ஒருவர் பாக்கியில்லாமல், அத்தனை பேருடைய எதிர்பார்ப்பையும் தகர்த்தெறிந்து ஒரு முடிவு எடுக்க முடியுமென்றால், அது அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவால் தான் சாத்தியம்.
"நெடுநாள் பங்காளியான ம.தி.மு.க.,வுக்கு, கூட்டணியிலேயே இடம் வழங்கப்படவில்லை; தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட்கள், புதிய தமிழகம் என இதர கூட்டணிக் கட்சிகள் கேட்ட இடங்களில் எல்லாம், தனது வேட்பாளர்களை அ.தி.மு.க., களமிறக்கி உள்ளது. இதுதான், வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழியை உடைத்த கதை' என்பதாக, பெரும்பாலான அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
உண்மை அது தானா? நடுநிலையாக சிந்திக்கக் கூடிய, வடமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அ.தி.மு.க., பிரமுகர் கூறியதாவது: வலுவான கூட்டணி இருந்தால் வெற்றி சுலபமாகும் என்பதோ, தொகுதிகளைப் பறித்துக்கொண்டால், கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடையும் என்பதோ ஜெயலலிதா அறியாதது அல்ல. தெளிவான திட்டம் இல்லாமல் அவர் எதையும் செய்யக்கூடியவர் அல்ல. அ.தி.மு.க.,வின் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட விசுவாசியாக, வைகோ திகழ்ந்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், ம.தி.மு.க.,வுக்கு எங்கள் தலைமை கொடுப்பதாக அறிவித்த ஒன்பது தொகுதிகள் கூட, அவரது விசுவாசத்துக்காகக் கொடுக்கப்பட்டது தான். கடந்த ஆறு ஆண்டுகளில் ம.தி.மு.க., தேய்ந்துகொண்டே வந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006 தேர்தலில் வழங்கப்பட்ட 35 தொகுதிகளில் ஆறில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறிவிட்டனர். தவிரவும், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கின்றனர்.
இதேபோன்ற நிலைமை அ.தி.மு.க.,விலும் இருப்பதாகக் குற்றம்சாட்ட முடியும். ஆனால், எங்களிடமிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிர்தரப்பில் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. முத்துச்சாமி போன்ற பழைய ஜாம்பவான்கள் விலகிய பிறகு தான், கோவையில் பிரமாண்ட கூட்டத்தைத் திரட்டிக் காட்டினோம். தொடர்ந்து நடந்த பிரமாண்ட ஆர்ப்பாட்டங்களில் இருந்து, அ.தி.மு.க., இன்னமும் கட்டுக் குலையாமல் இருப்பதை உணர முடியும். கடைசியாக நடந்த பேச்சில், வைகோ 21 தொகுதிகள் கேட்டார். அவற்றையும் அவரே தேர்ந்தெடுப்பேன் என்றார். அவர் நல்ல மனிதர் என்பதும், நல்ல நண்பர் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. ஆனாலும், எங்களை பலியாக்கி அவரது கட்சியை வாழ வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தங்களுக்கு 234 தொகுதிகளில் எதைக் கொடுத்தாலும் போட்டியிட முடியும் எனக் கூறியிருந்தார். அதுவே உண்மையெனில், முக்கியமான தொகுதிகள் போய்விட்டது என கவலைப்படுவது எதற்காக? இரு கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் பொறுத்தவரை, அவை 2006ம் ஆண்டு தேர்தலில் எதிரணியில் இருந்தவை. அவர்கள் வென்ற தொகுதி எல்லாம், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பறிக்கப்பட்டவையே. கட்சித் தலைவர் என்ற முறையில், அ.தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா முன்னுரிமை கொடுப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.
தென்மாவட்டங்களில் அதிகமாக தேவர் சமுதாய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு புகார் எழுந்தது. கூட்டணியில் இருந்து கார்த்திக் கட்சி வெளியேறியதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக, எடுக்கப்பட்ட நடவடிக்கை அது. இவை எல்லாம் தாண்டி, குட்டிக் கட்சிகளை வளர்த்துவிடும் பணியில் ஒரு பெரிய கட்சி ஈடுபட வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல. குட்டிக் கட்சிகளிடம் உள்ள 9,000 ஓட்டு எங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பது உண்மை தான். ஆனால், 50 ஆயிரம் ஓட்டு உள்ள நாங்கள் அவர்களிடம் ஏன் செல்ல வேண்டும். கட்சியிலேயே சில முக்கிய புள்ளிகளுக்கு தொகுதி வழங்கப்படவில்லை. சில பேருக்கு, அவர்களது சொந்தத் தொகுதி மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. "வலுவான தொகுதியில் சாதாரண வேட்பாளர் கூட வெற்றி பெற்றுவிடுவார். வலுவான வேட்பாளர், சாதாரண தொகுதியில் கூட வெற்றி பெற்றுவிடுவார்' என்ற கணக்கு தான். அதுவும் தவிர, இந்தத் தேர்தலோடு முடிந்துபோவதில்லை அரசியல். அடுத்தடுத்து, உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல்கள் வரவுள்ளன. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து தான் இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் ஜெயலலிதா. இவ்வாறு அந்த அ.தி.மு.க., பிரமுகர் கூறினார்.
நன்றி
தினமலர்