Sunday, March 6, 2011

அரசியல் கட்சிகளுக்கு அதிக புதிர் உள்ள தேர்தல்



தி.மு.க., - அ.தி.மு.க., உட்பட முக்கிய கட்சிகளுக்கு, வரும் சட்டசபை தேர்தல், வாழ்வா - சாவா என்ற நிலையில் அமைந்துள்ளது.வரும் சட்டசபை தேர்தல், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு, தங்களது நிலையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சில கட்சிகளின் எதிர்காலமே, இந்த தேர்தல் முடிவுகளை பொறுத்து தான் அமைய உள்ளன.

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இந்த தேர்தலில் தோல்வியடைந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில், கட்சி கலகலத்துவிடும் நிலை உள்ளது. ஏற்கனவே, கட்சியில் இருந்த பல முக்கிய பிரமுகர்கள் வெளியேறி, தி.மு.க.,வில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், தேர்தலில் தோல்வியடைந்தால், கட்சியினர் சோர்வடைந்து விடுவர்.

தி.மு.க.,வை பொறுத்தவரை, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் தொடர்ந்து செல்வாக்காக இருந்து வந்த தி.மு.க.,வுக்கு, ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக, மத்தியில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலில் தோல்வியடைந்தால், காங்கிரஸ் கட்சியிடம் செல்வாக்கை இழந்துவிடும்.அத்துடன், தி.மு.க., ஆட்சியின் மீதும், மத்திய அமைச்சர்கள் மீதும் அடுக்கடுக்கான புகார்கள் கிளப்பப்பட்டு, தி.மு.க., ஊழல் கட்சி என்ற முத்திரை வலுவாக குத்தப்படும். அதோடு, அ.தி.மு.க., ஆட்சி அமையும் பட்சத்தில், தி.மு.க.,வினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் துவக்கப்படும். இதனால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு தி.மு.க., ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்படும்.

பா.ம.க.,வை பொறுத்தவரை, 1996க்கு பிறகு தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த கட்சி, கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக, எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில் இருந்தது. தற்போது தி.மு.க., அணியில் 31 சீட்கள் கொடுத்து, அக்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, கூடுதல் தொகுதிகளில் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த முறை வென்ற எண்ணிக்கையை விட, இந்த முறை எண்ணிக்கை குறைந்தால், அக்கட்சிக்கு சரிவை ஏற்படுத்தும். பா.ம.க.,வுடன் கூட்டணி வைக்க, பெரிய கட்சிகள் தயங்கும் நிலை ஏற்படும். எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தாலும், அடுத்து அமையும் ஆட்சிக்கு, பா.ம.க.,வின் ஆதரவு அவசியம் என்ற நிலை ஏற்பட்டால் தான், அக்கட்சி தொடர்ந்து செல்வாக்கு பெற முடியும். லோக்சபா தேர்தல் போன்ற முடிவை மீண்டும் சந்தித்தால், அக்கட்சிக்கு மிகப்பெரிய சரிவு ஏற்படும்.


தே.மு.தி.க.,வை பொறுத்தவரை, கட்சி ஆரம்பித்து ஆறு ஆண்டுகள் தான் ஆனாலும், தனித்து நின்று தனக்கு செல்வாக்கு இருப்பதாக நிரூபித்துள்ளது. ஆனால், வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து, கவுரவமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்களை பெறாவிட்டால், கட்சிக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்.ஏற்கனவே, தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத் தேர்தல்களில், கட்சி நிர்வாகிகள் ஏராளமாக செலவு செய்துள்ளனர். இது தவிர, மாநாடு போன்றவற்றுக்கும் செலவு செய்துள்ளனர். இந்நிலையில், கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று தெரிந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செலவு செய்ய யாரும் முன்வர மாட்டர்.


காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, தொடர்ந்து அ.தி.மு.க., அல்லது தி.மு.க., ஆட்சியமைக்க உதவி வரும் கட்சி என்ற பெயர் உள்ளது. தற்போது மத்தியில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளதால், தமிழகத்தில் தன் நிலையை உயர்த்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.அதற்கு இந்த தேர்தல் சரியான சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகளை பெற்று, அடுத்து அமையும் ஆட்சிக்கு தங்களது ஆதரவு அவசியம் என்ற நிலையை உருவாக்க விரும்புகிறது. அவ்வாறு நடந்தால் தான், வரும் காலத்தில் காங்கிரசுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இருக்கும். இல்லாவிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தி.மு.க.,வை புகழ்ந்து தள்ள வேண்டிய கட்டாயம் இங்குள்ள காங்கிரசாருக்கு ஏற்படும்.எனவே, முக்கிய கட்சிகள் அனைத்துக்கும் வரும் தேர்தல் வாழ்வா; சாவா போராட்டமாகவே அமைந்துள்ளது.


இதில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் விதிவிலக்கு. கடந்த தேர்தலில் பெற்றதை விட ஒன்றிரண்டு தொகுதிகள் அதிகம் பெற்று, ஏதாவது ஒரு கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிப்பதை விட கம்யூனிஸ்டுகளுக்கு எந்த எதிர்கால திட்டமும் இல்லை. எனவே, வழக்கம் போலவே இக்கட்சியின் வளர்ச்சி இருக்கும்.