Friday, April 8, 2011

ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள் : அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு

ஊழலை எதிர்த்து உண்ணாவிரதமிருக்கும் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நாடு முழுவதும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்ட மக்கள் ஊழலுக்கு எதிராக திரள ஆரம்பித்துள்ளனர். இந்த திடீர் எழுச்சி, மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே, மூன்றாவது நாளாக தனது உண்ணாவிரதத்தை டில்லியில் தொடர்ந்து வருகிறார். ஜந்தர் மந்தர் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு, அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் உள்ள இந்தியர்களும் அவர் போராட்டத்துக்கு ஆதரவு தருகின்றனர். ஹசாரேக்கு குவிகிற ஆதரவை கண்டு, நேற்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் அரசு சார்பில் பேச முன்வந்தார். ஹசாரே சார்பில் சுவாமி அக்னிவேஷ், அமைச்சர் கபில் சிபலை சந்தித்து பேசினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

"லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம் பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும். அரசில் நடக்கும் ஊழல்கள் பெருகி விட்டன.எனவே, மசோதா தயாரிப்பு குழுவில் 50 சதவீதம் பேர், பொதுமக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்' என்பது ஹசாரே தரப்பு கோரிக்கை. இதற்கு மத்திய அரசு சார்பில் பேசிய அமைச்சர் கபில் சிபல் மறுப்பு தெரிவிக்கவில்லை. காரணம் திரும்ப திரும்ப அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் சட்டவரையறை மற்றும் முடிவுகள் குறிப்பிட்ட விஷயத்தை முன்னிறுத்தாமல் அதை நீர்த்து போக செய்யும் என்ற கருத்தில் பேச்சு நடத்திய அக்னிவேஷ் உறுதிபட தெரிவித்தார்.



அடுத்து, இந்த மசோதா தயாரிப்பு குழுவுக்கு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைவராக இருப்பார் என்று அரசு தரப்பு கூறியது. அதற்கு, கூடவே கூடாது என, மக்கள் சார்பில் உள்ள பொதுக்குழு மறுப்பு தெரிவித்தது. மேலும், ஹசாரே தான் அந்த குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டுமென்றும் பொதுக்குழு வலியுறுத்தியது. ஆனால், ஹசாரே கூட லோக்பால் வரைவு மசோதா உருவாக்கும் குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். பிறகு லோக்பால் மசோதாவை, வரும் ஜூன் 20ம் தேதிக்கு முன்பாக தயாரித்து முடித்து, வரும் மழைக்கால கூட்டத்தொடரிலேயே பார்லிமென்டில் தாக்கல் செய்திட வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு கபில் சிபல், "மே மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. அதனால், கால அவகாசம் இல்லை என்றும், மே 13ம் தேதி வரை லோக்பால் மசோதாவை தொடவே முடியாது' என்றார்.


இதற்கு பதிலாக அக்னிவேஷ் "சட்டசபை தேர்தலை காட்டி லோக்பால் மசோதாவை தள்ளிப்போட அரசு முயற்சிக்கிறது. அதற்கு இடம் தர முடியாது. லோக்பால் மசோதாவை விரைந்து தயாரித்து தாக்கல் செய்தால் தான் ஆதரவு தருவோம். ஓட்டுப் போடுவோம் என, இம்மாநில மக்கள் உறுதியுடன் கிளர்ந்து எழுந்து நிற்க வேண்டும். அப்போது தான் அரசியல்வாதிகளுக்கு அறிவு வரும்' என கூற, பொதுக்குழு அதை ஆமோதித்தது. அதேபோல ஹசாரே தான் தலைவராக இருக்க வேண்டும் என, இந்த இயக்கத்தின் பொதுக்குழு வலியுறுத்தியது. ஹசாரே உண்ணாவிரதப் பந்தலில் உள்ளவர்களே பொதுக்குழுவாக கருதப்படுவதால், அரசு அதை ஏற்கவில்லை என்றும், மீண்டும் அக்னிவேஷுடன் பேச கபில் சிபல் காத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இறுதியாக பேசிய அன்னா ஹசாரே, "நமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படாதவரையில் நான் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன். உறுதியுடன் தொடருவேன்' என்று மட்டும் கூறினார்.


"அர்த்தமில்லாத பேச்சுக்கள் பயனில்லை': அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ஜந்தர் மந்தர் பகுதி முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடந்த இருநாட்களில் அவர் எடை 1.5 கிலோ குறைந்திருக்கிறது. சிறிது ரத்த அழுத்தம் கூடியிருக்கிறது. ஆனால், அழுத்தம் திருத்தமாக அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை அவர் நிருபர்களிடம் கூறினார்.


ஹசாரே கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். அதை தட்டிக் கழிக்கவில்லை. அதேசமயம் அதிகார மையத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா அல்லது பிரதமர் மன்மோகன் சிங் என்றால் சரி. முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத கமிட்டிகளிடம் பேசி என்ன பயன்? அமைச்சரவைக் குழு என்கிறார்கள். அவர்களா முடிவு எடுக்கின்றனர்? லோக்பால் மசோதா கொண்டு வரவில்லை என்றால், அது மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க வழியாகும். நான் ஒன்றும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தூண்டுதலில் இதை மேற்கொள்ளவில்லை. சமுதாயத்திற்கு, கடந்த 35 ஆண்டுகளாக நான் தொண்டாற்றுகிறேன். நான் என் வீட்டிற்கே சென்றது கிடையாது. எனக்கு மூன்று சகோதரர்கள். அவர்கள் குழந்தைகளின் பெயரும் எனக்கு தெரியாது. எனக்கு வங்கியில் பணம் ஏதும் கிடையாது. நான் பக்கத்தில் வைத்திருக்கும் ஜோல்னா பையில், ஏதாவது ஐந்து அல்லது 10 ரூபாயை போடச் சொல்லி மக்களிடம் கேட்பேன். அது தான் என் செலவுக்கு பணம். காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் எனக்கு என்ன வேலை? அவர்கள் இந்த நாட்டுக்கு அதிகம் பணியாற்றியதாக கூறினால், ஏன் நாட்டில் இன்று இவ்வளவு பிரச்னை? எல்லா கதவையும் அடைக்கும் போது சத்யாகிரகம் தவிர வேறு வழி இல்லை. பொதுவாக என் மேடையில் அரசியல்வாதிகளை ஏற்றுவதில்லை. காரணம் அதில் அவர்கள் பயன் பெற முயற்சிப்பர். இவ்வாறு ஹசாரே கூறினார். ஹசாரேயின் உடல்நிலையை, டாக்டர்கள் அவ்வப்போது கண்காணித்த வண்ணம் உள்ளனர்.


பிரதமர் அவசர ஆலோசனை: ஹசாரே உண்ணாவிரதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சரவை சகாக்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அமைச்சர் கபில்சிபல் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.