Friday, March 4, 2011

தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை இழுபறி: தி.மு.க.,வின் தந்திரத்தால் காங்கிரஸ் எரிச்சல்

தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தி.மு.க.,வின் உயர்நிலை செயற்குழுக் கூட்டம் நாளை அவசரமாகக் கூடுகிறது.


தொகுதிப் பங்கீட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த தி.மு.க., - காங்கிரஸ் இடையிலான ஐவர் குழுக்களின் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இரு கட்சித் தலைமையும் ஒருவருக்கொருவர் நேரடியாக தொகுதிப் பங்கீட்டை பேசித் தீர்க்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரசின் தமிழகப் பொறுப்பாளரும், அகில இந்திய பொதுச் செயலருமான குலாம் நபி ஆசாத், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து, நேற்று முன்தினம் இரவு ஒன்றரை மணி நேரம் பேச்சு நடத்தினார். அப்போது, தி.மு.க., தரப்பில் 53 தொகுதிகளில் ஆரம்பித்து 57 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு வழங்க முன்வந்தனர். காங்கிரஸ் தரப்பில் 65 தொகுதிகள் கேட்டனர். இதனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து, கட்சி மேலிடத்துடன் ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக கூறி, குலாம் நபி ஆசாத் நேற்று டில்லி புறப்பட்டு சென்று விட்டார். அப்போது, "இருதரப்பு பேச்சுவார்த்தை பற்றி கட்சி மேலிடத்தில் தெரிவித்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தையைத் துவங்குவோம்' என்று கூறினார்.


காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த, உயர்நிலை செயற்குழுக் கூட்டத்தை தி.மு.க., கூட்டியுள்ளது. நாளை (சனிக்கிழமை) கூடும் இக்கூட்டத்தில், காங்கிரசுடனான தொகுதிப் பங்கீடு முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்கி, விரைவில் முடிவெடுப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. காங்கிரசுடன் கூட்டணியைத் தொடர்வதா? தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளைக் கொண்டே தேர்தலைச் சந்திப்பதா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு, உயர்நிலை செயற்குழுக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால், இக்கூட்டம் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.


தி.மு.க., வசம் உள்ள தொகுதிகளைக் கொண்டு அதிகபட்சம் 60 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு கொடுக்கப்படும். அதற்கு மேல் என்பது சாத்தியமில்லை என்று தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. காங்கிரசைப் பொறுத்தவரை, அதிகபட்ச தொகுதிகளை கேட்பதால் தொகுதிப் பங்கீட்டு முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தெரிகிறது. இரு தலைமையும் நேருக்கு நேர் பேசிய பிறகும், ஒப்பந்தம் ஏற்படாமல் காலதாமதம் ஏற்பட்டு, மீண்டும் பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து வருவது, தொண்டர்கள் மத்தியில் இறுக்கத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு பின்னர் தான், தி.மு.க., - காங்கிரஸ் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை துவங்கும் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளுக்கும், தி.மு.க., தர தயாராக உள்ள தொகுதிகளுக்கும் இடையே சொற்ப எண்ணிக்கையிலேயே இருப்பதால், சுமுகமான பேச்சுக்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எத்தனை தொகுதிகளில் உடன்பாடு செய்து கொள்ளலாம் என்பது தற்போது காங்கிரஸ் கையில் தான் உள்ளது என்று தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.


காங்கிரசுக்கு 60 "சீட்' தி.மு.க., ஒதுக்கியது? "தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரசுக்கு, 60 தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., மேலிடம் சம்மதம் தெரிவித்துள்ளது' என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தி.மு.க., தலைவர் கருணாநிதியை, நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசிய, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், நேற்று டில்லி திரும்பி, கட்சித் தலைவர் சோனியாவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர், தி.மு.க., தலைவர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இப்பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் கட்சிக்கு, 60 தொகுதிகளை ஒதுக்க கருணாநிதி சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால், இரு கட்சிகள் இடையேயான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில், இரு கட்சிகளின் தலைவர்களும் இன்று கையெழுத்திடுகின்றனர். "65 தொகுதிகள் வேண்டும்' என, கேட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி இறங்கி வந்ததாலும், "53 தொகுதிகள் மட்டுமே தருவோம்' என, பிடிவாதம் செய்த தி.மு.க., முன்னேறி வந்ததாலும், 60 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இத்தகவலை, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது.