Saturday, April 16, 2011

ஒரு ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழலா?


சட்டசபை தேர்தலில், 80 சதவீதத்திற்கு அதிகமாக மக்கள் ஓட்டளித்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்பதா? ஆட்சியாளர்கள் மீதிருந்த அதிருப்தி என கொள்வதா? வாக்காளர்கள் கடமை இதோடு முடிந்து விட்டதா? நாம் யாரை தேர்வு செய்ய ஓட்டளித்து இருக்கிறோம்? அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்த ஊழல் கட்சி கையில் அதிகாரம் போகப் போகிறது?


தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், கலாசாரம், ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, "குடவோலை' ஓட்டு முறை மூலம், ஜனநாயகத்தை உலகத்திற்கு கற்றுத் தந்தவர்கள் தமிழ் மன்னர்கள். சர்வ அதிகாரமும் பெற்றவன் மன்னன். அனைவரும் அவன் கொடை கீழ் தான் என்றிருந்த போதும், தமிழ் மன்னர்கள் ஜனநாயகத்தைப் போற்றி வந்திருக்கின்றனர். குற்றமிழைத்தவர்கள், கொலைகாரர்கள், குடிகாரர்கள், சமூக அந்தஸ்து இல்லாதவர்கள், தனக்குப் பின் தன் வாரிசு என்போருக்கெல்லாம் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை என, அன்றே நிர்ணயித்தவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று அவைகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது கண்டு, நெஞ்சம் கனக்கிறது. அன்றைய 10ம் நூற்றாண்டில் மட்டுமல்ல, இன்றைய, 21ம் நூற்றாண்டிலும் தமிழகம் தலை நிமிர்ந்து தான் நின்றது. உலகின் மிகப்பெரும் ஐ.டி., நிறுவனங்கள், நாசா போன்ற விண்வெளி அமைப்புகள், தமிழர்களையும், சீனர்களையும் தான் தங்கள் நிறுவனங்களுக்கு தேர்வு செய்தனர். தமிழர்களின் அறிவுத்திறன், வேகம், முற்போக்கு சிந்தனையே இதற்கு காரணம் என்று பில்கேட்ஸ் முதலானோர் கூறினர்.


இத்தகைய பெருமை பெற்ற தமிழகம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் புரிந்து தமிழ், தமிழன் என்று பேசி, நம்மை ஏமாற்றி, உலகம் நம்மை எள்ளி நகையாட வைத்த கட்சிகளால், இன்று, தலைகுனிந்து நிற்கிறது. ஓட்டளித்த 80 சதவீத மக்கள், இன்றைய ஆட்சியாளரை மாற்றிவிட்டால், இந்த நிலை மாறி விடுமா? தமிழகம் மீண்டும் தலைநிமிர்ந்து விடுமா? ஆட்சியாளர்களுக்கு நாம் அதிகாரம் வழங்குகிறோம், பொறுப்பு கொடுக்கிறோம். அதற்கு ஆட்சியாளர்கள், மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அவர்கள் பதில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தலின் போது மட்டும் தான் இருக்கிறது என்பதும் ஒரு காரணம். மக்கள் நலனுக்காக ஆட்சி செய்ய வேண்டிய நல்லவர்கள் கிடைக்காததால், வாக்காளர்களும், உண்மையான ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாமல், இதுவரை, ஒரே தோசையை திரும்பத் திரும்ப, திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன தீர்வு? புதிய ஆட்சியாளர்களை கொண்டு வர முடியாதா? ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டசபைக்குள்ளும், சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி வேண்டும். அது தரமான, தகுதியான, நிரூபிக்கப்பட்ட, மக்கள் நலம் விரும்பும் சக்தியாக இருக்க வேண்டும். நீதிபதிகள், தேர்வாணைக் குழு நிர்வாகிகள், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என்பன போன்ற பல்வேறு மக்கள் நல முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில், ஆளும் கட்சியின் ஜால்ராக்கள் அல்லது தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்க, இந்த மூன்றாவது சக்தி சட்டசபைக்குள் வர வேண்டும்.


சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி தேவை. அதுவும், தரமும், தகுதியும் வாய்ந்த அரசு சாரா பொது நல அமைப்பாக இருக்க வேண்டும். இன்று ஊழலுக்கு எதிராக, இந்தியாவை உலுக்கிய, இளைஞர்களை கவர்ந்த சமூக ஊழியர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாதிரியான ஒரு காவல் அமைப்பு வேண்டும். அதில் பொதுமக்கள் பெருமளவு பங்கு கொள்ள வேண்டும். இந்த சமூக அமைப்பிலிருந்து பாதி பேர், அரசின் பிரதிநிதிகள் பாதி பேர் என்று சேர்ந்த குழுவே, அரசின் கொள்கைகளை முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவுகளே இறுதியில் சட்டமாக்கப்பட வேண்டும். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆட்சியாளர்களின் செயல்பாட்டுக்கு ஓட்டுரிமை மூலம் மக்கள் தீர்ப்பளிக்கின்றனர். அதுவும், இன்றைய அரசுக்கு தண்டனை தரப்படுகிறதே தவிர, நாளைய நல்ல அரசு தேர்வுக்கான தீர்ப்பாக அது இருப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும் என்றால், அரசின் ஐந்து ஆண்டு கால செயல்பாட்டிலும், மக்களின் பங்கும், பங்களிப்பும் இருக்க வேண்டும். ஓட்டுரிமை பயன்படுத்தும் போது மட்டுமே வாக்காளர்களின் பங்கு அரசியலில் இருக்கிறது என்ற நிலை உள்ளதாலேயே, இம்மாதிரி ஊழல் அரசுகள் வந்து போகின்றன. அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. உள்ளொன்றும், வெளியொன்றும் என இரு முகங்களில் உள்ளதை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.


அரசை யாரெல்லாம் நடத்துகின்றனர்? தமிழ், தமிழன், இந்தியன் என்போரெல்லாம், இந்தியாவின் இறையாண்மையை எப்படி வெளிநாட்டிற்கு விற்கின்றனர்? பன்னாட்டு கம்பெனிகள் எப்படி இந்திய அரசுகளை ஆட்டிப் படைக்கின்றன? இவையெல்லாம் விக்கிலீக்ஸ் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த நிலை தொடராமல் இருக்க, அரசின் கொள்கை முடிவு எடுப்பதில், அதை அமல்படுத்துவதில், வாக்காளர்களாகிய நம் பங்கு இருக்க வேண்டும். அதுவும், ஆட்சி செய்யும் ஐந்து ஆண்டு காலமும் இருக்க வேண்டும். இதற்கு நம் உரிமைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், ஜனநாயக தத்துவத்தை குடை சாய்க்கும் ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடியும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இது சாத்தியம். இதில், பத்திரிகை, ஊடகங்கள் பங்கு மகத்தானது. அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நான்கே நாட்களில் உலகறியச் செய்தது ஊடகங்கள் தான். இதே ஊடகங்கள் தான், தரமுள்ள, தகுதியாக மூன்றாவது சக்தியை சட்டசபைக்குள் கொண்டு செல்ல காரணமாக இருக்க வேண்டும். சட்டசபைக்கு வெளியே வலிமையான மக்கள் சக்தி கொண்ட, தகுதியான சமூக குழுக்களை உருவாக்க பத்திரிகைகள் உதவ வேண்டும். இந்த இரண்டும் நடக்கும்போது, ஊழல் பறந்தோடும்; நேர்மை நெஞ்சு நிமிரும்; தமிழகம் மீண்டும் தலை நிமிரும்.