Sunday, March 27, 2011

கதாநாயக தேர்தல் அறிக்கைக்கு சவால் விடும் மின்வெட்டு வில்லன்

தி.மு.க., அரசு கடந்த 2008 செப்., 1ம் தேதி அறிமுகம் செய்த, "மின் தடை' கதாநாயகனிடம் சிக்கி, நான்கு ஆண்டுகளாக மக்கள் திண்டாடும் நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் அறிமுகம் செய்துள்ள தேர்தல் கதாநாயகி, மின் வாரிய அதிகாரிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் அனல், புனல், காற்றாலை மின் உற்பத்தி அமைப்புகளையும் கொண்டு, 10 ஆயிரத்து 214 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். மின் உற்பத்தியை விட மின் நுகர்வு அதிகரித்ததால் பற்றாக்குறையை சமாளிக்க வாரியம், 2008 செப்., 1 முதல் 2 மணி நேர மின் தடையை நடைமுறைப்படுத்தியது. இதுவரை புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் உற்பத்தி துவங்கவில்லை. ஐந்தாண்டுகளில் தமிழக அரசு, 41 லட்சத்து 28 ஆயிரம் இலவச கலர், "டிவி'க்களை வினியோகம் செய்துள்ளது. மாநிலம் முழுவதும், 18 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. 2011 டிசம்பருக்குள் கூடு தலாக, 50 ஆயிரம் விவசாய இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. குடிசை வீடுகள், விவசாயத்துக்கு வழங்கும் இலவச மின்சாரத்தால், தேவையை விட உபரியாக மின்சாரம் உபயோகிக்கப்படுகிறது. அதனால், தமிழகத்தின் மின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. மூன்று மாதங்களுக்கு முன், 9,500 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை, தற்போது, கோடை துவங்கி விட்டதால், 11 ஆயிரத்து 300 முதல், 11 ஆயிரத்து 500 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது. பற்றாக்குறை சமாளிக்க பெரும்பாலான இடங்களில் மூன்று மணி நேரம், முதல் நான்கரை மணி நேரம் வரை மின் தடை அமல்படுத்தப்படுகிறது.


கோடை காலம் என்பதால், வெளி மாநிலங்களிலும் தேவையான மின்சாரம் பெற முடியவில்லை. அதை சமாளிக்க, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திடீர், திடீரென மின் தடை செய்யப்படுகிறது. நெய்வேலி பிரிவு 2, ராமகுண்டம் பிரிவு 2 உள்ளிட்ட சில மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மின் பங்கீட்டில் இருந்து கூடுதலாக, 1,000 மெகா வாட் மின்சாரம் பெற வாரியம் நடவடிக்கை எடுக்கிறது. எனவே, மார்ச் 25 முதல் மின் வினியோகம் சீராகும் என, வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை 11 ஆயிரத்து 500 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளதால், குறைந்த பட்சம் 2 மணி நேர மின் தடை தொடரும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு கதாநாயகி என கூறும் தேர்தல் அறிக்கையில், "மிக்சி, கிரைண்டர்' வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்கினால், மின் தேவை மேலும் அதிகரிக்கும். பெரும்பாலான குடும்பத்தினர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும் காலை, மதியம், இரவு குறிப்பிட்ட நேரத்தில் தான் மிக்சி, கிரைண்டரை உபயோகிப்பர் என்பதால், பீக்ஹவர் நேரத்தில் மின் தேவை மேலும் உயரும் நிலை உருவாகும். தேர்தல், "கதாநாயகி' யால், மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்பதால், மின் வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.


விவசாயிகள் விரக்தி: தேர்தல் நேரத்தில் கூட, ஒரு நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மட்டுமே விவசாய கிணறுகளுக்கு மும்முனை (த்ரீ பேஸ்) மின்சாரம் வழங்குவதால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தினமும் நகர்ப்புறங்களில் மூன்று மணி நேரமும், கிராமப் புறங்களில் 5 மணி நேரமும் மின் தடை ஏற்படும் என, மீண்டும் மின் வாரியம் அறிவித்தது. இந்நிலையில், விவசாயிகளுக்கு பகல் நேரத்தில் 6 மணி நேரமும், இரவு நேரத்தில் 4 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் கடந்த ஒரு மாதமாக மும்முனை மின்சாரம் பாதியாகக் குறைக்கப்பட்டது.


விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் வழங்காததால், கடன் வாங்கி பயிர் செய்துள்ள நெல், வேர்கடலை, கரும்பு, சவுக்கு மற்றும் பூக்கள் போன்ற பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருகின்றன. விவசாய கிணறுகளுக்கு பகல் நேரத்தில் 2 மணி நேரம், இரவு நேரத்தில் 2 மணி நேரம் என, நான்கு மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்குகின்றனர். சீரான மின்சாரம் வழங்கக் கோரி விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், எந்தவித பதிலும் பயனும் இல்லை. வெறுப்படைந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர், ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் தங்கள் முடிவை தெரிவிக்க உள்ளனர்.