Monday, April 18, 2011

இருண்ட காலம் : இருளில் தடுமாறும் மக்கள் : இந்நிலை மாறுவது எப்போ?


அன்று, 2 மணி நேரம்; நேற்று, 3 மணி நேரம்; இன்று, 4 மணி நேரம்... என, மின்வெட்டு ஏற்படும் நேரத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது, மின்(தடை) வாரியம். இப்படியே போனால், "மின் சப்ளை இருக்கும் நேரம், மதியம் 2.00 - 4.00 மணி' என்ற அறிவிப்பு வந்தாலும் வரக்கூடும். தாறுமாறாக ஏற்படும் மின்வெட்டால் மக்கள், தொழில்துறையினர், விவசா யிகள் என பல தரப்பினரும் கொந்தளித்து போயுள்ளனர்.


தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் மட்டும் தினசரி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படும். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மின் உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி அதிகரித்தது. அரசு மின் வினியோகம் குறித்து சரியாக திட்டமிடாததால் மின்வெட்டு அதிகரித்தது. குறிப்பாக 2008ம் ஆண்டு முதல் மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்தில் ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி, விசைத்தறி, பவுண்டரி, இன்ஜினியரிங் தொழிற்சாலை, கிரைண்டர், மிக்சி உற்பத்தி நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் மற்றும் இதர உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும்.


இந்நிறுவனங்களில் மின்வெட்டால் உற்பத்தி இழப்பு, ஜெனரேட்டர் பயன்படுத்துவதால் கூடுதல் செலவு, மின்வெட்டுக்கு ஏற்ப தொழிலாளர்களின் வேலை நேரங்களை மாற்றுவதால் ஏற்படும் பாதிப்பு, ஜெனரேட் டருக்கான புதிய முதலீடு என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தினமும் மூன்று மணி நேரம் மின்வெட்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மாலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர இரவில் இரண்டு முறை தலா அரை மணி நேரமும், பகலிலும் அரை மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுகிறது. தினமும் 9 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் திணறி வருகின்றன.இதேபோல் பருவ மழை குறைவு, நிலத்தடி நீர் உபயோகம் அதிகரிப்பு ஆகியவற்றால் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.


எனவே தினமும் ஆறு மணி நேரம் கிணறு மற்றும் போர்வெல் மோட்டார்களை இயக்கினால் மட்டுமே பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். ஆனால், எந்த நேரத்தில் விவசாய மோட்டார்களுக்கு மின்சாரம் சப்ளையாகும் என்றே தெரியாத நிலை நீடிக்கிறது. இதனால் பல ஊர்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்கின்றன. வீடுகளில் தினமும் மூன்று மணி நேரம் மின் வெட்டு என அறிவிக்கப்பட்டு, தினமும் பல முறை ஆறு மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இரவில் தூக்கமிழக்கும் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்; மின்வாரியத்துக்கு சாபம் விடாதது தான் குறை.


விளம்பரத்துக்கு விரயம்: வீடுகளுக்கான மின் சப்ளையில் அடிக்கடி வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதியுறும் நிலையில், கோவை நகர், புறநகர் பகுதிகளின் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் நள்ளிரவு நேரத்திலும் ஒளிருகின்றன; விளம்பர பலகைகளின் எண்ணிக்கை கோவை நகரில் மிக அதிகம். மக்கள் நடமாட்டம் அறவே இல்லாத இரவு நேரத்திலும் விளம்பர பலகைகள் அதிகளவு மின்சாரத்தை குடித்தவாறு ஓளிருகின்றன. அதே வேளையில், பல பகுதிகள் மின் சப்ளையின்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன. மின் சப்ளை சீராகும் நாள் வரை (!) இரவில் விளம்பர பலகைகளுக்கான மின் சப்ளையை நிறுத்தினால், விரயமாவதை தடுக்கலாம்.


நெருக்கடியில் மில்கள் : சரமாரி மின்வெட்டு குறித்து அன்னூர் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறியதாவது:பஞ்சு விலை ஒரு பேல் 62 ஆயிரத்தை எட்டி விட்டது. ஆனால் நூல் விலை அதற்கு ஏற்ப உயரவில்லை. வங்கி கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் சம்பளம் 180லிருந்து 200 ரூபாயாக உயர்ந்து விட்டது. பஞ்சு, நூல் ஆகியவற்றுக்கான போக்குவரத்து செலவும் கூடி விட்டது. ஸ்பின்னிங் மில்கள் லாபமில்லாமல் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மில்கள் மொத்த உற்பத்தி திறனையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வழங்கும் மின்சாரத்துக்கு விற்பனை வரி சேர்த்து ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 ஆகிறது.


ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொழிற்சாலைக்கு இதை விட குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இங்கு கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், பகலில் மூன்று மணி நேரம், மாலையில் நான்கு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என அறிவிக்கப்பட்ட எட்டு மணி நேர மின்வெட்டுடன், அறிவிக்கப்படாமல் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதால், நூல் அறுந்து விடுகிறது. மீண்டும் மின் சப்ளை வந்தவுடன் இயந்திரங்கள் முழுஅளவில் இயங்க மேலும் அரை மணி நேரம் தேவைப்படுகிறது. மில்லில் முக்கிய பிரிவை மட்டும் ஜெனரேட்டரில் இயக்க 22 லட்சம் ரூபாய்க்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டி உள்ளது. முழு அளவில் இயக்க 10 ஆயிரம் ஸ்பிண்டில் உள்ள மில்லுக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஜெனரேட்டர் பயன்படுத்தி இயக்கினால் ஒரு யூனிட்டுக்கு 13 முதல் 14 ரூபாய் செலவாகிறது. இந்த அளவுக்கு கூடுதலாக செலவு செய்து நூல் உற்பத்தி செய்தால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நம் பகுதியில் பருத்தி மிக குறைவாக உற்பத்தியாகிறது.


எனவே லாரி வாடகை கொடுத்து ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபிலிருந்து வாங்க வேண்டி உள்ளது. உற்பத்தியாகும் நூலையும், லாரி வாடகை செலவழித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகமுள்ள குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டி உள்ளது. இவ்வளவு கூடுதல் செலவையும் சமாளித்து மில்களை இயக்கி வருகிறோம். இந்நிலையில் தற்போதுள்ள மின்வெட்டால் மில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


"மின் தடை வாரியம்': மக்கள் ஆவேசம் :


துளசியம்மாள், (குடும்பத்தலைவி): எனது வாழ் நாளில் இப்படியொரு மின்வெட்டை கண்டதே கிடையாது. காலை, இரவு நேர மின் தடையால் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் பாதிக்கப்படுகின்றன. கோடைகாலத்தில் இரவு நேரத்தில் ஏற்படும் திடீர் மின்தடையால் தூக்கம் கெடுகிறது.


சங்கர் (தொழிலாளி): கடுமையான மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட் டுள்ளனர். கோடை காலம் என்பதால், மின்சாரத்தின் தேவை அதிகரித்திருக்கிறது. பேன், ரெப்ரிஜிரேட்டர், "ஏசி', "ஏர் கூலர்' உள்ளிட்ட சாதனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவர். இதனால், மின்தேவை அதிகரிக்கும். மின் தேவை அதிகரிக்கும் போது உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாவிடில் மின்தடை நேரத்தை நீட்டிப்பதை தவிர அரசுக்கு வேறு வழி கிடையாது. முடிந்த வரை மின்சார விரயத்தை மக்கள் தவிர்க்க வேண்டும். தற்போது ஏற்பட்டு வரும் பல மணி நேர மின்வெட்டால் மக்கள் சிரமப்படுகின்றனர்.


பால்பாண்டி: இரவு நேர மின் தடையால் குழந்தைகள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இந்த நிலை எப்போது மாறுமோ என்ற எதிர்பார்ப்பும், கவலையும் அதிகரித்துகொண்டே போகிறது. குளிர் காலத்தில் மின்தடை இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். கோடையில் மின் தடை ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்? மின் தடைக்கு யார் காரணமென ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் பட்டிமன்றம் நடத் துவதை கைவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். தற்போதுள்ள மின் தடை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும், இப்பிரச்னைக்கு மின்வாரியம் எவ்வாறு தீர்வு காணப்போகிறது, அதற்கு எவ் வளவு ஆண்டுகள் பிடிக்கும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.


பிரபு (விவசாயி): மின் தடையால் பயிர்களுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. விளைச்சல் பாதிக்கப்படுகிறது; பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் இருந்தால் மோட் டாரை இயக்கி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். மும்முனை மின்சாரம் இல்லாதததால் மோட்டாரை இயக்க முடிவதில்லை. விளைச்சல் குறையும் போது பொருட்களின் விலை உயருகின்றன. இதனால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.


டாக்டர் சிவசாமி (விவசாயிகள் சங்க தலைவர்): பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மின் வினியோகம் இருக்க வேண்டும். ஆனால், இரவில் விவசாயத்துக்கு 2 மணி நேரம் கூட மின்சாரம் இல்லை. பயிர்கள் காய்ந்து விட்டன. இதே நிலை நீடித்தால் 70 சதவீத பயிர்கள் அழிந்து விடும். அரசு நிர்வாகம், தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எங்களின் குமுறுலை, பிரச்னைகளை யாரிடம் போய் சொல்வது என தெரியவில்லை. வீடுகளில் இரவில் மின்வெட்டு ஏற்படுவது மிக கொடுமையானது. தூக்கமில்லாமல் கொசுக்கடியில் அல்லாட வேண்டியுள்ளது. இப்பிரச்சனைக்கு மாநில அரசை மட்டும் குறைகூறி பலனில்லை. மத்திய அரசின் கீழ் இயங்கும் மின்சார ஓழுங்குமுறை ஆணையமும் பொறுப் பேற்க வேண்டும். சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அனைத்து இடங்களுக்கும் மின்சாரத்தை சமமாக பகிர்ந்து வழங்க வேண்டும்.


தியாகு ("புதிய வெளிச்சம்' நிர்வாகி): மின்வெட்டு, அரசின் இயலாமையை காட்டுகிறது. மின்வெட்டின் போது பின்பற்றப்பட வேண்டிய புதிய மின் கொள்கை உருவாக்கப்பட்டு அமுல்படுத்த வேண்டும். மின்சாரம் எப்போது வரும், போகும் என தெரியவில்லை. இக்கொடுமையை யாரிடம் போய் சொல்வது எனவும் தெரியவில்லை.


ராமசாமி (ஒர்க்ஷாப் உரிமையாளர்): அறிவிக்கபட்ட மின்தடை சரியான நேரத்தில் "கட்' செய்யப்படுகிறது. மறுபடியும் திரும்பி வருவது எப்போது என தெரிவதில்லை. திடீரென "கரன்ட்' கட்டாவதால் லேத்தில் "செட்டிங்' மீண்டும் போடவேண்டும். இதனால், உற்பத்தியும் பாதிக் கப்படுகிறது; காலமும் விரையமாகிறது. அரசும், மின் வாரியமும் தொழில்களை நசிவடைய காரணமாகிவிட்டன.


சம்பத்குமார் (தொழிலதிபர்): ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறை, சம்பள உயர்வு ஆகிய பிரச்னைகளால் தொழில் பாதிப்படைந்துள்ளது. தற்போது நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் தொழிற்சாலையை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்தடையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு "ஆர்டர்களை' குறித்த நேரத்தில் கொடுக்க முடிவதில்லை. "ஜெனரேட்டர்' வைத்து இயக்கினாலும் நஷ்டம்தான் ஏற்படுகிறது. மின்தடையால் சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.


குமரேசன் : தேர்வு காலங்களில் மின்வெட்டு இருக்காது என அறிவித்தனர். ஆனால், தேர்வின் போதும் மின்வெட்டு ஏற்பட்டது. வீடுகளில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பிரிட்ஜ் உள்ளிட்டவை பழுதடைந்து விட்டன. காலை 6.00 மணிக்கே மின்வெட்டு ஏற்படுவதால் வேலைக்கு செல்பவர்கள் சமைக்க கூட முடிவதில்லை.


வில்சன் (தனியார் நிறுவன ஊழியர்): காலையில் எழுந்தது முதல் இரவில் தூங்கச் செல் லும் வரை எப் போது கரன்ட் போகுமோ என்ற கவலை எங்களுக்கு. குறிப்பிட்ட வேலையை குறித்த நேரத்தில் முடிக்காவிட்டால் மாலை முழுவதும் பரபரப்புக்கு ஆளாகி, சிரமப்பட வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம், அறிவிக்கப்பட்ட நேரத்தில் மட் டுமே மின்தடை ஏற் பட்டது. தற்போது பகல், இரவு என சரமாரியாக மின்தடை ஏற்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரை இந்த காலம், இருண்ட காலம் தான். மின் வாரியத்தை "மின் தடை வாரி யம்' என்றே அழைக்கலாம்.


சாவித்திரி (தனியார் நிறுவன ஊழியர்): மின் தடையால் வீட்டு சமையல் வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து வேலைக்கு செல்ல முடிவதில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் சமையல் மற்றும் துணி துவைப்பது என்று எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. "கரன்ட்' இருக்கும்போது வேலைகளை முடிக்க வேண்டியுள்ளது. கரன்ட் பிரச்னை தினமும் ஓயாத தொல்லை.