தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் தலைமை ஏற்படுத்தியுள்ள ஐவர் குழுவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்ட தகவல்களை காங்கிரஸ் டில்லி தலைமையுடன் பகிர்ந்து கொள்ள தி.மு.க., முடிவு செய்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போதும், தற்போது நடைபெறும் மத்திய ஆட்சிக்கும் தி.மு.க., சிறந்த நண்பனாகவே இருந்து வருகிறது. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., - ம.தி.மு.க., போன்றவை தி.மு.க.,வுடன் முரண்பாடு ஏற்பட்டு வெளியே சென்றபோதும், தி.மு.க., - காங்கிரஸ் உறவில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. இலங்கைப் பிரச்னையில் கடுமையான நெருக்கடி ஏற்பட்ட போதும், காங்கிரசுடன் விரிசல் ஏற்படாமல் தி.மு.க., பார்த்துக் கொண்டது. தமிழக சட்டசபை தேர்தலை காங்கிரசுடன் இணைந்து சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே தி.மு.க., இத்தகைய பொறுமையை கடைபிடித்து வந்தது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கியதும், இந்த போக்கில் மாறுதல் ஏற்பட்டு, விரிசல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
பொதுவாக, தமிழகத்தில் கூட்டணிக் கட்சியிடையே தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை ஏற்படும்போது, காங்கிரசின் தலைமை தலையிட்டு பிரச்னையைத் தீர்க்கும். ஆனால், இந்த முறை, பேச்சுவார்த்தையின் ஆரம்பம் முதலே, டில்லி காங்கிரஸ் தலைமை தலையிடும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. பேச்சுவார்த்தையில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தொகுதிகள் பற்றி குறிப்புகளுடன் பேசியதும், கூட்டணி அரசுக்கு அடிப்படையாக கருத்துக்களை வலியுறுத்தியதும், தி.மு.க., தரப்பில் இறுக்கம் அதிகமானதற்கு காரணம் என்று தெரிகிறது. மேலும், கடந்த வெள்ளிக் கிழமை அறிவாலயத்தில் நடந்த பேச்சுக்களில் முடிவு இழுபறியானதற்கு அடையாளமாக, அந்தக் கட்டடத்தில் தன் அறையில் அமர்ந்திருந்த முதல்வர் இக்குழுவினரைச் சந்திக்கவில்லை.
தற்போது, காங்கிரஸ் அதிகபட்சமாக போட்டியிடும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற தகவலை, கட்சித் தலைவர் சோனியா மற்றும் பொதுச் செயலர் ராகுலுக்கு தெரிவித்திருக்கின்றனர். இதுவரை தி.மு.க.,வுடன் பேசிய அணுகுமுறையில் இருந்து சற்று வேறுபாடாக சிதம்பரம் தலைமையிலான குழு வைக்கும் கோரிக்கைகள், தி.மு.க.,வுக்கு சற்று அதிருப்தியை தந்திருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியை விட்டு விட முடியாத நிலை உள்ளது.இனி மேலிடப் பிரதிநிதியாக குலாம் நபி ஆசாத் வரலாம் என்ற பேச்சு இருக்கிறது. அதேசமயம் டில்லி தலைமையோ, தி.மு.க., பிரதிநிதிகளை சந்திப்பதையே தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. டில்லியில் சோனியா அரசியல் ஆலோசகரை மட்டுமே டி.ஆர்.பாலு சந்திக்க முடிந்தது.
நன்றி
தினமலர்