Friday, March 11, 2011

காங்., - தி.மு.க., கபட நாடகம்: ஜெயலலிதா கடும் தாக்கு

சென்னை: "காங்கிரஸ் - தி.மு.க., நடத்தும் கபட நாடகத்தை, மக்கள் புரிந்து கொண்டால் மட்டும் போதாது; ஓட்டளிக்க வேண்டும்' என, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கபட நாடகம் நடந்து முடிந்தாகி விட்டது. இறுதியாக, குட்டு வெளிப்பட்டு விட்டது. அனைவருக்கும் தெரியும் வண்ணம் உண்மை வெளிவந்து விட்டது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் மூலம் கிடைத்த பணத்தை, தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட தி.மு.க., - காங்கிரஸ் தங்கள் வேறுபாட்டை போக்கி, தமிழக சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளன. அவ்விரு கட்சிகளுக்கும் இடையே, கடந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள், ஊடகங்களுக்கும், இரு கட்சித் தொண்டர்களுக்கும் வியப்பை அளித்திருக்கலாம். தொகுதி எண்ணிக்கை தொடர்பாக, கருணாநிதி அதிருப்தி தெரிவித்தார். பின், மத்திய அரசில் இருந்து தன் கட்சி அமைச்சர்கள் விலகிக் கொள்வதாக மிரட்டினார். ராஜினாமா கடிதங்கள் அளிக்க தி.மு.க., மத்திய அமைச்சர்கள் டில்லி சென்றனர். ராஜினாமா கடிதங்களோ அவர்களின் சட்டைப் பைகளில் இருந்து வெளிவரவில்லை. இதற்கு பதில், மீண்டும் இணைந்து செயல்படும் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஊடகங்களும், மக்களும் ஒரு வாரத்திற்கு, "ஸ்பெக்ட்ரம்' விசாரணை, விலைவாசி உள்ளிட்ட மற்ற பிரச்னைகளையும் மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுதான் கருணாநிதியின் தந்திரம்.


இந்த கபட நாடகம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. மத்திய அமைச்சரவை, 2009ல் அமைக்கப்படும் போதே இது போன்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம். பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்து, கட்சி எம்.பி.,க்களுடன் சென்னைக்கு திரும்பினார் கருணாநிதி. அவரது கபட நாடகம் பலனை தந்தது. வளமான இலாகாக்கள் கிடைத்தன. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், காவிரியில் உரிய பங்கு கிடைக்காத போதும், முல்லைப் பெரியாறில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்த கேரளா மறுத்த போதும், பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு திரும்ப திரும்ப உயர்த்திய போதும், தமிழக மீனவர்கள், நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டபோதும், வறுமையில் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட போதும், மத்திய அரசில் இருந்து விலகப் போகிறோம் என கருணாநிதி மிரட்டவில்லை. வழக்கம் போல் கடிதங்களை அனுப்பினார். வேண்டிய இலாகாக்கள் கிடைக்கவில்லை, தனக்கு நெருக்கமானவர்கள் சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்தப்படப் போகின்றனர் என்றால், வேறு காரணத்தைச் சொல்லி, மத்திய அரசை வீராப்புடன் மிரட்டுவார்.


இந்த கபட நாடகங்களை தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். இளம் தலைமுறையினர் எஸ்.எம்.எஸ்., மூலம் பரிமாறிக் கொள்ளும் செய்திகளும் இதைத்தான் பிரதிபலிக்கின்றன. வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் விலைமதிப்பற்ற ஓட்டினை செலுத்த முன்வர வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்றி, தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.