Wednesday, March 2, 2011

சோனியாவுடன் ஐவர் குழு சந்தித்து ஆலோசனை : பிடிவாதத்தை தளர்த்த முடிவு?


தி.மு.க.,வுடனான தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை ஐவர் குழுவிடம் சோனியா நேற்று கேட்டறிந்தார். தமிழக சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடக்கவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டை உடனடியாக முடிக்க வேண்டிய நெருக்கடி காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.


காங்கிரஸ் தலைவர் சோனியாவை, நேற்று அவரது இல்லத்தில் காங்கிரஸ் ஐவர் குழு சந்தித்துப் பேசியது. இந்த சந்திப்பு அரை மணிநேரம் நீடித்தது.


இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., ஐவர் குழுவுடன், சென்னையில் நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விவரங்களை சோனியா கேட்டறிந்துள்ளார். பின்னர், அடுத்த கட்டமாக தி.மு.க.,வுடனான பேச்சுவார்த்தையை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே 90 தொகுதிகள் வரை கேட்கப்பட்ட நிலையில், தற்போது 78 தொகுதிகளையாவது கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியதை ஐவர் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால், 53 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு ஒதுக்க தி.மு.க., தயாராக உள்ளது. இதை மேலும் வலியுறுத்தி 60 இடங்கள் பெற்றுக் கொண்டு, தொகுதி உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற யோசனையும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. எனவே, இனியும் தொகுதி பங்கீட்டில் இழுபறியை ஏற்படுத்திக் கொண்டே செல்லாமல், சுமுக முடிவுக்கு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


நேற்று இரவு, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் வீட்டில் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, ஓரிரு நாட்களில் தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்யும் என்று தெரிகிறது.

நன்றி


தினமலர்