Monday, March 14, 2011

சென்னையில் போட்டியிட அஞ்சும் தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள்

"சென்னையில் பெரும்பாலான தொகுதிகள் தி.மு.க., வுக்கு சாதகமாக இல்லை' என, உளவுப் பிரிவு மூலம் தெரிந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சென்னையில் போட்டியிடுவதைத் தவிர்த்து, தங்களுக்கு சாதகமான தொகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிடும் முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.


தி.மு.க., தலைவர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியை விட்டுக் கொடுத்து விட்டு, தனது சொந்த மாவட்டமான திருவாரூரில் போட்டியிட ஏற்பாடுகள் ரகசியமாக நடக்கின்றன.


அதே போன்று, துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் அன்பழகன், காங்., கைவசம் வைத்துள்ள நாகை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதியைத் தேர்வு செய்துள்ளாராம். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் உறவினர் ஒருவர் அங்கு சேர்மனாக இருப்பதால், அவரது ஆதரவோடு அந்தத் தொகுதியில் எளிமையாக ஜெயித்து விடலாம் என, பன்னீர்செல்வம் ஆலோசனை கூறி யுள்ளார்.

துணை முதல்வர் ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, பாளையங்கோட்டை தொகுதி பக்கம் போய்விடலாம் என திட்டமிட்டுள்ளார்.

ஆற்காடு வீராசாமி சென்னை புறநகர்குதியில் இருந்து செங்கல்பட்டு தொகுதியைத் தேர்வு செய்து வைத்துள்ளார்.

இப்படி தி.மு.க., வின் மூத்த தலைகள் சென்னையை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதற்கு காரணம், சென்னையில் தி.மு.க., கவுன்சிலர்களின் அடாவடி அதிகரித்து, மக்கள் எரிச்சலில் இருப்பதால், பாதகமாகி விடுமோ என்ற அச்சமே காரணம் என கூறப்படுகிறது.