Wednesday, April 6, 2011

மீனவர்கள் ஆவிகூட கருணாநிதியை மன்னிக்காது: விஜயகாந்த் ஆவேசம்

ஆர்.எஸ்.மங்கலம்: ""இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த மீனவர்களின் ஆவிகூட, கருணாநிதியை மன்னிக்காது,'' என, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் பிரசாரம் செய்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.

தே.மு.தி.க., வேட்பாளர் முஜிபுர் ரகுமானை ஆதரித்து, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானையில் அவர் பேசியதாவது:அமைச்சர் தங்கவேலன், குடிசை மாற்றுத் துறை தலைவராகத் தான் உள்ளார். அவர் அமைச்சரே இல்லை. ஒன்றுமே செய்யாமல், சொகுசுக்காக சைரன் காரில் வலம் வருகிறார். உள்துறை அமைச்சர் சிதம்பரம், எப்படி ஜெயித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயித்ததற்கு பெயர், "சிதம்பரம் ரகசியம்!'அழகிரி பாதுகாப்பை எடுத்ததால், அழகிரி, அழுதகிரியாக உள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. முந்தைய அ.தி.மு.க., காலத்தில், ஜெ., முதல்வராக இருந்தபோது, சென்னையைச் சுற்றி, 150 கி.மீ., தொலைவில் தண்ணீர் சப்ளை செய்து வந்தனர். ஆனால், தற்போது எத்தனையோ திட்டங்கள் இருந்தும், தண்ணீருக்காக மக்கள் தவிக்கின்றனர்.


மாறிவரும் காலங்களில், எத்தனையோ திட்டங்கள் இருந்தும், பள்ளிக் குழந்தைகள், மரத்தடியில் கல்வி கற்பது கேவலமாக உள்ளது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பெயரில், தனியார் மருத்துவமனைக்கு கிராம மக்களை அனுப்புகின்றனர். அந்த ரூபாயில், சிறிய சிகிச்சைக்கூட செய்ய முடியவில்லை.சிகிச்சைக்காக, ஸ்டாலின் லண்டன் செல்கிறார். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்னாச்சு? அதில் சிகிச்சை பெறுவதை விட்டு ஏன் லண்டன் செல்ல வேண்டும்?அவர் சிகிச்சைக்காக செல்லவில்லை; ரூபாய் நோட்டை மாற்ற செல்கிறார். கருணாநிதி, மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை; குடும்பத்திற்கு சேவை செய்யவே வந்துள்ளார். காங்., கூட்டணிக்கு, 63 சீட் கொடுத்ததின் ரகசியம் என்ன தெரியுமா? குடும்பத்தினரை கைது செய்யமாட்டார்கள் என்பதற்காக தான் . தேர்தல் முடிவுக்கு பின், குடும்பத்துடன் கைதாவது உறுதி.


தமிழர்களின் உணர்வை கச்சத்தீவு மூலம் தாரை வார்த்து கொடுத்தார். இலங்கை கடற்படையால், 550 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் ஆவிகூட, கருணாநிதியை மன்னிக்காது. எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சியில் கூட்டணி வைத்திருப்பது, பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமையும் என்ற பயத்தில், சில, "டிவி' களில், விஜயகாந்த் தப்பா பேசுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதும், மீண்டும் மீண்டும் காட்சிகளை போடுவதுமாக உள்ளனர்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.