின்பற்றும் தலைவர் என்பவர், இந்த மண்ணை ஒட்டிய நடைமுறைகளைப் பின்பற்றினால், அதை மக்கள் அப்படியே ஏற்பர். அதற்கு ஹசாரே தற்போது, முதலில் வடிவம் தந்திருக்கிறார். அதனால், அவரே தன் பேட்டியில், "இப்போது தான் பயணம் தொடங்கியிருக்கிறது' என்கிறார். இப்பயணம் எந்த அளவு உருப்பெறும் என்பது, வரும் சுதந்திர நன்னாளுக்குப் பின் தெரியும். அதுமுழு வெற்றி பெற்றால், நம்நாட்டிற்கு, பாமர மக்களுக்கு கிடைக்கும் சுதந்திர தினப் பரிசு. email: ramalingamcff@gmail.com


எம்.ஆர். இராமலிங்கம், பத்திரிகையாளர்


தினமலர்