கரூர்: ""மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கொள்ளையில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகள் கம்பி எண்ணுவார்கள்,'' என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.
கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கரூரில் நேற்று பகல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போது நடக்கும் தேர்தல், வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல. தமிழக மக்களை விடுதலை பெற வைக்கும் தேர்தல். விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, விலைவாசி உயர காரணமாக இருந்தார். அரிசி, பருப்பு விலையேற்றம், டீசல் மற்றும் பெட்ரோல் விலையேற்றத்துக்கு மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்தார். கடந்த ஓராண்டில் மட்டும் ஒன்பது முறை பெட்ரோல் விலையேற்றப்பட்டு, 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் மணல் கொள்ளை மட்டும் அமோகமாக நடக்கிறது. ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கருணாநிதி குடும்பத்துக்கு செல்கிறது. கிரானைட் விற்பனையில் 80 ஆயிரம் கோடி என , நாட்டை கொள்ளை அடிக்கின்றனர். ஐந்தாண்டுக்கு முன் மணல் லோடுக்கு, 2,500 ரூபாய் என, விற்பனையானது. தற்போது, 13 ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. 150 ரூபாய்க்கு விற்பனையான சிமென்ட் விலை தற்போது, 280 ரூபாய். மூன்று ரூபாய்க்கு விற்பனையான செங்கல், ஆறு ரூபாய் என்றாகி விட்டது. மக்கள் கனவில் தான் இனி வீடு கட்ட வேண்டும். மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. ஆனால், மின்வெட்டு அதிகரித்துள்ளது. விவசாயம், தொழிற்சாலை மற்றும் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு குறைந்து போனது.
தமிழகத்தின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்றாகிவிட்டது. அதே சமயம் "ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஊழலில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, மத்திய அரசு இதழில் வெளியிட கருணாநிதியால் முடியவில்லை. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. மத்திய அரசில் அங்கம் வகித்தும் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வக்கில்லை.
ஏழை மக்கள் நிலம் கருணாநிதி குடும்பத்தினரால் அபகரிக்கப்பட்டு, அதிக விலைக்கு பணக்கார முதலாளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கரூர் மாவட்ட பிரச்னையான மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கொள்ளையில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகள் கம்பி எண்ணுவர். மின்வெட்டு அடியோடு நிறுத்தப்படும். சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும். விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்படும். அடிப்படை தேவை பூர்த்தி செய்யப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். பகல் 2.25 மணிக்கு பேச துவங்கிய ஜெயலலிதா, 2.55 மணிக்கு முடித்தார்.