Tuesday, April 5, 2011

தேர்தல் கமிஷன் கலக்கலால் கலங்குகின்றன கட்சிகள்: மக்கள் நிம்மதி

முன்பெல்லாம் தேர்தல் என்றால், எங்கு பார்த்தாலும், ஒலிப்பெருக்கி சத்தம், பாடல்கள், குத்தாட்டம், அனல் பறக்கும் பிரசாரங்கள், ஒளி அமைப்புகள், சுவர் விளம்பரங்கள் என அமர்க்களப்படும். ஆனால், இப்போது தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள், அரசியல் கட்சிகளுக்கு சோகமாக இருந்தாலும், பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் சமயங்களில், ஒரு கட்சியினர் மீது இன்னொரு கட்சியினர் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்வது வழக்கம். ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. தேர்தல் கமிஷனிடம் வரும் புகார்களின் எண்ணிக்கையும், வழக்கு பதிவுகளும் அதிகரித்துள்ளன. தமிழகத்தில், இதுவரை 52 ஆயிரம் தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. வாகன சோதனை நடத்தி, கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்படுகிறது. அதுமட்டுமன்றி, வேட்பாளர்கள் தங்களது வங்கிக் கணக்கு மூலமே, தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டுமென, புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.வங்கிகளில் ஒரு கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், பரிவர்த்தனை நடந்தால், அதை மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டுமென, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் பணம் வினியோகிப்பதற்கு சிரமப்படுகின்றனர். எங்கு பார்த்தாலும், @பாக்குவரத்தை பாதிக்கும் வாகன ஊர்வங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.


பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால், வீடுகளின் சுவர்கள் தப்பியுள்ளன. ஒவ்வொரு பிரசாரத்தையும் வீடியோவில் பதிவு செய்து, அதன் மூலம் வேட்பாளரின் செலவுக் கணக்கை மதிப்பிடுவதால், அதிகளவில் தோரணங்கள் மற்றும் "கட்-அவுட்'களை காணோம்! இவைஅனைத்தையும் தடுத்தாலும், போலீஸ் மற்றும் அதிகாரிகளின் துணை இருந்தால், தேர்தல் கமிஷனுக்கே, "டிமிக்கி' கொடுத்து விடலாம் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் துவக்கியது. ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முதல், உயரதிகாரிகள் வரை, அந்த இடத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டுமென உத்தரவிட்டது.


சில மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், டி.ஜி.பி.,யே Œட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர், விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.அதிகாரிகள் மீது புகார் வந்தால் தான், இதுபோன்ற நடவடிக்கைகள் முன்பு எடுக்கப்படும். ஆனால், புகார் இல்லாமலேயே, அவர்கள் மீது சந்தேகமோ, முந்தைய தேர்தல்களில் நடவடிக்கையோ எடுக்கப்பட்டிருந்தாலே, இம்முறை இடமாற்றம் செய்துவிடுவது என்ற நடைமுறையை தேர்தல் கமிஷன் கடைபிடிக்கத் துவங்கியுள்ளது. இதன் காரணமாகவே, உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி., விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.


முந்தைய தேர்தலின் போதும், உளவுத் துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த சிவனாண்டி மாற்றப்பட்ட போதிலும், அவருக்கு மேல் உயரதிகாரிகள் அந்த பிரிவில் இருந்தனர். தற்போது, உயரதிகாரிகளை மாற்றியதால், அதற்குக் கீழ் நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு பயம் வந்துவிட்டது. இதனால், பாரபட்சமின்றி, தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி செயல்படத் துவங்கியுள்ளனர்.மதுரை மாவட்ட கலெக்டர் தன்னை நிர்பந்திப்பதாக, தொகுதி தேர்தல் அதிகாரியே புகார் தெரிவித்தார். இதையடுத்து, தொகுதி தேர்தல் அதிகாரியை அப்பணியில் இருந்து தேர்தல் கமிஷன் விடுவித்தது. இப்படி எல்லாம் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுப்பதால், அதன் மீது மக்களிடையே மதிப்பு கூடியுள்ளது.அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை, "கதாநாயகி, கதாநாயகன்' என்று கூறிவந்தாலும், இந்த தேர்தலைப் பொறுத்தவரை உண்மையான, "கதாநாயகன்' தேர்தல் கமிஷன் தான்.