Friday, March 25, 2011

ஆட்சி அதிகாரத்திற்காக கூட்டணி அமைக்கவில்லை: விஜயகாந்த் பேச்சு


திருக்கோவிலூர்: ""நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை ரோட்டில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை 4.35 மணிக்கு தன் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: விஜயகாந்த் தெய்வத்தோடு, மக்களோடு கூட்டணி என்று சொல்லிவிட்டு அ.தி.மு.க., வோடு எப்படி கூட்டணி வைத்தார் என கேட்பார்கள். தெய்வத்தோடு, மக்களோடு இருக்கும் கூட்டணி எப்போதும் இருக்கும். நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்.


காங்., கட்சியில் ஐவர் குழு, அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு நடத்திக்கிட்டு இருக்கு. மனைவி, மகளை மேல் மாடியில சி.பி.ஐ., விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. கீழையும் பிரிச்சி மேயராங்க, மேலயும் பிரிச்சி மேயராங்க இதுதான் அரசியல். கருணாநிதியின் தாரக மந்திரம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி அரசை தெய்வம் காலி செய்யும். ராமதாஸ், கருணாநிதிக்கு பூஜ்யம் மார்க் போட்டார். இப்ப சொல்றார் கருணாநிதி ஹீரோவாம். இது கொள்கை கூட்டணி இல்லை, மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டணி. இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கு கொடுத்தனர். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவதாகக் கூறி நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை.


மதுரைக்கு வந்து பிரசாரம் பண்ணிப்பார் என்று அழகிரி கூறுகிறார். மதுரைக்கு பிரசாரத்துக்கு வருவேன். இந்த உருட்டல் மிரட்டல தான் உங்க ஆட்சி நடந்துட்டு இருக்கு அது என்கிட்ட செல்லாது. ரிஷிவந்தியம் தொகுதியில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டும் என்ற முடிவோடு தான் இங்கு போட்டியிடுகிறேன். ரிஷிவந்தியத்தை குஷிவந்தியமாக மாற்றுவதே எனது லட்சியம். ஏன் ரிஷிவந்தியத்தில் போட்டியிட முடிவு செய்தேன் என்பதை உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.


"தினமலர்' இதழில் வெளியான செய்திபடி, நான் கடந்த முறை போட்டியிட்ட விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் இருக்கிறார். ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார், சிவன் இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த விஜயகாந்த் இருப்பான். சிவன் எப்படி தனது மனைவிக்கு சரிபாதி அளித்தாரோ, அதேபோல் எனது மனைவிக்கு நானும் சமஉரிமை அளித்துள்ளேன். சிவன் அதர்மத்தை அழிப்பவர். அதனால், கருணாநிதியின் அதர்மத்தை அழிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றிக்கேட்டால் கடந்த ஆட்சியில் நீங்கள் செய்யவில்லையா என கேட்டு திசை திருப்புகிறார். கடந்த, 1967ல் காங்., கட்சிக்கு எதிராக ஏழைகள் அனைவரும் தேர்தலில் நிற்க வேண்டும் என அண்ணாதுரை வாய்ப்பளித்தார். இப்போது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தி.மு.க., வில் தேர்தலில் "சீட்' தரப்படும் அவலம் உள்ளது. நான் ஆறாவது முறையாக முதல்வராக வேண்டும் அதனால், எனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிடுவதாக கருணாநிதி கூறுகிறார். இத்தனை ஆண்டுகள் திருவாரூர் தெரியவில்லையா? கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் தொடருவார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த நன்மையும் அவர் செய்யமாட்டார். காங்., கட்சிக்கு 63 சீட் கொடுக்க முடியாது என்று கூறிய கருணாநிதி, அதன்பின் எப்படி ஒதுக்கினர். தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம், என்றார்.


"முரசு' சின்னம் கிடைக்குமா? ""தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது,'' என விருதுநகர் தே.மு.தி.க., வேட்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தே.மு.தி.க., கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 41 தொகுதிகளில் முரசு சின்னம் ஒதுக்கீடு செய்ய தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர்,'' என்றார். தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இது வரை தேர்தல் கமிஷன் தே.மு.தி.க., விற்கு "முரசு' சின்னம் ஒதுக்கீடு செய்ததாக தெரிவிக்கவில்லை. சின்னம் ஒதுக்கீடு செய்ய அவகாசம் இருப்பதால் இனிமேல் தேர்தல் கமிஷன் அனுமதிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.