ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 27 ஆண்டாக வீடுகளில் மின்இணைப்பு இல்லாத பரிதாப கிராமம் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சியில் உள்ளது முந்தல்முனை. 110 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதி ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தானத்திற்கு பாத்தியமானது. 1983ல் உருவான இக்கிராமம் 500க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது. இன்று வரை இப்பகுதியில் மின்சாரம் இல்லை. 1993ல் இருந்து மின்வசதி கேட்டு முறையிட தொடங்கிய இவர்களுக்கு , 1996ல் மீன்வளத்துறை சார்பில் சிறப்பு திட்டம் ஒன்றில் 11 மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கவில்லை. "வீட்டு ரசீது இருந்தால் மட்டுமே இணைப்பு தரமுடியும்,' என, மின்வாரியத்தினரும், "ஆரம்ப காலத்திலிருந்து தங்கியதற்கான பணத்தை கட்டினால் மட்டுமே ரசீது தரப்படும்,' என, தேவஸ்தான அதிகாரிகளும் கைவிரித்து விட்டனர். ஒரே நேரத்தில் குறிப்பிட்ட தொகையை செலுத்த முடியாத நிலையில், மின்சார கோரிக்கைக்கு அக்கிராமத்தினர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
கடந்த லோக்சபா தேர்தலில், ""இப்பகுதியின் வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தருவதாக,'' தி.மு.க.,வின் ரித்தீஷ்குமார் எம்.பி., வாக்குறுதி கொடுத்தார். வெற்றி பெற்ற அவரும் இன்று வரை கண்டுகொள்ளவில்லை. அரசு தரப்பில் அனைவருக்கும் இலவச "டிவி' வழங்கப்பட்டுள்ளது. அவற்றை உபயோகப்படுத்த முடியாத நிலையில், இடத்தை அடைக்கும் என்பதால், தெரு ஓரத்தில் "டிவி'க்களை அடுக்கி வைத்துள்ளனர். வீடு தவறாமல் சிம்னி விளக்கும், மாலை நேரத்தில் தெருவிளக்கு படிப்பும் தான் இக்கிராம மக்களின் வழக்கமான நடவடிக்கை.
ஊர் தலைவர் பொன்னுச்சாமி கூறியதாவது: மின்சாரத்தை பயன்படுத்தாமல் 27 ஆண்டுகள் கடந்து விட்டன. தேவஸ்தான அதிகாரிகளும், மின்வாரியத்தினரும் தொடர்ந்து வீம்பு பிடிப்பதால் எங்களுக்கு இனி மின்இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை, என்றார். ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான இணை ஆணையர் இளங்கோ கூறுகையில், ""முந்தல்முனை பகுதியினரின் கோரிக்கை குறித்து ஆணையாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார். ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் யதீந்திரன் கூறுகையில், ""நிலப்பிரச்னையில் இணைப்பு வழங்காமல் இருந்திருக்கலாம். சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி , தீர்வு காண முயற்சிப்போம்,'' என்றார்.
பிடித்தால் கீழே ஓட்டு போடவும்