Saturday, February 5, 2011

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: நீதிபதி பாட்டீல் அறிக்கை கூறுவது என்ன?


புதுடில்லி : "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, 2003ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பதவியில் இருந்த அனைத்து அரசுகளும் எடுத்த முடிவுகள் தவறானவை' என, நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான கமிட்டி தெரிவித்துள்ளது. முன்பு ஆட்சி செய்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு காலத்திலும் இதே நடைமுறை என்று குறிப்பிட்டிருப்பதோடு, ஆனால் 2007-2008ம் ஆண்டுகளில் அவர் அமைச்சரவை முடிவுகளை அப்படியே பின்பற்றவில்லை என்று கூறியுள்ளது.


"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்க நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷனை, மத்திய அரசு நியமித்தது. இந்த கமிஷன் சமீபத்தில் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, 2003ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பதவியில் இருந்து அனைத்து அரசுகளும் எடுத்த அனைத்து முடிவுகளும் தவறானவையே. முந்தைய அரசின் கொள்கைகளையே தான் பின்பற்றியதாக, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா கூறியுள்ளார். இதில், பிரச்னை என்னவெனில், முந்தைய அரசின் கொள்கைகளே தவறானவை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசமான அளவில் நடைபெற்றுள்ளது.


தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியில் இருந்த ஆண்டு முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவியில் இருந்த 2008 வரை விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை. ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை மற்றும் நிதி அமைச்சகத்தின் கருத்துக்களை தொலைத் தொடர்புத்துறை பின்பற்றவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இவை எல்லாம் நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள். நீதிபதி சிவராஜ் கமிட்டியின் அறிக்கை, இந்த மோசடி குறித்து விசாரித்துவரும் சி.பி.ஐ.,யின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.


மேலும் அவர், " ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஒளிவுமறைவற்ற தன்மை பின்பற்றப்படவில்லை என்பதில் அமைச்சர் ராஜா மட்டும் இன்றி 17 அதிகாரிகள் பெயரும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது' என்றார். ஆனால் அவர்கள் யார் யார் என்று பெயரை வெளியிடவில்லை. அந்த அறிக்கையில்," லைசென்ஸ் வழங்குவதில் கடைசி தேதி என்று கூறி ராஜா மேற்கொண்ட நடைமுறைகள் வழக்கத்தை மீறியவை, ஒளிவுமறைவற்ற தன்மை கொண்டவை அல்ல. மேலும், 2007-2008ல் மேற்கொள்ளப்பட்ட லைசென்ஸ் நடைமுறைகள் அமைச்சரவை எடுத்த முடிவை அனுசரிக்காதவை' என்று, குறிப்பிடப்பட்டிருக்கிறது.