Tuesday, March 29, 2011

தற்போது தேவை ஆட்சி மாற்றம்: விஜயகாந்த்

வேலூர்: ""அ.தி.மு.க., கூட்டணியில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனம் இருக்கிறது' என, வேலூரிலும், "தமிழக மக்களுக்கு தற்போது தேவை ஆட்சி மாற்றம்' என, திருவண்ணாமலையிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் விஜய்யை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: சென்னையில் இருந்து மதுரையில் குடியேறிய அழகிரி என்னை பார்த்து ரோஷக்காரன் என்றும், பின்னர் ரோஷம் இல்லாதவன் என்றும் கூறுகிறார். மதுரைக்காரனை பற்றி மதுரைக்காரனுக்கு தான் தெரியும். அவருக்கு தெரியாது. தி.மு.க., கூட்டணியிடம் பணபலம் மட்டுமே தான் உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே உள்ளது. பாலாற்றில் தண்ணீர் கொண்டுவர முயற்சி எடுக்காமல், மணல் கொள்ளை அடிக்கின்றனர். 1967ல் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் இருந்து அண்ணா துரை விரட்டியடித்தார். ஆனால், கருணாநிதி மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர முயற்சிக்கிறார். மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் என்னுடைய குறிக்கோள். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஏழைகள் வாழ முடியாது. ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் என்கிறார் கருணாநிதி. கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் இருப்பர் என்பதே உண்மை.


திருவண்ணாமலை மாவட்டம்: தமிழக மக்களுக்கு தற்போது உடனடி தேவை ஆட்சி மாற்றம் தான். திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேலு, ஆர்.எம்.வீரப்பன், ப.உ.சண்முகம் போன்றோரால், எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்தப்பட்டு எம்.எல்.ஏ., ஆனவர். இன்று அவர் எம்.ஜி.ஆர் போட்ட சத்துணவில் சத்து இல்லை என்று கூறுகிறார். இவரை சத்தில்லாதவராக மாற்ற அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். கருணாநிதி பிறந்த நாளுக்கு ஓட்டல்களில், 20 ரூபாய்க்கு சாப்பாடு போடுகிறேன் என்று திட்டம் கொண்டு வந்தாரே அது செயல்படுகிறதா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இலங்கையில் தமிழர் இனத்தை குழி தோண்டி புதைத்திட்டவர் கருணாநிதி, இவர் மாறி மாறி பேசி வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றுபவர். மக்களுக்கு தற்போது உடனடி தேவை ஆட்சி மாற்றம். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.


கூட்டணியை பிரிக்க சதி: திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க., வேட்பாளர் அருண் சுப்பிரமணியத்தை ஆதரித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: திருத்தணி முருகன் துணை வருவான் என்பது போல, தி.மு.க., ஆட்சி மாற்றம் செய்வதற்கும் இந்த முருகன் துணை நிற்பான். நான் அ.தி.மு.க., கூட்டணியில் சேரக்கூடாது என, பலர் எதிர்க்கட்சிகளிடம் 100 கோடி, 200 கோடி, 500 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டதாக வதந்தி பரப்பினர். மக்களிடம் கூட்டணி வைத்துள்ளேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தமிழக மக்களுக்காக தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தேன். இது எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி என்பதால் தான் கூட்டணி வைக்க சம்மதித்தேன். கூட்டணி வைத்துள்ளதால் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்க மாட்டேன். மக்களை ஒரு போதும் நான் ஏமாற்ற மாட்டேன். இந்த வெற்றிக் கூட்டணியில் பிரிவினை ஏற்படுத்துவதற்கு சிலர் சதி செய்கின்றனர். தொண்டர்கள் யாரும் இதில் சிக்காமல், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும், நமது கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.


தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் கருணாநிதிக்கு பிடிக்காது. தேர்தல் அதிகாரிகள் இன்னமும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். தன்னுடைய மகன், பேரன், மகள் ஆகிய உறவினர்களுக்கு மட்டும் பதவிகளை கொடுத்து குடும்ப அரசியல் நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதன் ரகசியம் காங்கிரஸ் கட்சியில் உள்ள 10 தலைவர்களுக்கு 6 தொகுதிகள் வீதமும், டில்லிக்கு 3 தொகுதிகள் வீதம் கட்சியை கூறுபோடுகின்றனர். ஏழைகளுக்கு தி.மு.க., ஆட்சியில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. விவசாயிகள் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும். தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.