Saturday, March 5, 2011

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முறிந்தது : மத்திய அமைச்சரவையில் இருந்து விலகல்


சென்னை : மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் இருந்து மத்திய அரசிற்கு ஆதரவளிப்பது என்றும் தி.மு.க., உயர்மட்ட செயல்திட்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, ஒருங்கிணைப்பு குழு போன்ற நிபந்தனைகள் விதித்தது. இதனால் 3 முறை நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை தர முன்வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 63 இடங்களும், வேண்டிய தொகுதிகளும் தர வேண்டும் என கோரியது. இதற்கு தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பியது.


இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை விவரம் : சட்டசபை தேர்தலுக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணியில் தி.முக., ஈடுபட்டது.சோனியாவை நான் டில்லியில் சந்தித்த பின், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என, அறிவித்தேன். காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது, 2006ம் ஆண்டு தேர்தலில், போட்டியிட்ட விவரங்கள் தி.மு.க., சார்பில் எடுத்துக் கூறப்பட்டது.

தி.மு.க., - காங்கிரஸ் - பா.ம.க., மீண்டும் உறவு கொண்டுள்ள நிலையில், அந்த கட்சிகள் போட்டியிட்ட இடங்களைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மார்க்சிஸ்ட் கமயூ., இந்திய கம்யூ., போட்டியிட்ட 23 இடங்களை புதிதாக சேர்த்துள்ள விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் போக, மீதமுள்ள இடங்களை தி.மு.க., - காங்கிரஸ் பகிர்ந்து கொள்ளலாம் என பேசப்பட்டது.

அவ்வாறு கணக்கிட்ட போது, காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன. அந்த இடங்களை அதிகமாக்க வேண்டும் என்ற காரணத்தால், 51 இடங்கள் 53 என்றாகி பின், 55 என்றாகி, 58 என்றாகி கடைசியாக 60 இடங்கள் என்று குலாம் நபி ஆசாத் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதை மேலிடத்தில் தெரிவித்து விட்டு உறுதி செய்வதாகக் கூறினார். ஆனால், அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு, இன்று (நேற்று) இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 63 சீட்கள் ஒதுக்க வேண்டும் என்றும், கேட்கும் தொகுதிகள் அனைத்தையும் தரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

காங்கிரசிற்கு 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட்பதும், அவர்கள் கேட்கும் இடங்களையெல்லாம் கொடுக்க வேண்டும் என கேட்பதும் முறைதானா என்பதை, அந்த கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து இன்று மாலையில் நடக்கவுள்ள தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழுவில் உரிய முடிவு எடுக்கப்படும். என கூறியிருந்தார்.


மத்திய அமைச்சரவையில் விலகல் : இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தி.மு.க., ‌உயர்மட்ட செயல்திட்ட குழு கூட்டம் சென்னையில் கூடியது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னை அடிப்படையில் மத்திய அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க விரும்பவில்‌லை என்பது தெளிவாகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 60 தொகுதிகளை தர முன்வந்த போதும் 63 தொகுதிகள் கேட்பது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி ‌எழுப்பியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே சென்றதாகவும், போட்டியிடும் தொகுதிகளை தாங்களே முடிவு செய்து ‌கொள்வோம் எனவும், ஒப்பந்தத்தில் தொகுதிகளை பற்றி குறிப்பட‌ வேண்டும் என நிபந்தனை விதித்ததாகவும் தி.மு.க., கூறியுள்ளது. தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்படுத்தியது ஆச்சர்யம் அளிப்பதாகவும் தி.மு.க., கூறியுள்ளது. இதனையடுத்து மத்தியில் தி.மு.க., சார்பில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்..


பிரச்னைகளை உருவாக்க தெரியும்: மும்பையில் ஒரு விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சரிடம் தி.மு.க., கூட்ணி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில்; அரசியல் உறவில் சில நேரங்களில் பிரச்னை என்பது வருவது இயற்கையே. அதே நேரத்தில் பிரச்னையை உருவாக்கவும், தீர்க்கவும் காங்கிரசுக்கு தெரியும் . தி.மு.க.,வுடனான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விடும் என்றார்.

நன்றி


தினமலர்