"தே.மு.தி.க., சார்பில், தனித் தொகுதியில் நிற்கும் பெண் வேட்பாளரின் தேர்தல் செலவை, கட்சியே ஏற்கும் ' என, தே.மு.தி.க., கட்சித் தலைவர் விஜயகாந்த் உறுதியளித்துள்ளார்.
தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணல், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை மாவட்ட வாரியாக பிரித்து, மூன்று நாட்களில் நேர்காணல் முடிக்க திட்டமிடப்பட்டது.கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில், 79 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்தவர்களிடம், முதல் நாள் நேர்காணல், நேற்று நடந்தது.அதிகாலை முதலே, மனுதாரர்கள் தங்கள் தொண்டர் படையுடன், தே.மு.தி.க., கட்சி அலுவலகத்தில் கூடியிருந்தனர். அ.தி.மு.க., வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதால், நேர்காணலை சந்திக்க தொண்டர்கள் ஆர்வமுடன் காணப்பட்டனர்.கட்சித் தலைவர் விஜயகாந்த், மாநில இளைஞரணி செயலர் சுதீஷ் உட்பட பல பொறுப்பாளர்கள், விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணலை நடத்தினர். காலையில் தொடங்கி இரவு வரை நேர்காணல் நீடித்தது.இக்குழுவினர், விருப்ப மனுதார்களிடம் நேர்காணல் நடத்திய பின், இறுதியாக கட்சித் தலைவர் விஜயகாந்த் சில கேள்விகளைக் கேட்டார்; ஆலோசனைகளும் வழங்கியுள்ளார். தொகுதியில், கட்சியின் செல்வாக்கு, கூட்டணி பலம், தேர்தல் செலவு, வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்தே, விருப்ப மனுதாரர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
நேர்காணலில் பங்கு பெற்ற விருப்ப மனுதாரர்கள் கூறியதாவது:தொகுதியில் எத்தனை ஓட்டுகள் உள்ளன, எத்தனை "பூத்' கள் உள்ளன என்ற அடிப்படை கேள்விகளோடு தொடங்கி, வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய தயாராக இருக்கின்றனர்; தொகுதியில் வெற்றி வாய்ப்பு எந்தளவிற்கு உள்ளது உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டனர்.குறிப்பாக தனித் தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அவர்களது தேர்தல் செலவை கட்சியே ஏற்கும் என, தலைவர் விஜயகாந்த் உறுதியளித்துள்ளார். மேலும், தொகுதியில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளருக்காகவும், கூட்டணி வேட்பாளருக்காகவும் ஒருங்கிணைந்து தேர்தல் பணி செய்ய வேண்டும் என, ஆலோசனைகளையும் வழங்கினர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இன்று 11; நாளை 12:முதல் நாளன்று 10 மாவட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்று தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருச்சி, புதுச்சேரி, சென்னை ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 77 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, சிவகங்கை, கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளுக்கான நேர்காணல் நாளை நடைபெறுகிறது.