Sunday, February 13, 2011
ரோஜா மலருக்கு வயசு ஆயிரம்
மலர்களிலேயே பெருமை மிக்க மலர் எது என்பதைக் குறித்து விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்குமிடையே சர்ச்சை ஏற்பட்டதாம். பிரம்மா தாமரைதான் சிறந்த மலரென்றும், விஷ்ணு ரோஜாதான் சிறந்த மலரென்றும் வாதிட்டுக் கொண்டிருந்தபோது, இமய மலைச்சாரலில் தென்பட்ட அழகிய ரோஜா மலர்களைக் கண்ட பிரம்மா, ரோஜாதான் சிறந்த மலர் என்பதை ஒப்புக் கொண்டாராம். இது ரோஜாவைக் குறித்து கூறப்படும் பெருமையான செவிவழிக்கதை.அந்த அளவுக்கு மலர்களின் ராணியாக ரோஜா புகழ் பெற்றதாக இன்றளவும் திகழ்கிறது. ரோஜா மலர்களின் அழகில் மயங்காதவர் எவரும் இல்லை.
ரோஜாக்களில் இந்திய ரோஜாக்களுக்குச் சர்வதேச அளவில் தனி மதிப்பே உள்ளது. கங்கை நதி தீரத்தில் காணப்படும் ரோஜா ரகம்தான், இந்திய ரோஜாவின் பூர்வீக ரகமாகும். இந்தியாவில் நெடுங்காலத்திற்கு முன்னரே ரோஜாக்கள் இருந்துள்ளன என்பது பாறைப் படிவங்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.ரோஜா ரகங்கள் இங்கிலாந்திலிருந்தும், ஐரோப்பாவிலிருந்துமே இனவிருத்தி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்திய ரோஜாக்களையும் இனவிருத்தி செய்து சர்வதேச அளவில் பிரபலப்படுத்த முடியுமென்ற நோக்கோடு செயல்பட்டுவருகின்றனர், தமிழகத்தில் கொடைக்கானலில் வசித்து வரும் இருவர்.அவர்கள், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பேத்தி கிரிஜாவும், அவரது கணவர் வீரராகவனும்தான். வீரராகவன், கடந்த 1952}ம் ஆண்டில் சென்னையில் வேளாண்மைத் துறை இயக்குநராக பதவி வகித்த என்.எஸ்.சிவராமனின் மகன் ஆவார். வீரராகவன் ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர்.கிரிஜாவும் வீரராகவனும்தான், இனவிருத்தி செய்யப்படும் இந்திய ரோஜாக்களின் வழிகாட்டிகள் என ரோஜா உலகில் பெருமையுடன் அழைக்கப்படுகின்றனர். உதகையில் அமைந்துள்ள அரசினர் ரோஜா பூங்கா கடந்த 1995}ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. தற்போது இப்பூங்காவில் சுமார் 3 ஆயிரம் ரகங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. இவற்றில் இந்திய பாரம்பரிய ரோஜாக்கள் இல்லை என்றிருந்த ஒரு குறையும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதற்காக பாரம்பரிய ரோஜா ரகங்களையும் உதகையில் நடவு செய்வதற்காக வந்திருந்த இத்தம்பதியினர் நம்மிடம் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். கிரிஜா வீரராகவன் கூறும்போது, ""மனிதன் தோன்றியதிலிருந்தே ரோஜாவுடன் கொஞ்சி குலாவியிருந்தாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆண்டுக்கு ஒரு முறையே மலரும் திடமான ஐரோப்பிய வகைகளையும், எப்போதும் மலரும் மென்மையான ஆசிய வகைகளையும் சேர்த்து புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட ரோஜாக்கள்தான் இன்று ஹைபிரிட் டீ, புளோரிபண்டா, கிராண்டிபோளோரா, கிளைம்பர், மினியேச்சர் மற்றும் பாலியான்தஸ் எனப் பல்வேறு ரகங்களிலான பெயர்களில் அழைக்கப்படுகின்றன.ரோஜா மலர்கள் அழகுக்கு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் வாய்ந்தவையாகும். ஆயுர்வேதத்தில் பல்வேறு மருந்துகளின் தயாரிப்பில் ரோஜாவும் இடம் பெறுகின்றது. காமசூத்திரத்தில் கூட ரோஜாக்களைக் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. சோமநாதபுரம் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் அக்கோவிலுக்கு தினந்தோறும் 100 ரோஜா மலர்களையும், 1,000 அரளி மலர்களையும் வழங்க வேண்டுமென்ற உத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ள தகவல் உள்ளது'' எனத் தெரிவித்தார்.வீரராகவன் தொடர்ந்தார், ""இந்திய ரோஜா ரகங்கள் பாரம்பரியப் பெருமை உள்ளவை. கடந்த 1952ம் ஆண்டில் குன்னூருக்கு வந்திருந்தபோது அங்கிருந்த பழமையான ரோஜா செடிகளில் பூத்திருந்த ரோஜா மலர்கள் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அதன்பின்னர் இந்தியப் பாரம்பரிய ரோஜா ரகங்களை இனவிருத்தி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டேன். நெல்லூரில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலத்தில் ஓய்வு நேரத்தில் புதிய ரக ரோஜாக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டேன்.இதுவரை 85}க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்களை உருவாக்கியுள்ளேன். இவற்றில் "கிளினோபில்லா' மற்றும் "பிராக்டியேட்டா' ஆகிய இரண்டு ரகங்கள் சர்வதேசப் புகழ் வாய்ந்தவையாகும்.இந்தியாவிலிருந்த புத்த மதத் துறவிகள் ரோஜா செடிகளைச் சீனாவுக்குக் கொண்டு சென்று வளர்த்ததாகக் குறிப்புகள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பாராம்பரியம் உள்ள ரோஜாச் செடிகள் சீனாவில் உள்ளன. அவை கொடைக்கானலிலும் உள்ளன. அதை பட்டுத் துணிகளில் ஒவியமாகவும் தீட்டி வைத்துள்ளனர். மாவீரன் அலெக்சாண்டர் தனது தேசிய மலராக ரோஜாவையே அறிவித்திருந்தார்.ரோஜா மலர்கள் உலகின் எப்பகுதியிலும் வளரக் கூடியவையாகும். மெரீனா கடற்கரையிலிருந்து, சைபீரிய பனி வரையிலும் வளரும். சூழலுக்கேற்ற ரகங்களைக் கண்டறிந்து நடவு செய்தால் ரோஜா மலர்களை எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம். இந்திய ரோஜா ரகங்கள் தானாக உருவாகுபவை. தற்போது ஹைபிரீட் ரோஜாக்களும் கலப்பின முறையிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன'' என்றார்.இத்தம்பதியினரைக் குறித்து அவர்களது நெருங்கிய நண்பரான கஸ்தூரிரங்கன் கூறுகையில், ""உலகெங்கிலுமுள்ள ரோஜா பூங்காக்களில் புதிய ரகங்களை நடவு செய்வதிலிருந்து, கருத்தரங்குகள் நடத்துவது வரை கிரிஜா-வீரராகவன் தம்பதியினரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே செயல்படுத்தப்படுகின்றன. இவர்களது முயற்சியால் ஆசியாவிலேயே மிகப்பெரிய ரோஜா பூங்காவான உதகையிலுள்ள அரசினர் ரோஜா பூங்காவில் விரைவில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய ரோஜா மலர்களும் பூத்து குலுங்குவது உறுதி!'' என்றார்.
Labels:
ரோஜா மலருக்கு வயசு ஆயிரம்