Saturday, March 19, 2011

அ.தி.மு.க., கூட்டணியில் திடீர் திருப்பம் : அனைவரையும் சமாதானப்படுத்தினார் ஜெ.,



அ.தி.மு.க., கூட்டணியில், கடந்த இரு நாட்களாக பெரும் பரபரப்பும், சலசலப்பும் நடந்து வந்த நிலையில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. தொகுதி ஒதுக்கீட்டில், கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரையும் ஜெயலலிதா நேரடியாக சமாதானப்படுத்தினார். அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் உடன்பாடு ஏற்பட்டது.


அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு 41 இடங்கள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலை, அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவிடம் அளித்திருந்தனர். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது தங்கள் வசம் உள்ள தொகுதிகளை மீண்டும் கேட்டிருந்தனர்.இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், கடந்த 16ம் தேதி மாலை திடீரென 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இது, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தே.மு.தி.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர் பார்த்த பல தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதை அறிந்ததும், அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.


சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். உடனே, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் ஆகியோர், நேற்று முன்தினம் தே.மு.தி.க., அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்தை சந்தித்து பேசினர். இதனால், தே.மு.தி.க., தலைமையில், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மூன்றாவது அணி ஏற்படப்போவதாக தகவல்கள் பரவின. ஆனால், இக்கருத்தை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மறுத்தனர்.இரண்டாவது நாளாக நேற்றும், காலையில் இருந்து அ.தி.மு.க., கூட்டணியில் பரபரப்பு தொடர்ந்தது. எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்று ஒதுக்காத நிலையில், தன்னிச்சையாக அ.தி.மு.க., 160 தொகுதிகளை அறிவித்துவிட்ட நிலையில், அக்கட்சி கொடுக்கும் தொகுதிகளை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்த நிலையில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது.


அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினர்களான ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், கம்யூனிஸ்ட் மற்றும் தே.மு.தி.க., தலைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை, ஜெயலலிதாவிற்கு தெரிவித்ததும், அடுத்தகட்ட முன்னேற்றம் ஏற்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர், பிற்பகலில் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலையில், தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகிய அனைவரும், அடுத்தடுத்து ஜெயலலிதாவை சந்தித்தனர்.


கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஜெயலலிதா சமாதானப்படுத்தியதை அடுத்து, அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு நாட்களாக நடந்துவந்த பரபரப்பும் முடிவுக்கு வந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஜெ.,வை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது, கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அ.தி.மு.க.,வில் யாரோ சிலர் ஏற்படுத்திய குழப்பத்தை, ஜெயலலிதா நேரடியாக தலையிட்டு சரிசெய்ததால்அ.தி.மு.க.,வினர் உற்சாகமடைந்துள்ளனர். அ.தி.மு.க., இறுதியாக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என தெரிகிறது.


கூட்டணி கட்சிகளுக்கு விரும்பிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்தார் ஜெ., : அ.தி.மு.க., கூட்டணியில், கூட்டணிக் கட்சிகள் விரும்பிய தொகுதிகளை ஜெயலலிதா நேற்று ஒதுக்கீடு செய்தார்.அ.தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நேற்று மாலை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அதையடுத்து, அவர்கள் விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. குடியரசு கட்சிக்கு கே.வி.குப்பம், சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு தென்காசி, நாங்குனேரி ஆகிய தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கொங்கு இளைஞர் பேரவை கட்சிக்கு பரமத்தி வேலூர் தொகுதியும், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சம்பந்தபட்ட கட்சிகளின் தலைவர்கள், தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு : அ.தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு:


1. பென்னாகரம்
2. திருத்துறைப்பூண்டி (தனி)
3. புதுக்கோட்டை
4. வால்பாறை (தனி)
5.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
6. சிவகங்கை
7. தளி
8. குடியாத்தம் (தனி)
9. பவானிசாகர் (தனி)
10. குன்னூர்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மாகம்யூக்கு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு:சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ., வீட்டில் நடந்த 11 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மா.கம்யூ., போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டன.அதன்படி திண்டுக்கல் , அரூர் ,சிதம்பரம் கீழவேளூர் (தனி),பெரம்பூர் (தனி), விக்கிரவாண்டி ,விளவங்கோடு, மதுரை தெற்கு, பெரியகுளம், திருப்பூர் தெற்கு, மதுரவயல், பாளையங்கோட்டை ஆகியன என முடிவு செய்யப்பட்டிருப்பதாக மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்ர் தெரிவித்தார்.


கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை(தனி) தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், இ.கம்யூ.,கட்சிகளுக்கான தொகுதிகளும் முடிவு செய்யப்பட்ட நிலையில் தே.மு.தி.க.,சார்பில் இன்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.


அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் சமரசம்: மணிக்கு மணி நிலவரம் : காலை 11 மணிக்கு, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர், இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினர் சென்ற பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது.
*மதியம் 1 மணி: போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா இல்லத்திற்கு, தொகுதி பங்கீட்டு குழுவினர் வந்தனர்.
*மதியம் 2 மணி: தே.மு.தி.க., தொகுதி பங்கீடு குழுவினர், ஓட்டலுக்கு வந்தனர். அவர்களிடம், நீண்ட நேரம் அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர், தொகுதி அடையாளம் காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
*மதியம் 2.40 மணி: ஜெயலலிதா இல்லத்தில் இருந்து அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், பாலகங்கா ஆகிய நான்கு பேர் தங்களது காரில் புறப்பட்டு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
*மாலை 3.05 மணி: அ.தி.மு.க., தலைமை அலுவகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி ஆகிய இருவரும் வந்தனர்.
*மாலை 3.30 மணி: அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன், இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்தனர்.
*மாலை 3.35 மணி: நிருபர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் மகேந்திரன் பேட்டி அளித்தார்.
*மாலை 3.40 மணி: ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்கு சென்றனர்.
*5.30 மணி: அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைவர் சேதுராமன், பொதுச் செயலர் இசக்கிமுத்து ஆகியோர் ஜெயலலிதா வீட்டிற்கு வந்தனர்.
*மாலை 5.35 மணி: இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன், ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 5.40 மணி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., ஆகியோர் ஜெயலலிதா வீட்டிற்கு வந்தனர்.
*மாலை 6.30 மணி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 6.40 மணி: மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 6.43 மணி: கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 6.55 மணி: சரத்குமார் வெளியே வந்தார்.
*மாலை 6.57 மணி: தனியரசு வெளியே வந்தார்.
*மாலை 7 மணி: சேதுராமன் வெளியே வந்தார்.
*மாலை 7 மணி: தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலர் சுதீஷ் ஆகியோர், ஜெயலலிதா வீட்டிற்கு உள்ளே சென்றனர்.
* மாலை 7:50 மணி: அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கதிரவன், ஜெயலலிதா வீட்டிற்கு சென்றார்.



பிடித்தால் ஓட்டு போடவும்