Wednesday, March 30, 2011

அனுதாபம் மூலம் ஆட்சியை தக்கவைக்க கருணாநிதி சதித்திட்டம்: ஜெயலலிதா


திருவாரூர் : ""அனுதாபம் மூலம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கருணாநிதி சதித்திட்டம் தீட்டுகிறார்,'' என, திருவாரூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெ., பேசினார்.


திருவாரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா பேசியதாவது:எகிப்தில் வெடித்த மக்கள் புரட்சியைப்போல, கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு எதிராக நீங்கள் எல்லாம் எழுச்சியுடன் கூடியிருக்கிறீர்கள். கருணாநிதி, தமிழர்களை வஞ்சித்தவர்; கச்சத்தீவை தாரை வார்த்தவர், மீனவர்கள் தாக்கப்படுவதை தட்டிக் கேட்காதவர், நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்தவர், லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக்கொடுத்தவர்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் தலைக்குனிவை ஏற்படுத்தியவர்.


இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தவர், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர், "2ஜி' மூலம் கொள்ளையடித்த பணம் 1.76 லட்சம் கோடி ரூபாய். இதை முதலீடு செய்து சம்பாதித்த பணம் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.உதாரணத்திற்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை வைத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவால், பெரம்பலூர் மாவட்டத்தில் 1,000 ஏக்கருக்கு மேல் வாங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களிடமிருந்து ஏக்கர் ஒன்று 60 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, சில மாதங்களில் பெரிய கம்பெனிகளுக்கு ஏக்கர் ஒன்று 18 லட்சம் வீதம் விற்கப்பட்டுள்ளது. ஆறு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலம் 180 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


ஒரு மாவட்டத்தில், ஒரு பகுதியில் மட்டும் நிலம் வாங்கி விற்கப்பட்ட வகையில் 174 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இதே நிலை தான். பெரம்பலூரில் வெறும் 60 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலத்தை விற்ற மக்களால், தற்போது ஒரு கிரவுண்டு நிலம் கூட வாங்க முடியவில்லை. தற்போதையை விலைவாசி உயர்வு என்பது இயற்கையானது அல்ல. கருணாநிதி குடும்பத்தினரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது.அனைத்து அரசு திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. 1971-76 வரை கருணாநிதி முதல்வராக இருந்த போது, வீராணம் ஊழலில் உயிரை இழந்தவர் கான்ட்ராக்டர் சத்தியநாராயணரெட்டி. 1989-91ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தபோது அவரிடம் நெருக்கமாக இருந்த டி.ஜி.பி., துரை மர்மமாக இறந்தார்.


கடந்த 1996-2001ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது மேம்பால ஊழல் காரணமாக, சென்னை ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். இந்த முறை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக சாதிக் பாட்சா உயிர் பறிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பது கருணாநிதி குடும்பம். <பலியாவதோ உங்களில் ஒருவர். தன் மக்களுக்காக வருமானத்தை ஈட்டும் கருணாநிதி, ஆட்சி அதிகாரம் போய்விடுமோ என்று பயந்து தமிழக மக்களுக்காக தன்னை தேர்ந்தெடுக்கமாறு பேசி வருகிறார். தமிழகத்தின் எதிர்கால தலைமுறையினர் வாழ்க்கை பாதுகாப்பாகவும், பிரகாசமாகவும் இருக்க நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஓட்டுப்போடுவதற்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க., வெற்றி உறுதிப்படுத்தி வருகிறது. எப்படியாவது தக்க வைத்துக்கெள்ள வேண்டும் என்பதற்காக கடைசி கட்டமாக கபட நாடகமாட முயற்சித்து வருகிறார். இதன்படி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு அனுதாப ஓட்டுக்ளை பெறுவது, அல்லது மகள் கனிமொழியை யாரோ ஒருவர் தாக்கியதாக நாடகமாடி அதன் மூலம் அனுதாபத்தை பெறுவது, இல்லையென்றால் வன்முறையை கட்டவிழ்த்து விடப்போவதாக தகவல்கள் வருகின்றன. கூட்டணிக்கட்சிகள் வன்முறையில் இறங்காமல் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு <ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


அ.தி.மு.க., வேட்பாளர்கள் சீர்காழி சக்தி, பூம்புகார் பவுன்ராஜ், நாகப்பட்டினம் ஜெயபால், வேதாரண்யம் காமராஜ் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும், மயிலாடுதுறை தே.மு.தி.க., வேட்பாளர் அருள்செல்வனுக்கு முரசு சின்னத்திலும், கீழ்வேலூர் மா.கம்யூ., வேட்பாளர் மகாலிங்கத்திற்கு அரிவாள் சுத்தி நட்சத்திரம் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


திருவாரூரில் பேசியதையே புவனகிரி மற்றும் கடலூரில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெ., பேசினார். கடலூரில் உள்ள பிரச்னைகள் குறித்தும், புவனகிரி பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்தும் அவர் பேசியதாவது:ரயில்வே சுரங்கப்பாதை: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கடலூர் லாரன்ஸ் சாலை ரயில்வே சுரங்கப்பாதை திட்டமும், பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்கப்படும். கடலூர் துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு, மீனவ மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். கடலூர் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், புறவழிச்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கென்று தனியாக தொழில்நுட்ப கல்லூரியும், பட்டய கல்லூரியும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இதேபோன்று குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பிரச்னைகளையும் நான் அறிவேன். அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நிரந்தர வெள்ள தடுப்பணை: புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதியில் என்.எல்.சி.,க்கு இடம் கொடுத்தவர்களின் பிரச்னையை அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைப்போம். புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் வெள்ள பாதிப்பை தடுக்க வெள்ளாற்றின் கரைகள் பலப்படுத்தப்படும். வெள்ளாற்று வழியாக கடல் நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணையும், நிரந்தர வெள்ள தடுப்பணை கட்டப்படும்.காவனூர் - கள்ளிப்பாடிக்கு இடையே வெள்ளாற்றிலும், தேவன்குடி - புத்தூர் இடையே மணிமுத்தாற்றில் பாலம் கட்டப்படும். சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை நிர்வாக சீர்கேட்டிற்கு நிரந்தர தீர்வு காணப்படும். வீராணம் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்படும். இதேபோன்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி பகுதிகளில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.