Tuesday, March 1, 2011

மத்திய பட்ஜெட் பற்றி தலைவர்கள் கருத்து


முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கருத்து:மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்த பட்ஜெட் திட்டத்தை வகுத்துள்ளார். உலகளவில் பொருளாதார தேக்க நிலையின் பாதிப்பு இந்திய பொருளாதாரத்தை அதிகளவில் தாக்காத வகையில் பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் ஒரு சீரான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லக் கூடியதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. முதன்மைத் துறைகளில் முக்கியமான விவசாயத் துறையின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், விளைபொருட்களின் சேதாரத்தைக் குறைக்கவும், உணவுப் பதப்படுத்துவதை ஊக்குவிக்கவும், விவசாயப் பணிகளுக்கு கடனுதவி தடையின்றி கிடைக்கவும் பல்வேறு சிறப்பான திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசின் நெடுநாள் கோரிக்கையான, ஜாதி வாரி கணக்கெடுப்பை, வரும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை : உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சேவை வரி விதித்துள்ளதால், சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கும். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும், மின் உற்பத்தியைப் பெருக்கவும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.உணவு பணவீக்கம் அதிகரிப்பு, கறுப்பு பணம், ஊழல், தீவிரவாதம் என, நாடு பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. எரிபொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள மத்திய பொது பட்ஜெட்டில், சாமான்ய மக்களின் பிரச்னைகளுக்கான எந்த தீர்வும் இடம் பெறவில்லை.

தங்கபாலு: வரிகள் ஏதுமின்றி வரலாறு போற்றும் வகையில் மத்திய பட்ஜெட், நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டையும், ஏழைகளின் பொருளாதார வளர்ச்சியையும், மேன்மேலும் மேம்படுத்தும் வகையில் உள்ளது.இரண்டாவது பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில், விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு வளம் சேர்க்கும் அபரிமிதமான திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி உதவிக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது, சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் நீடிக்கும் என்பதையே வலியுறுத்துவதாக பட்ஜெட் உள்ளது. நேர்முக வரியை 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு குறைத்து, மறைமுக வரிகளை 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது. இந்திய அரசு, பண முதலைகளின் பக்கம் தான் என்று நிரூபிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது.விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், லஞ்ச ஊழல் போன்ற சமுதாய பிரச்னைகளுக்கு எத்தகைய திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.கடந்த ஆண்டு பட்ஜெட்டின் நகல்

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:விலைவாசி உயர்வுக்கு காரணமான, இணையதள வர்த்தகம், முன்பேர வர்த்தகம் மற்றும் சேவை வரி குறித்து பட்ஜெட்டில் மறு ஆய்வு செய்யப்படவில்லை.விவசாயக் கடனை திரும்பிச் செலுத்தினால், 3 சதவீத வட்டி குறைப்பு என்பது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது. சுகாதாரத் துறைக்கு 5 சதவீதம் சேவை வரி விதித்திருப்பது, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும்.கடந்த ஆண்டு பட்ஜெட்டின் நகலைப் போல் உள்ள மத்திய பொது பட்ஜெட், மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

பொருளாதார சவால்களை சந்திக்கும்: மன்மோகன் : நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார். பாராட்டுக்குரிய இந்த பட்ஜெட் மூலம் அனைத்து பொருளாதார சவால்களையும் சந்திக்க முடியும். விலைவாசி குறையவும், மொத்த நிதி பற்றாக்குறை அளவை குறைப்பதிலும் இந்த பட்ஜெட் வழிகாட்டுகிறது. இருந்தபோதும் சமூக நலத்துறைகள் மற்றும் விவசாயத்தில் காட்டும் அக்கறையின் மூலம் இதை சமாளிக்கலாம். கறுப்புப் பணத்தைக் கொண்டு வர புதிதாக, "பொது மன்னிப்பு திட்டங்கள்' கொண்டு வந்தால் பயன் தராது.

உள்துறை அமைச்சர் சிதம்பரம்: வருவாயை அதிகரிக்க வகை செய்யும் நல்ல பட்ஜெட். கூடுதல் நிதியை கல்வி, சுகாதாரம், பாதுகாப்புத் துறைக்கு பயன்படுத்த முடியும். பணவீக்கத்தைக் குறைக்கும் வழியையும் காட்டியிருக்கிறார். நடுநிலையான பட்ஜெட் சமர்ப்பித்துள்ள பிரணாப் முகர்ஜிக்கு பாராட்டுக்கள்.


மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல்: கல்வித் துறைக்கு 52 ஆயிரம் கோடி ரூபாயும், தொலைத்தொடர்புத் துறைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது, ஏழைகளுக்கான பட்ஜெட்.


விவசாய அமைச்சர் பவார்: இது, விவசாயிகளுக்கு நண்பனாக அமைந்த பட்ஜெட். விவசாயிக்கு 4 சதவீத வட்டியில் கடன் கிடைக்க வழி செய்திருப்பது, நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட செயலாகும்.


பொதுமக்களுக்கு பலன் தராத பட்ஜெட்: பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ்: அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்ட ஒன்று தான் நியாயமானதாக உள்ளது. விலை உயர்வை குறைப்பதற்கோ, வேலைவாய்ப்பின்மையை போக்குவதற்கோ இந்த பட்ஜெட் வழி செய்யவில்லை. பொதுமக்களுக்கோ, பெண்களுக்கோ பலன் தராத இந்த பட்ஜெட், மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.


இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா: வசதி படைத்தவர்கள் மேலும் வசதியாகிக் கொண்டிருக்கும் வேளையில் கூடுதல் வரி, நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்த விதத்தில் பலனளிக்கும் என்பதை நிதியமைச்சர் விளக்கவில்லை. ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா: இந்த பட்ஜெட்டினால் எந்த சீர்திருத்தமும் ஏற்படாது.ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்: உரம், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு மானியம் அளித்துள்ளதால் இந்த பட்ஜெட் மகிழ்ச்சியளிக்கிறது.


பீகார் முதல்வர் நிதிஷ்: அதிருப்தி தரும் பட்ஜெட். தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சலுகையும், பின்தங்கிய மாநிலங்களுக்கு ஒன்றும் தரவில்லை. விலை உயர்வைக் கட்டுப்படுத்த வழிகாட்டவில்லை.


சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்: மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இளைஞர், வேலையற்றோர் ஆகியோருக்கு பட்ஜெட்டில் வழி காணோம்.