சென்னை: அ.தி.மு.க., - தே.மு.தி.க., தொகுதிப் பங்கீடு குழுவினர்களின் பேச்சுவார்த்தை, போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா இல்லத்தில், நேற்று முன்தினம் விடிய விடிய நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு, தே.மு.தி.க., போட்டியிடும், 41 தொகுதி களுக்கும் உடன்பாடு ஏற்பட்டது.
அ.தி.மு.க., அணியில், தே.மு.தி.க.,வுக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தையில், இரு கட்சிகள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டது. கடந்த, 18ம் தேதி இரவு முழுவதும், போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இல்லத்தில், விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்தது.
அதில், 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 10 தொகுதிகள் அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு துவங்கியது. அ.தி.மு.க., தொகுதிப் பங்கீடு குழுவினர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், பாலகங்காவுடன் தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலர் சுதீஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை முடிந்தது. தொடர்ந்து, 13 மணி நேரத்திற்கு பின், தே.மு.தி.க., போட்டியிடும், 41 தொகுதிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டது.
பண்ருட்டி ராமச்சந்திரன், நிருபர்களிடம் கூறும்போது, "எங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 41 தொகுதிகள் அடையாளம் கண்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. இதை, எங்கள் கட்சித் தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்கு எடுத்துச் செல்வோம். அவர் சரிபார்த்து, அதன்படி இரு தலைவர்களும் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்' என்றார்.
பட்டியல் இன்று வெளியீடு: தே.மு.தி.க., தொகுதிப் பட்டியலுடன் வேட்பாளரையும் சேர்த்து வெளியிட அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, மாதவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், ரிஷிவந்தியம், வானூர், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, பென்னாகரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஆத்தூர், சேலம், செஞ்சி, ஏற்காடு, ஓமலூர், எடப்பாடி, குமாரபாளையம், பவானிசாகர், செய்யாறு, ஈரோடு மேற்கு, திருப்பூர் தெற்கு, பண்ருட்டி, நெய்வேலி, திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, திருப்பரங்குன்றம், அருப்புக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், அம்பாசமுத்திரம், ராதாபுரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், கொளத்தூர், அண்ணா
நகர், விருகம்பாக்கம், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளை தே.மு.தி.க., கேட்டிருந்தது.
இவ்வாறு, 45 தொகுதிகள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டு, அதில், 41 தொகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால், இதில் விக்கிரவாண்டி, திருப்பூர் தெற்கு, திண்டுக்கல், பென்னாகரம், பவானிசாகர் ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன.இறுதியாக தே.மு.தி.க., கேட்ட, 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீதமுள்ள 21 தொகுதிகளை அ.தி.மு.க., தலைமை தேர்வு செய்து கொடுத்துள்ளது. தே.மு.தி.க., தொகுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், கரிநாள் மற்றும் பிரதமை திதி என்பதால், வெளியிடப்படவில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்பதாலும், மனு தாக்கல் முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளதாலும், மாற்று வேட்பாளரை கடைசி நேரத்தில் தேர்வு செய்ய முடியாது என்பதாலும், தே.மு.தி.க., தொகுதிப் பட்டியலுடன், வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிட வாய்ப்புள்ளது.தே.மு.தி.க., தரப்பில் விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக தொகுதிகள் கேட்கப்பட்டதால் அதற்கு மாற்றாக சென்னையில் சில தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிடித்தால் ஒட்டு போடவும்